
இயந்திரத்தில் அரைத்த
அரிசி மாவில்
புள்ளி வைத்த
இதய கமல
கோலம்,
கால் படாத
சாமி சன்னிதியில் –
ஊற வைத்த அரிசியை
அம்மியில்
‘நைஸ்’ஸாக அரைத்து அளவாக நீர் சேர்த்து
சிறு துண்டு துணி தோய்த்து
பிரித்த இரண்டு விரல்களின்
மேல் கட்டை விரல்
அழுத்தி
வழியும் ஈர மாவில்
புள்ளி கணக்கில்லா
இரட்டை இழை
ஓவியமாய்
படிக்கோலம்,
சிவப்பு சிமென்ட் திண்ணையில் –
தெருவை அடைக்கும் புள்ளி வைத்த
தேர்க் கோலம்,
சாணத்தால் மெழுகிய
வாசல் மண் தரையில் –
என தூள் கிளப்புவாள்
அடுத்த வீட்டு மங்களம்,
முக்கியமாக
மார்கழியில்
திருப்பாவையை முணுமுணுத்துக் கொண்டே
‘அந்த’ மூன்று நாட்கள் தவிர்த்து
மற்ற நாட்கள் இருக்கும்
தவறாமல் வாசலில்
அவள் கோலம் –
புருஷன் அடித்து நெற்றியிலிந்து
ரத்தம் சொட்டிய நாளையும் சேர்த்து
