
பொள பொளன்னு பொழுது விடிஞ்ச பொழுதுல .
உளுத்தஞ்செடி புடுங்க மேற்கு வயலுல எறங்கி
புடுங்குன செடிகளப்
பத்துக்கூறாப்
பிரிச்சுவச்சுக் காத்திருப்பா.
காவக்கார
சின்னமுத்து
தன்ஒசர கம்பால
ஒவ்வொருக் கூறையும்
ஓங்கி ஓங்கி அடிச்சு
கூறுஒசரம் சோதிச்சு
அதிலிருந்து ஒதுக்கித்தள்ளிய
ஒத்தக்கூறக்கூலியக்
கட்டாக்கட்டி
வீட்டுக்குத் தூக்கிவர
நடுப்பகலாயிடும் .
டீத் தண்ணி மட்டும் குடிச்சிட்டு
உளுந்து புடுங்க
போன அம்மா
வீட்டுக்கு வந்து காலநீட்டிப் போட்டுக்கிட்டு
நீராகாரம்
குடிக்கும் அழகு
என்னையும் ஒரு வா வாங்க வைக்கும்.
முழங்கால்வர கட்டிய சேலமுந்தி காசுவாங்க
உன்ன சுத்திசுத்தி வந்த சுகமான ஞாபகம்
என்ன சுத்தி நிக்குதம்மா.
இன்று வாங்கும் பள்ளிக்கூட சம்பளத்தின்
சலவ நோட்டு மூஞ்சியில
முப்பது வருஷ
ஞாபகம்
கசங்கி கிடக்குதம்மா.
