ஏ.என்.எஸ்.மணியன்/ஜெமினி கேண்டீன்

முதற்பகுதி

1950-ஆம் ஆண்டு சென்னை ஆவடியில் காங்கிரஸ் மகாநாடு நடத்த திட்டம்போட்டார்கள் தலைவர்கள். திட்டம் தீர்மானமாகி தமிழ்நாட்டின் சின்னமான கோபுரம், நுழைவாயிலில் மிகப்பெரியதாக சுமார் 200 அடி உயரத்தில் அமைக்கவேண்டும் என்று எண்ணினார்கள். த மிழ்நாட்டுத் தலைவர்கள் அதற்கு ஒரு கமிட்டி அமைத்து, அதில் தலைவர் காமராஜ், பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், டி.கிருஷ்ணமாச்சாரி, ஆர். வெங்கட்ராமன் இன்னும் சில அங்கத்தினர்கள் ‘இந்த கோபுரம் பிரம்மாண்டமாய் இருக்க வேண்டிய கோபுரம் தமிழ்நாட்டுச் சின்னம்’ என்றனர். இதை அமைக்கும் பொறுப்பை ஜெமினி ஸ்டூடியோ அதிபர் திரு.எஸ்.எஸ். வாசன் அவர்களிடம் ஒப்படைத்தார் தலைவர் காமராஜ் அவர்கள். வாசன் அவர்களும் பெரிதும் மகிழ்ந்து என்னுடைய செலவிலேயே பிரமாதமாக செய்கிறேன் என்று சொல்லிவிட்டார். சில நாட்கள் கழித்து ஆவடி காங்கிரஸ் மகாநாடு நடக்கப்போகுமிடத்தில் ஜெமினி ஸ்டூடியோவைச் சேர்ந்த மிகப் பிரபலமான ஆர்ட் டைரக்டர் திரு.ஏ.கே. சேகர் தலைமையில் நூற்றுக்கணக்கானத் தச்சர்களும் இவர்களுக்கு உதவி செய்ய நூற்றுக்கணக்கானத் தொழிலாளர்களும் மற்றும் 3 வாங்கும் இவர்களை வேலை வாங்கும் மேஸ்திரிகளும் கோபுரத்திற்குத் தேவையான எல்லா உபகரணங்களும் ஜெமினி ஸ்டூடியோவிலிருந்து கொண்டு வரப்பட்டு மிகப் பிரமாதமாகத் தமிழ்நாட்டுக் கோபுரச்சின்னம் கலைமேதை ஏ.கே. சேகரின் எண்ணப்படி செய்து முடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மகாநாடு சென்னையில் நடக்கிறபடியால் அதைப் பார்க்கவே ஜனங்களுக்கும் கரை கடந்த உற்சாகம். வடநாட்டுத் தலைவர்களுக்கும் இந்தக் கோபுர நுழைவாயில் மிகப் பெரிய பிரமிப்பாய் இருந்தது. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் சொல்ல ஒண்ணா மகிழ்ச்சி அடைந்து காமராஜ் அவர்களை மிகவும் பாராட்டி, இதை எல்லாம் யார் செய்தது என்று கேட்க, காமராஜ் அவர்கள் திரு.எஸ்.எஸ். வாசனை அறிமுகப்படுத்தி ‘இவர்தான் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் மற்றும் தீவிரமான தேசியப் பத்திரிகை ஆனந்த விகடன் ஆசிரியரும் இவர்தான்’ என்று சொன்னார். நேரு வாசனின் இரு கரங்களையும் பிடித்து நன்றி சொன்னார். ஐந்து நாட்கள் பிரமாதமாக நடந்த இந்த மகாநாட்டில்தான் ஜனநாயக சோஷலிசம் என்ற மந்திர வார்த்தை உதயமானது.
இந்த மகாநாடு நடந்து சில நாள்கள் கழித்து திரு.எஸ்.எஸ். வாசன் அவர்கள் எம்.பி.ஆனார் (சிவாஜியும், சோவும் ஆன மாதிரி) நேரு வாசன் அவர்களைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தார். மகாத்மா காந்தி நிதிக்கு 1 லட்சம் நிதியும், கஸ்தூரிபாய் நிதிக்கு 25 ஆயிரம் கொடுத்ததையும் அறிவார். ஆனால் சந்திப்பு இப்பொழுதுதான் ஆவடியில் நடந்தது. இந்த கோபுரம் கட்டிய தொழிலாளர்களுக்கும் மற்ற டைரக்டர்களுக்கும் ஜெமினி ஸ்டூடியோ மெஸ்ஸிலிருந்து 400 பேர்களுக்கும் காலை டிபன், பகல் உணவு, மாலையில் காபியும், இரவு உணவும் தயார் செய்து கொண்டு லாரியிலும், வேன் மூலமாகவும் கொண்டுபோய் பரிமாறும் வேலை எங்களுடையது. (நான் ஜெமினி மெஸ்சில் வேலை செய்து கொண்டிருந்தேன்.) இந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் உணவு வேளை தவறாமல் ஜெமினி மெஸ் பொறுப்பேற்றது, திரு.வாசன் அவர்கள் உத்திரவுப் படி…

(இன்னும் வரும்)
*