
ஐந்தாம் வகுப்பில் துப்பறியும் சாம்பு முதலில் படித்ததாக நினைவு. ஏழாம் வகுப்பில் மாரல் கிளாசில் பத்மா டீச்சர்தான் புதுமையாக சிஐடி சந்துருவை ஒவ்வொரு அத்தியாயம் ஒரு வாரமென படித்துக் காட்டுவார்.
தாமோதரனுக்கு என்ன ஆகும், குள்ளன் அவனை பிடித்துவிடுவானா, சங்கரன் காப்பாத்திவிடுவானா சந்துரு ஏன் ஒண்ணுமே பண்ணலை என்றெல்லாம் விசனப்பட்டு பேசிக்கொண்ட வாரங்கள்.
அப்போது சிஐடி சந்துருவை முடிக்க இயலவில்லை.
ஏன்?
கடைசியில் சொல்கிறேன்
வீட்டில் அப்பாவும் சித்தப்பாக்களும் வரிவரியாகப்பேசி மாய்வார்கள்.
இன்ஸ்பெக்டர் கோபாலன், கோமதி, கல்யாணி, பிரணதார்த்தி ஹர அய்யர், மணி, சவுக்கு, விபூதி பூஷணம், ஜானகி, ஆந்திரர், பட்டணம் பஞ்சு, கறுப்பன்மூக்கு கிராமம், என்ற பெயர்கள் பரிச்சயமான உரையாடல்கள்.
விவரம் தெரிந்தபின் படித்துப்பிரமித்த வேதாந்தம், லட்சுமி கடாக்ஷம், சுதர்சனம்…..
மல்லாரி ராவ் கதைகள். ஜாங்கிரி சுந்தரம், சின்னச்சின்ன விஷயங்கள், என்று வாழ்க்கையின் தத்துவங்களை போகிற போக்கில் அனாயாசமாக தெளித்துவிட்டு செல்லும் அந்த ஜீனியஸ்..
தேவன் என்னும் மஹாதேவன்!
சுஜாதா, கிரேஸி மோகன், கானடா பசுபதி என்று தேவனைப்பற்றி என்னுடம் சிலாகித்துப்பெசின யாரும் இன்று என்னோடு இல்லாமல் போய் தனியனாக உணர்கிறேன்.
ஆனால் ஏதோ ஜென்மாந்தரத்தொடர்பு இருந்திருக்கிறது!
சில வருடங்களுக்கு முன்பு மெட்ராஸ் ஆர்வலர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் ”தேவனும் மெட்ராஸும்” என்னும் தலைப்பில் பேசச்சொல்லி ஆர்கே கன்வென்ஷன் செண்ட்டரில் தேசலான கூட்டத்தில் பேசினதும் அது பற்றி இந்த்யன் எக்ஸ்பிரசில் படம் வந்ததும் நிறைவாக இருந்தது.
அடுத்த வருடமே மெட்ராஸ் வார கொண்டாட்டத்தில் பிரசித்தி பெற்ற மெட்ராஸ் சரித்திர வல்லுனர் ஸ்ரீராம் (Sriram Venkatakrishnan) தேவன் பற்றி உரையாற்றச்சொல்ல, அது பிரபலமாகியது. அந்தப்பேச்சைக்கேட்க வந்திருந்த திருமதி சாந்தி லட்சுமணன் (சாருகேசியின் சகோதரியும் தேவனின் உறவினரும்) அறிமுகம் கிடைத்தது.
திறமையை ஊக்குவிப்பதில் முதல் இடத்தில் இருக்கும் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் (Kizhambur Sankara Subramanian)அவர்களின் கவனம் என் மேல் பட்டது.
இதோ அவரின் தேர்ந்தெடுப்பில் “தேவன் அறக்கட்டளை விருதுக்கு” என்னைத்தகுதியாக்கிவிட்டார்.
வருன் ஞாயிறன்று (9 ஃபிப்ரவரி, மாலை 4 மணிக்கு) கோகுல் சாஸ்திரி ஹால், மைலாப்பூரில் விருது வழங்கும் விழா. என்னுடன் திரு பி என் பரசுராமனும் திரு சுரேஷ்குமாரும் விருது பெறுகிறார்கள்.
விருப்பமும் நேரமும் இருப்போர் வந்து வாழ்த்தலாம்.
பி. கு.
“ஆமா ஏழாவதும்போது சிஐடி சந்துருவை முடிக்க முடியலைன்னியே அது ஏன்?
முதல் பாகம் படித்து முடிவதற்குள் அவசரப்பட்டு கான்சர் என்னும் காலன் பத்மா டீச்சரை அழைத்துக் கொண்டு விட்டதால் தான்! பின்னாளில் அல்லையன்ஸில் போய் இரண்டு பாகங்களளையும் வாங்கிப்படித்து முடித்தேன்.
இன்று அவரையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்!
