நாடோடி/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 4

டாக்டர் பிரகாஷ்
(இது உண்மையில் நடந்த சம்பவம்)

சீவீல்தாஸ் என்னும் அந்த இளைஞன் தம் வீட்டில் ஏதோ காரியமாக இருக்கையில் பக்கத்து வீட்டு அம்மாள் வெகு அவசரமாக உள்ளே நுழைந்தாள். “தம்பி! உடனே ஓடிப்போய் பக்கத்தில் உள்ள பிரகாஷ் டாக்டரை அழைத்துக் கொண்டு
வா, உடனே ஓடு. அவசரம்” என்றாள்.
‘என்னம்மா, என்ன அவசரம்?’ என்று சவில்தாஸ் அந்த அம்மாளைப் பார்த்துக் கேட்டான்.
“என் மருமகளுக்கு இடுப்பு வலி ஆரம்பித்துவிட்டது. என் மகனும் வீட்டில் இல்லை. பக்கத்து ஊருக்குப் போயிருக்கிறான். ஆகவே உடனேயே ஓடிப்போய் டாக்டர் பிரகாஷை அழைத்துக் கொண்டு வா!’ என்றாள்.
நல்ல நடுப்பகல், வெலில் கொளுத்திக் கொண்டிருந்தது. சவீல்தாஸ் டாக்டர் பிரகாஷ் வீட்டை நோக்கி ஓடினான்.
அந்தப் பக்கத்திலேயே இந்த ஒரு டாக்டர்தான் இருந்தார். ஆனால், அவர் வீட்டையடைந்த பிறகுதான் டாக்டரை அழைத்துக்கொண்டு போவதில் உள்ள ஒரு சங்கடம் அவள் ஞாபகத்திற்கு வந்தது.
டாக்டர் பிரகாஷ் சீமைக்குச் சென்று திரும்பியவர். சற்று டம்பமாக நடந்து கொள்பவர். அதனால் யாராவது வண்டி கொண்டு வந்தால்தான் வருவாரேயல் லாது, ஆத்திரம், அவசரத்திற்குக் கூட நடந்து வரமாட்டார் என்று சவீல்தாஸ் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான்.
ஆனால் அப்பொழுதென்று ஒரு வண்டியைக்கூட அந்தப் பக்கம் காணாமற் போகவே சவீல்தாசுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. நேரமோ ஓடிக்கொண்டிருக் கிறது. வண்டியையோ காணோம்! என்ன செய்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்தான். வண்டிக்காகக் கால் மணி நேரம் நின்று பார்த்தான். ஒரு வண்டியும் தென்படவில்லை.
கடைசியில் தைரியமாக டாக்டர் வீட்டிற்குள் நுழைந்தான். டாக்டர் சாய்வு நாற்காலியில் சாய்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். சவீல்தாஸ் தாம் வந்த காரியத்தைச் சொன்னதோடு கூட, வண்டி ஏதாவது கிடைக்குமா என்று தாம் கால் மணி நேரமாக வாசலில் நின்றதாக கூறியதும் டாக்டர் அவன்மீது சீறி விழுந்தார்.
“உனக்கு மூளை இருக்கா? இந்த ஆபத்து சமயத்தில் என்னிடம் உடனே ஓடி வராமல் வண்டிக்காகக் காத்துக் கொண்டிருந்தேன் என்று சொல்கிறாயே வா போகலாம்” என்று சொல்லிவிட்டு, தம் வேலையாளைத் தம் மருந்துப் பெட்டியை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி, நடந்தே அந்த கர்ப்பிணியின் வீட்டை அடைந்தார். நல்ல வேளையாக டாக்டர் தக்க சமயத்தில் வந்து சேர்ந்ததால், கர்ப்பிணிக்கு ஒரு கஷ்டமும் ஏற்படவில்லை. சுகப்பிரசவம் ஆயிற்று.
டாக்டர் போன பிறகு. வண்டியை எதிர்பார்க்காமலே டாக்டர் தாமாகவே நடந்து வந்த விபரத்தை சவீல்தாஸ் ஒரு நண்பரிடம் சொன்னான். அதைக்கேட்ட நண்பர். ”உனக்குத் தகவல் தெரியாதா! டாக்டர் எத்தனையோ மாறிவிட்டாரே! இப்பொழுதெல்லாம் அவர் வண்டிக்காகக் காத்திருப்பதில்லை” என்று சொல்லிவிட்டு, அதன் காரணத்தையும் சொன்னார்.
சமீபத்தில் ஒரு நாள் டாக்டர் பூரண கர்ப்பிணியான தம் மனைவியைக் காரில் அழைத்துக்கொண்டு எங்கோ சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காரில் கோளாறு ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் டாக்டர் திகைத்துக் கொண்டிருக்கையில் மனைவிக்கு இடுப்பு வலி ஆரம்பித்து விட்டது. மனைவியை காரிலேயே விட்டுவிட்டு, டாக்டர் பக்கத்துக் கிராமத்திற்கு ஓடினார்; அங்குள்ள ஒரு வயோதிக நாட்டு வைத்தியரிடம் தம் மனைவியைப் பற்றிச் சொன்னதும் அவர் ஓடோடியும் வந்தார். டாக்டர் மனைவியைத் தம் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்து, பிரசவத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும், செய்ய, டாக்டர் மனைவி அங்கேயே ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
அந்த வயோதிக வைத்தியர் செய்த உதவிக்காக டாக்டர் பிரகாஷ் ஏதோ பணம் கொடுக்கப் போனார். ஆனால் அதை ஏற்க அந்த வயதான நாட்டு வைத்தியர் மறுத்து விட்டார். “இவள் எனக்குப் பெண் மாதிரி. இவளுக்குச் செய்த உதவிக்கு நான் எப்படி பணம் வாங்க முடியும்? நான் கொடுத்த மருந்தின் விலை நாலணாதான் இருக்கும். ஆகவே ஏதாவது கொடுக்கத்தான் வேண்டும் என்றால் நாலணா கொடுங்கள்” என்றார்.
அன்றிலிருந்து டாக்டர் பிரகாஷ் மாறிவிட்டார். யாரிடமும் ஒன்றும் எதிர் பாராமலேயே தம்மாலான வைத்திய உதவிகளைச் செய்து வருகிறார்” என்று நண்பர் கதையை முடித்தார்.