புரூஸ் லீ

நாறும் பூ நாதன்

பள்ளியில் படித்த போது, ப்ரூஸ்லீ நடித்த என்டர் த ட்ராகன் படம் பார்த்து அசந்து போனேன்.

அந்த நேரத்தில் ப்ரூஸ்லீ இறந்து போயிருந்தார் என்பது நாங்கள் அறியாத சேதி..படம் 1973 இல் வெளி வந்தாலும், கோவில்பட்டி மாதிரி சிறு நகருக்கு அது 1974 இறுதியில் தான் வந்தது…

எங்கு பார்த்தாலும் குங்பூ என்ற பேச்சு தான்..அவர் சங்கிலி கோர்த்த மரக் கட்டையை சுழற்றி சுழற்றி வீசும் லாவகம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது..

அவரை மாதிரி நாங்களும் கைகளை வைத்துக் கொண்டு, கால்களை தூக்கி அடிப்பது என ஜாலியாக கழிந்த பள்ளி நாட்கள்..

ப்ரூஸ்லீ மாதிரி நாங்களும் ஸ்டெப் கட்டிங் முடி வைத்துக் கொண்டோம் . ( முடி இருந்த காலம் அது.)


அமெரிக்காவில் பிறந்த இந்த குங்பூ நாயகன், ஹாங்க்காங்க் பூர்விகமாகக் கொண்டவர். தனது சீன நாட்டின் மீது மிகுந்த பற்றுதல் கொண்டவர்..

இவரது 6 மாதத்தில் மீண்டும் குடும்பத்தோடு இவரது பெற்றோர் ஹாங்க்காங்க் சென்று விட்டனர்.இளம் வயதில் தெரு சிறுவர்களோடு அடிக்கடி சண்டை வந்ததால், தற்காத்துக் கொள்ள, தனது தந்தையிடம் கராத்தே கற்றுக் கொண்டார்.


பின் தனது, 19 வது வயதில் அமெரிக்கா சென்று அங்குள்ள இளைஞர்களுக்கு கராத்தே பயிற்சி சொல்லிக் கொடுத்தார்..

இவரது திறமையை உணர்ந்த ஹாங்க்காங்க் கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனம் பிக் பாஸ் என்ற திரைப்படத்தை எடுத்து மிகப் பெரும் வெற்றி பெற்றது..அதை தொடர்ந்து, இவர் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரீ என்ற திரைப்படத்தில் நடித்து சாதனை படைத்தார்..அதன் பிறகு தான் அமெரிக்கா விழித்துக் கொண்டது..இவரை வைத்து என்டர் த ட்ராகன் என்ற திரைப்படத்தை 1973 இல் எடுத்தது.

அது மிகப் பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் திரைப்படம்..ஆனால் அந்த படம் வெளி வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்து போனார்.இவர் நாடகங்களில் நடித்தவர்.கவிதைகள் எழுதியவர்..ஒரு நாத்திகர்.


20 ஆம் நூற்றாண்டில் சாதனையாளர்கள் 100 பேரில் இவரும் ஒருவர் என டைம் நாளிதழ் கணித்துள்ளது.


இப்போது ஐம்பதுகளில் இருப்பவர்களின் மானசீக கதாநாயகன் இந்த குங்பூ நாயகன்.


இன்று நவம்பர் 27- இவரின் பிறந்த தினம்..

2 Comments on “புரூஸ் லீ”

Comments are closed.