அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை 169

ஆ.அமிர்தராஜ்

மழையும் முள்ளும்

இலைகளிலுள்ள மழைத்துளியெல்லாம்
இனிக்கிறது என்று
வண்ணத்துப் பூச்சி சொன்னது
முள் மரத்திடம்

இனிக்கிறதா?
உன்னை விடக்கூடாதென
தனக்குள் நினைத்தது
உச்சி முள்ளில் ஓணான் ஒன்று

தரையிலிருந்து எறும்புகள்
ஒட்டுக்கேட்டன

குண்டத்து நெருப்பால் தான் மழை என்றது
மலைமீதிருந்து ஒரு குரல்

காற்று வந்து மேலே கொண்டு சென்றது
படையலாய் இலைகளில் இனிப்பை

கிடைத்த முட்களால் கட்டி
மழையைப் புற்றுக்கிழுக்கப் பார்த்தன
வரிசையாய் எறும்புகள்

தப்பிவிட்ட வண்ணத்துப் பூச்சியை
தன் கனவில் ஓணான்
பதமாய் சுட்டுத் தின்றது

தியானத்தைத் தொடர
வண்ணத்துப் பூச்சி
திரும்பவும் வந்திறங்கியதும்
மெய்சிலிர்த்தது முள்மரம் (80
(1986)

பொற் கணம் – ஆ.அமிர்தராஜ் – விருட்சம் வெளியீடு – இப்போது இந்தப் புத்தகம் விற்பனைக்கு இல்லை