
சேமித்து வைத்த
உண்டியலின்
அடிக்காசுகளில்
ஒட்டியுள்ள
உலோகத் தூசிகளுடன்
உலா வருகின்றன
சில ஞாபகங்கள்.
சேமித்தக் காசுகளில்
சில செல்லாக்காசுகளாகி
சிரிக்கின்றன.
ஒவ்வொரு காசுகளிலும்
கொடுத்த மூஞ்சிகள்
பல்லிளிக்கின்றன.
இருப்பினும்
அடுத்தக்
காசு வாங்க
மானங்கெட்ட மனம்
கையேந்தி நிற்கிறது.
