ரிபு முனிவருக்குத் தன் சீடன் நிதாகன் கர்ம காண்டத்திலிருந்து விடுபட்டு விட்டானா என்று அறிய ஆவல். அவன் இருக்குமிடம் சென்று என்ன செய்கிறான், என்ன பேசுகிறான் என்று பார்ப்பார். தேவைப்பட்டால் மாறு வேடத்திலும் சென்று பார்ப்பார்.
ஒருமுறை பட்டிக்காட்டான் போன்ற மாறுவேடத்தில் நிதாகனைச் சோதிக்கச் சென்றபோது அவன் ராஜா பவனி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மெதுவாக அவனை நோண்டினார்.
“சாமி, என்ன அது கூச்சல், கும்பல்?”
நிதாகன் (பட்டிக்காட்டானைப் பார்த்துவிட்டு சுரத்தில்லாமல்): “ராஜா பவனி வர்றார் அப்பா”
பட்டிக்காட்டான் : (தெரியாதது போல) யாருங்க அரசன்?
நிதாகன்: “அதோ யானை மேல உலா வர்றாரே”
பட்டிக்காட்டான் : (உற்றுப் பார்த்துவிட்டு) ஆமா, ஒரு பெரிய உருவம், ஒரு ஆள் வர்றாங்க. இதுல யானை யார், ராஜா யார்?”
நிதாகன்: (முனகுகிறான்) சரியான பட்டிக்காடு. (உரக்க) “மேலே ராஜா, கீழே யானை”
பட்டிக்காட்டான்: “சாமி, மேலேன்னா என்ன, கீழேன்னா என்ன?”
நிதாகன்: (பொறுமை இழந்து) “குனி சொல்றேன்”
பட்டிக்காட்டான் குனிகிறான். நிதாகன் அவனை அவமானப்படுத்த நினைத்து அவன் முதுகில் அமர்கிறான். “இப்ப நான் மேலே, நீ கீழே”
பட்டிக்காட்டான்: “ரொம்ப சந்தோசம். இன்னும் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க. நான், நீன்னு ஏதோ சொன்னீங்களே, அப்படின்னா என்ன?”
நிதாகனை செருப்பால் அறைந்தது போல் இருக்கிறது. வந்திருப்பது தம் குரு தான் என்று அடையாளம் கண்டு வேரறுந்த மரம் போல் அவர் காலடியில் சாய்கிறான்.
