தி சோ வேணுகோபாலன் கவிதைகள்-கவி வேதனை

தொகுப்பாளர் : அழகியசிங்கர்

        சின்னஞ் சிறிய திரி.
        எண்ணெய் முழுகியது.
        சூடு நெருப்பாச்சு.
        காணும் ஒளியாச்சு.
        கண்ணில் பிடிபடலாம்.
        கையில் பிடிபடுமா?
        தத்துவமா? தெரியாது.
        போகட்டும்.

        சின்னஞ்சிறு விட்டில்.
        சன்னச் சிறகாலே
        புயலைச் சூல்கொண்ட
        காற்றைக் கிழித்தது.
        எப்படி? தெரியாது.
        போகட்டும்.

        ஒளிமோகம் கொண்டது
        களிகொண்ட விட்டில்.
        காற்றைச் சிறகின்மேல்
        ஏற்றிச் சுழன்றது.
        வட்டம் குறுகியது
        சொட்டாமல்த் திரிநுனியில்
        நிற்கும் ஒளித்திவலை,
        'மெய்' தீண்டும் காட்சி,
        'சொய்' என்னும் விசும்பல்
        ஒளியின் குரலா?
        ஊனின் ஓலமா?
        எரியாமல் திரியில்
        கருகியது சிறகு.

        என்னடா இதிலும்
        தத்துவ மயக்கா?
        தெரியாது 
        போகட்டும்.
        மீண்டும்  ஒரு வீட்டில்..
        தூண்டாத் திரியின் மேல்
        பாய்ந்து விழுந்தது.
        'சொய' என்னும் விசும்பல்
        தேய்ந்து கருகியது.
        'மை' யாச்சு சிறகு.
        வெட்ட வெளி வட்டம்
        முட்டிச் சிதறிவிழும்
        சுடர்தலை அழுத்திக்
        கபந்தனாய் விட்டதா?
        ஒளியெங்கே?
        இருளில் 
        மைýச் சிறகில் கூடி
        வட்டம் பெரிதாக்கிக்
        கருகியது ஒளியும்.
        இருள்கூட ஒளியா?
        கண்ணில் பிடிபடலாம்.
        கையில் பிடிபடுமா?
        வெற்றியா? தோல்வியா?
        அதுவும் யாருக்கு?
        ஐயையோ இதிலும்
        தத்துவப்  பொருளா?
        தெரியாது
        போகட்டும்.

        தத்துவத் திரையை 
        ஒதுக்கிப் பார்த்தேன்
        புரிந்தது கொஞ்சம்.
        கொஞ்சமும் புரிந்ததா?
        தெரியாது
        போகட்டும்.
        எழுத்தாளன் எங்கே?
        கேட்கப் போனேன்.
        நடப்பூர் தாண்டி
        நினைவூர் கடந்தபின்
        கற்பனைத் தோப்பிலே
        கள்ளுக்கடையில்
        கவிஞனைக் கண்டேன்.
        போதைக் கிறக்கம்
        எழுதிய கவிதை
        எங்கே கிடைத்தது?
        கேள்வி குழைந்தது.
        பதில் ஒரு குழறல்.  

        இருட்குகை ஒன்றில்
        இலக்கிய பொருளில்
        சோதனை நடந்ததாம்.
        தட்டித் தடவினான்.
        சிந்தனைக் கையில்
                வந்ததை எடுத்து
                வீசினான் வெளியில்.
இருளில் குமைந்த
பொருளை ஒளியில்
கண்டவன் திகைத்தான்
தத்துவம் எங்கே?
பொருளும் மெய்யா?
பயனும் உண்டா?
..........................

எனக்குத் தெரியவே 
தெரியாது
கவிஞன் மதுவின்
அவதியில் இருப்பதால்
தெரியாது.


(கோடை வயல் என்ற தொகுப்பிலிருந்து )

One Comment on “தி சோ வேணுகோபாலன் கவிதைகள்-கவி வேதனை”

Comments are closed.