
ராஜன் காய்கறி கடையில்
காத்திருக்கிறது
அந்த அன்னாசிப் பழம்
பைன் ஆப்பிள்
பைன் ஆப்பிள்
…வாங்கலாம்
பைன் ஆப்பிள்…
என்ற குழந்தையின் குரல் ஈர்த்தது
காலையில்
குழந்தையின் தந்தை
காய்கள் ஏதேதோ
தேர்வு செய்து
தட்டுகளில் நிரப்பி
நகர்த்துகிறார்
எடை போட
குழந்தைக்குச் சொல்கிறார்
வாங்கிக்கலாம்
வாங்கிக்கலாம்
என்று வெற்று சமாதானம்
வாங்கிய ஆப்பிள் ஆரஞ்சு தீரட்டும் என்று தாழ்த்திய குரலில் சொன்னபடி!
கொய்யா வெள்ளரி
எடுத்துக் கொண்டு
நான் முன்னேறுகையில்
போய் விட்டு இருந்தனர் இருவரும்
எடை போடும் இடத்தில்
இரண்டு அன்னாசி!
எனக்கு முன் நிற்பவர்
மெல்லப் புன்னகைக்கிறார்
பேத்தி வந்திருக்கிறாள்
அயல் நாட்டில் இருந்து
இந்தப் பயல் குரல் கேட்டதில்
அவளுக்கும் பிடிக்குமே என்று
நான் எடுத்தேன்
அவர்களும் வாங்குவார்களோ என்று இரண்டு அன்னாசி
ஒன்றை மட்டும் எடை போட்டுக் கொடுப்பா என்றார்!
தனித்துத்
தவித்து இருந்த
அன்னாசியை
ஆற்றுப் படுத்தி
எடுத்து வைத்தேன்
அதன் பழைய இடத்தில்!

ஒரு காட்சி எப்படி கவிதையாக மாறும் என்பதற்கு நல்ல உதாரணம். அப்பாக்களின் பொருளாதார நிலைமை குழந்தைகளுக்குப் புரிவதில்லை.. அம்மாவின் பொய்கள் போல அப்பாவும் சொல்ல வேண்டியிருக்கிறது பொய்கள்.
தனித்து தவித்து இருந்த அன்னாசியை ஆற்றுப் படுத்திய இடத்தில் கவிதை உயரே செல்கிறது.