
அழகியசிங்கரின் என்பா..
பசியென்று கேட்டோர்க்குச் சுடச்சுடச் சோறு
பால்வடியும் மழலைக்குப் பாசமாய் முத்தம்
படித்த நூல் எதுவாயினும் பாராட்டு
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்.
(2)
எந்த வாசலிலோ அழகுக் கோலம்
எந்தக் கோயிலிலோ கையேந்திப் பிரசாதம்
வேப்ப மரத்தடியில் அயர்ந்த உறக்கம்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்.
(3)
சட்டென்று எழுதும் நல்ல கவிதை
பேருந்து பயணத்தில் சன்னல் இருக்கை
நல்ல மழையில் சூடான கடலை
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்.
(4)
விதைத்து வளர்ந்த செடியில் வெண்டை
உப்பும் மிளகாயும் போர்த்திய மாங்காய்
திடிரென்று நினைத்து ஓட்டும் சைக்கிள்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்.
(5)
டீக்கடையில் டீகுடிப்போர் கையும் உதடும்
இரண்டு இட்லிக்கு நான்கு சட்னி
உலகத்தை மறந்த சாலை விலங்குகள்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
