20. வே. சரஸ்வதி உமேஷ்/ சிக்கனம்

தண்ணீர் குழாயில் நீர் கசிந்து கொண்டிருந்தது
நாளை சரி செய்வோம் ஒத்தி வைத்த மனதிற்கு,
குழாயடியில் ஒரு வாளியை வைக்கத் தோணவில்லை..
மூன்று நாட்களாய், கட்ட வேண்டிய மின் கட்டணம்,
கனவிலும், நினைவிலும் காசு கேட்டு மிரட்டுகிறது..
கட்டண உயர்வைக் கடுமையாய் சாடியபடியே சென்றேன்..
ஓயாமல் சுழலும் மின்விசிறியும், ஒளிரும் மின் விளக்கும்,
என் புலம்பலைக் கண்டு புன்சிரிப்பு பூத்தன.
பொது போக்குவரத்தில் பயணிப்போர் பொறாமை கொள்ளும்படி
மனைவிக்கு ஒரு வாகனம், கல்லூரியில் பயிலும்
மகனுக்கும், மகளுக்கும் தனித்தனி வாகனம்..
பக்கத்துத் தெருவிலே அலுவலகம்,
பாங்குடன் செல்கிறேன் எனது வாகனத்தில்..
வர்ண ஜாலமாய் விளம்பர பதாகை அமைக்க,
காத்திருந்த என்னிடம் வந்தது எனக்கான வாசகம்..
“சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்…”
இந்த இரண்டு வரிகளுக்கா இவ்வளவு பெரிய பதாகை?
சிக்கனத்தைப் பற்றி எழுதச் சிறிய அளவு போதாதா?
சலிப்போடு வேலையைத் தொடங்கியவனின் மனது,
முதன் முதலாய் சிக்கனத்தைச் சிந்திக்கத் தொடங்கியது…