அதிரன்/காட்சி

பூங்காவில் அவனுக்கு
எதிரே தோன்றியவரை
கண்டதும் மனம்
பதற ஆரம்பித்தது
அவர் தானே? என
கேள்வியும் கேட்கிறது.

அவரேதான்
இரண்டு முறை
திரும்பியும் பார்த்துக்
கொண்டது.

யார்?
ஏன்? எதற்கு?
அவரைப்பற்றி அப்படிச்
சொன்னார்கள்?

அவர் ஒரு வகையில்
அவனுக்கு
தூரத்துச் சொந்தமும் கூட

இரண்டாம் முறை
எதிரில் வந்த பொழுது
“எப்படியிருக்கிறீர்கள்?
நலமா ?”
“நீண்ட நாளாயிற்றே
உங்களைப் பார்த்து “
என்கிறான்

அவர் முன்பை விட
இளைத்திருந்தார்
உடல் சுருங்கி
வயதும் அதிகமானது
போல் ஒரு தோற்றம்

பதில் எதுவும்
சொல்லாததால்
கைகளை நீட்டி
நேசம் காண்பித்தான்

அவரும் பதிலுக்கு
கைகளை நீட்டினார்
குளிர் சாதனை பெட்டியிலிருந்து
வெளியில் எடுத்தது போல்
அத்தனை குளிர்ச்சி
அவரது உள்ளங் கையில்

அவன் கேள்விகளுக்கு
தலையை மட்டும்
ஆட்டிக் கொண்டே
மீண்டும் நடக்கத்
தொடங்கினார்…

நடந்ததை மனைவியிடம்
சொன்ன பொழுது
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்
மேசை டிராயரில் இருந்து
ஒரு கார்டை எடுத்துக்
காண்பித்தாள்
” உத்திரகிரியை பத்திரிகை “
என்ற தலைப்பின் கீழ்
அவரது புகைப்படம்.

ஒரு சிறிய அமைதிக்குப் பின்

கையில் டீ கப்புடன் வந்தவள்
நேற்று மாத்திரை போட
மறந்திட்டீங்களா ? …… என்றாள்