16. ஜெ.பாஸ்கரன்/மழை விட்டது…

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

வெளியே மழைச் சத்தம்
உள்ளுக்குள் அமைதியான புயல்.
சத்தம் ஓய்ந்தது, வந்தான் வெளியே….

நீரற்ற மேகங்களின் விரிசலில்
எட்டிப்பார்க்கும் காலைக் கதிரவன்.

காக்கையின் கழுத்துச் சிலிர்ப்பில்
தெறிக்குது ஒரு சிறுமழைச் சாரல்.

ஈரத்தரையில் வழுக்கிச் செல்லும் நத்தை
முதுகில் சுமக்குது தன் கூட்டை.

வாயால் கெட்டது போதும் என்று
பேயாய்த் தாவும் தவளை.

இரவு மழையில் குளித்து
துவட்ட மறந்த உடலுடன்
சிலிர்த்திருக்கும் புல்வெளி.

தெளித்த வண்ணப் பொட்டுகளாய்
ஈரக்காற்றில் சிணுங்கிச் சத்தமின்றி
சிரிக்கும் சின்னப் பூக்கள்.

காண்பதற்கு நேரமில்லை,
காண்பதால் ஒரு பயனுமில்லை.
ஆடையை விட அதிகக் கிழிசல்களுடன்

தோளில் தொங்கும் சாக்குப் பையுடன்
வயிற்றுப் பாட்டுக்கு வீதி பொறுக்கும்
கிழவனுக்குக் கண்ணிருந்தும் என்ன பயன்?