தொகுப்பு ஸ்ரீதர் சாமா/தெய்வம் வேறு, கடவுள் வேறு


(ஸ்ரீ சிவன் சாரின் ஏணிப்படிகளில் மாந்தர்கள் நூலிலிருந்து)

பாபங்களுக்கு நிவர்த்தி கிடையாது. மாசு, தப்பு, தவறு, அறியாத் தவறு, தோஷம் போன்றவைகளுக்கு பரிகாரங்கள் உண்டு. ஒரு பெரியாருக்கு உன்னால் புரியப்பட்ட உதவிக்கு அவர் நன்றி செலுத்தாமலிருந்து அவர் நன்றி செலுத்தவில்லையே என்று நீயும் நினைத்துவிட்டால் அப்போது உனக்கு தோஷமேற்படுகிறது. கூடாதவைகளை செயலாற்றினாலும் அல்லாத அன்றாட ஏனைய வாழ்க்கை விதிகளில் முறைதவறி நடந்து கொண்டாலும் மரியாதை தவறினாலும் தோஷமேற்படுகிறது. தோஷம், தவறு போன்றவைகளுக்கான பரிகாரம் என்பது விவேகிகளுக்கும் அவர்களுக்கு மேற்பட்டவர்களுக்கும் விதிக்கப்பட்டவை ஆகும். பரிகாரம் செய்து கொள்பவர்கள் அவைகளுக்கேற்ற மற்றைய ஜீவராசிகளின் பிறவிகளிலிருந்து விலக்கேற்றுகிறார்கள். புனித நதிகளில் நீராடிவிட்டு மந்த்ர பூர்வமாக ப்ராயச்சித்தத்தை ஏற்கும் அவர்கள் நிவர்த்தியை ஏற்றுவிடுகிறார்கள். பொதுவாக, முற்றின விவேகிகளும் அவர்களுக்கு மேம்பட்டவர்களும் தவறுகளையோ எவ்வித கூடாதவைகளையோ புரியப்போவதில்லை. எனினும் எத்தகைய கூடாத செயல் நேர்ந்துவிட்டாலும் அது அவர்களுக்கு விதிவிலக்காகும். தன்னுடைய நாட்டில் ஒருவன் ஒரு குற்றம் புரிந்துவிட்டால், சிறந்த விவேகியாக விளங்கும் அந்த நாட்டின் வேந்தன் பிராயச்சித்தம் பொருட்டு தன் உயிரை நீக்கிக்கொள்வதுண்டு. இத்தகையவன் தன் நிலையில் கடக்க வேண்டிய சில படிகளைக் கிடைக்காமலேயே முற்றிய விவேகியின் நிலைக்கு உயர்த்தப்பட்டுவிடுகிறான்.

தெய்வங்கள் வேறு. கடவுள் என்பது வேறு. தெய்வங்கள் கடவுளிலிருந்து தோன்றியவைகளாகும். கடவுள் என்பது ஒன்று தான். ஆனால் ஒவ்வொரு புதிய மதம் தோன்றும் போதும் புதிய கடவுள்கள் வந்துவிடுகிறார்கள். நாம் தெய்வங்களை கடவுள் என்று கூறும் வழக்கத்தை சில சமயங்களில் ஏற்று வருகிறோம். அதனால் பரவாயில்லை. இதே விதமாக தவறாக நடந்து கொள்ளும் ஓர் முட்டாளை 'உனக்கு ஞானமில்லையா' என்றும் கோபித்துக்கொள்கிறோம்.