
–
கையில் தீச்சட்டி
இடுப்பில்
வேப்பிலைச் சாமி
வேகம் வந்து
ஆடுகையில் உன் மேல்
வந்த சாமி எச்சாமியோ!
நேர்த்திக்கடன் கேட்டு
கீழ்கருப்பன் வந்தானோ!
வரண்ட வயக்காட்டின்
துயர் காட்ட
பச்சைக்குதிரை மேல்
வாவென்று அழைத்தாயோ
பச்சையப்பனை!
விண் மேல்
வீற்றிருக்கும்
கருப்பண்ண சாமியிடம்
மழைநீரை
ஏன் தடுத்து
வைத்தாயென
பொங்கியெழுந்தாயோ!
காவல் மறந்த
ஊர் காவல் வீரனை
வாள் வீச்சிற்கழைந்நாயோ!
ஊர் கன்னி பெண்களை
காத்து நிற்கும்
கருத்தம்மாள்
காக்க தவறியதேன்
எனும் கோபத்தில்
கண் நிவந்து போனாயோ
உருட்டு மீசை கடவுளிடம்
இன்னும் என்னென்ன
முறையிட்டாய்!
முறையிட்டு முறையிட்டு
முகம் வேர்த்து
உடல் வேர்த்து
ஆடியபின்னும்
அடங்கலையோ
உன் சாமி !
அடங்கிப் போக சாமிக்கு
இன்னும் என்ன வேணும்னு
கேட்டுச் சொல்லு!
ஊர் ஊடி எல்லோரும்
சாமியின் கனல் தணிக்க
காத்திருக்கோம்!
குடம் குடமாய்
சாமி மேல் தண்ணீர்
ஊற்றியும் தணியாத
நெருப்பு அது என்ன
நெருப்போ!
அது
ஆதிப் பழம்பாழ் அக்னி!
அதில் ஆகுதியான
மனித வேட்கைகளின்
வெப்பமுறையும்
அக்னி குஞ்சுகளின்
வீரியம் அணைக்கும்
வழி யாதோ!
தாயே நீயே சொல்!
03-01-2024
