யாழினி முனுசாமி
I.
வல்லொற்று மிகுமா மிகாதா என்கிற குழப்பம் உள்ள சொற்களில் அகர ஈறு உள்ள பெயரெச்ச சொற்களும் ஒன்றாகும்.
‘அகர ஈறு’ என்பது நிலைமொழியாகிய முதல்சொல்லின் கடைசி எழுத்து ‘அ’ சேர்ந்துள்ள உயிர்மெய் எழுத்தாக இருப்பதைக் குறிக்கும்.
எடுத்துக்காட்டு:
‘பார்த்த’
பார்த்த என்பதில் உள்ள கடைசி எழுத்தான ‘த’வில் ‘அ’வும் சேர்ந்து இருப்பதை ‘அகர ஈறு’ என்பர்.
த்+அ = த.
பார்த்த + படம் = பார்த்த படம்
என்று வல்லொற்று மிகாமல் எழுத வேண்டும்.
பார்த்தப் படம்
என்று வல்லொற்று மிகுத்து எழுதுவது தவறாகும்.
அதைப்போலவே ,’படித்த பாடம்’ என்றுதான் வல்லொற்று மிகாமல் எழுத வேண்டும் . படித்தப் பாடம் என்று ஒற்று மிகுத்து எழுதுவது தவறாகும்.
என் மகள் படிக்கின்ற கல்லூரிக்கு இன்று விடுமுறை.
இங்கும் வல்லொற்று மிகக் கூடாது.
ற்+அ=ற.
‘படிக்கின்ற’ என்பதும் அகர ஈற்றுப் பெயரெச்ச சொல்லாகும்.
‘படிக்கின்றக் கல்லூரி’ என்று வள்ளுவர் மிகுத்து எழுதுவது தவறாகும்.
இப்படி, அகர ஈற்றுப் பெயரெச்ச சொற்களில் ஒற்று மிகாமல் எழுத வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மேற்கண்ட அகர ஈற்றுப் பெயரெச்ச சொற்கள் ‘காலம் காட்டும் பெயரெச்ச சொற்கள்’ ஆகும். காலம் காட்டும் பெயரெச்சத்தைத் ‘தெரிநிலைப் பெயரெச்சம்’ என்பர்.
படித்த
பார்த்த
ஆகிய இரண்டு சொற்களும் இறந்தகாலத்தைக் காட்டும் பெயரெச்ச சொற்களாகும்.
‘படிக்கின்ற’ என்பது நிகழ்காலத்தைக் காட்டும் பெயரெச்ச சொல்லாகும்.
II.
இப்போது
‘படிக்காத பையன்’ எனும் தொடரில் வல்லொற்று மிகக் கூடாது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
‘படிக்காத’ என்பது ‘எதிர்மறைப் பெயரெச்சம்’ ஆகும்.
‘எதிர்மறை’ என்பது செயல் நடைபெறாத தன்மையைக் குறிப்பதாகும்.
‘படித்த’ என்பதற்கும்
‘படிக்காத’ என்பதற்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ளவும். ‘படித்த’ என்பது இறந்த காலத்தைக் குறிக்கும்; ‘படிக்காத’ என்பது எதிர்மறையைக் குறிக்கும்.
எதிர்மறைப் பெயரெச்சத்திலும் வல்லொற்று மிகக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.
III.
நல்ல பாம்பு
பெரிய கண்கள்
அழகிய பெண்
புதிய படம்
பழைய படம்
மேற்கண்ட அகர ஈற்றுப் பெயரெச்ச சொற்களிலும் வல்லொற்று மிகாமல் எழுத வேண்டும்.
‘நல்ல’
‘பெரிய’
‘அழகிய’
‘புதிய’
‘பழைய’
மேற்கண்ட சொற்கள், ‘குறிப்புப் பெயரெச்ச சொற்கள்’ ஆகும்.
குறிப்பு என்பது குறிப்பால் உணர்த்துவதாகும்.
IV.
இந்த இடத்தில் வேறு இரண்டு சொற்களை விளக்குவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
‘சாரைப்பாம்பு’ போன்றுதான்
‘நல்ல பாம்பு’ம் இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.
இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லொற்று மிகவேண்டும் என்பது விதியாகும்.
ஆனால், இங்கு ‘நல்ல’ என்பது குறிப்புப் பெயரெச்சமாக இருப்பதால் வல்லொற்று மிகாமல் வருகிறது.
‘நன்றாகப் படிக்காத பெண்’
எனும் தொடரில் ‘நன்றாக’ என்பதற்கு அடுத்து வல்லொற்று (ப்) மிகுந்தும், ‘படிக்காத’ என்பதற்கு அடுத்து வல்லொற்று (ப்) மிகாமலும் வருவதைக் கவனிக்கவும். இரண்டுமே அகர ஈற்றுப் பெயரெச்சம்தான்.
‘நன்றாக’ எனும் சொல்லை அடுத்து ஏன் ஒற்று வருகிறது என்றால், ‘ஆக’ எனும் பின்னொட்டு வரும் இடங்களில் வல்லொற்று மிகவேண்டும்.
நன்று+ஆக=நன்றாக.
இதைப் போல நிறைய சொற்களில் ‘ஆக’ எனும் சொல் பின்னொட்டாகச் சேர்ந்து வரும். அங்கெல்லாம் வருமொழியில் வல்லினம் வந்தால் வல்லொற்று மிகவேண்டும்.
நன்றாகப் படி,
நன்றாகத் தூங்கு,
ஒன்றாகப் போ,
சரியாகப் பேசு,
தனியாகச் செல்லாதே!
இனிமேல் அகர ஈற்றுப் பெயரெச்ச சொற்கள் வரும்பொழுது முடிந்த அளவிற்குச் சரியாக எழுதுவீர்கள்தானே!
குறிப்பு:
தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். இது தொடர்பான விடுபட்ட செய்திகளையும் சுட்டிக் காட்டவும்.
