
மரம் ஒரு கதை சொல்லி
கதை கேட்டால் தான் உறங்கும்
அடைந்திருக்கும் பறவைகள்
ஒரு கிளையில் பிறக்கிறது
புதிய இலை
கருவிலிருந்து முளைக்கிறது
ஒரு சிசு
இலைக்கு தேவை ஊஞ்சலாட்டும் காற்றுத்தான்
ஆதி அந்தம் இல்லாத அநாதியாய்
ஆடும் பேரின்பம் லயத்தில்
மனிதனுக்குள் ஒரு உலகம்
எப்படியும் முளைத்து விடுகிறது
அதை தனதாக்கி கொள்கிறது
தோன்றிய மனது
முளைத்திருந்த சிறகுகள்
இப்போது காணாமல் போகின்றன
சருகுகளுக்கு துன்பமில்லை
காற்றில் சமாதி கொள்வதால்
இருளின் பெருந் துக்கம்
வாழ்வில் கவிந்து விடும்
கீழே விழுந்தால்
கட்டாந் தரை நிழலும் பயந்து நடுங்கும்
விடை பெறத் தெரியாத மனிதர்களைப் பார்த்து
புத்தன் சிரிக்கிறான்
மரத்தின் மேலிருந்து
