மஞ்சுளா சுவாமிநாதன்/வினையும் விளைவும்

காலைநேர வாகன நெரிசலில் அவசரமாகத் தனது இருசக்கர
வாகனத்தை ஓட்டிவந்தான் லோகநாதன். அவனது சிறிய நகலகத்தை
வழக்கமாக அவன் திறக்கும் நேரம்; மணி ஒன்பது, அப்போது ஒன்பது
அடித்து கால் மணி நேரம் ஆகியிருந்தது. வேகமாக அவன் தனது
வண்டியை ஓட்டியபோது திடீரென்று ஒரு நாய் அவன் வாகனத்தைக்
குறுக்கிட்டது, அடடே என்று அவன் சுதாரிப்பதற்குள் மயிரிழையில்
அந்த நாய் பிழைத்து சாலையை விபத்தேதும் இன்றி கடந்தது.
இந்த நாய் ரொம்ப புத்திசாலியாயிற்றே? வழக்கமா இப்படி க்ராஸ்
பண்ணாதே… ஒவ்வொரு சமயம் சிக்னல்ல பச்சை விளக்கு
தெரியும்போது தானே அது கடந்து போகும்? என்று சிந்தித்தான்… சரி,
ஆறறிவு உள்ள மனுஷனே தப்பு பண்ணலியா? பாவம் ஐந்தறிவு உள்ள
அந்த ஜீவன் என்ன பண்ணும்? நல்ல வேளை உயிர் பொழச்சிடுச்சு,
இல்லாட்டி நம்மளால ஆஸ்பத்திரி கூட்டிட்டு போக முடியுமா என்ன?
தெரு நாய் தானே, செத்தா சாவட்டும்னு விட்டுட்டு போயிருப்பேன்…
நாமெல்லாம் என்ன ஜென்மம் என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு
கடைக்குச் சென்றான்.
“தம்பி சீக்கிரம் திறப்பா, இத ஜெராக்ஸ் எடுத்துட்டு நான் பாஸ்போர்ட்
ஆபீஸ் போகணும்,” என்று ஒரு பெரியவர் கடை வாசலில்
நின்றிருந்தார்.
கடையை அடைந்த பின் லோகுவிற்கு நாயைப் பற்றியோ, மற்ற
விஷயங்களைப் பற்றியோ சிந்திக்க நேரம் இருக்கவில்லை. நகல்
எடுப்பது, சிறிய டிசைன் வேலைகள் செய்வது, பிரிண்ட் எடுப்பது,
ஸ்பைரல் பைண்டிங் போடுவது என்று இரவு எட்டு மணி வரைக்கும்
வேலை சரியாக இருந்தது. ஒவ்வொரு நாள் மதிய நேரம் கொஞ்சம்
கடை காலியாக இருக்கும், மற்றபடி நகல், லேமினேஷன், இணையச்
சேவை, என பரபரப்பாக இருப்பான். லோகுவிற்கும் சற்று பெரிய
கடையை வாடகைக்கு எடுத்து, இன்னும் ஒரு கணினி பொருத்தி,
வேலைக்கு ஆள் வைத்து தட்டச்சு வேலை செய்ய வேண்டும் என்ற
ஆசைதான், ஆனால், எதிர்பாராத செலவுகள் வந்தபடி இருந்தன.
அவன் கடை ஐந்துக்கு ஏழு அடி சதுர பரப்பில் ஒரு சிறிய கடை. அந்த
அங்காடிப்பகுதியில் அதே போல பதினைந்து கடைகள் இருந்தன.
ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு சிறுதொழில் என வெவ்வேறு
விதமான மனிதர்களால் நடத்தப்படுகிறது. மற்ற கடைக்காரர்களுடன்
சேர்ந்து தேநீர் குடிப்பது, ஒரு தம் போடுவது என்று வாடிக்கையாளர்கள்
குறைவாக இருக்கும் நேரத்தில், அல்லது அவன் கடைக்கு யாரேனும்
வந்தால் பேச்சுக் கொடுப்பான் . இல்லையேல் அவனுக்கு அதற்குக் கூட
பெரிதாக நேரம் ஒதுக்க முடிவதில்லை.
ஒரு நாள் அவன் ஒரு பாடப்புத்தகத்தை நகல் எடுத்துக்
கொண்டிருந்தான். நண்பகல் வேளை என்பதால் சந்தடி சற்று
ஓய்ந்திருந்தது. அவன் கடைக்கு வெளியே ஒரு பெரியவர் நின்று
கொண்டிருந்தார் . சுமார் எழுபது வயது அவருக்கு இருக்கக்கூடும்
என்று லோகு ஊகித்தான். உச்சி வேளை என்பதால் வெயிலின் தாக்கம்
அதிகம் இருந்தது. அவரது முகத்தை அவனால் சரியாகப் பார்க்க
முடியவில்லை. பெரியவர் இத்தனை நேரம் ஏன் நின்று
கொண்டிருக்கிறார்? என்று அவன் நினைக்க அவர் தொப்பென்று
தரையில் சரிந்தார். லோகு பயந்துபோனான். உடனடியாக அவருக்கு
மூர்ச்சை தெளித்து, கைதாங்கலாகக் கடைக்கு அழைத்து வந்து, மின்
விசிறி கீழ் அமரவைத்து அவரை ஆசுவாசப்படுத்தினான்.
பெரியவர் அவரது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்… “தம்பி பக்கத்துல
தான் வாடகை வீட்டில் இருக்கேன். பிரைவேட்ல வேலை பார்த்துட்டு
இருந்தேன், ரெண்டு பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைச்சுட்டேன்.
திடீர்னு ஒரு நாள் உங்களுக்கு வயசு ஆயிடுச்சு,வேலை இல்ல
போங்க, வேற ஆளை வேலைக்கு போட்டுக்குறேன்னு ஒரு அஞ்சு
லட்சத்தை கையில குடுத்துட்டு வேலையை விட்டு தூக்கிட்டாங்க! என்ன
செய்யன்னே புரியல… இத்தனை வயசுக்கு மேல் யாரு தம்பி வேலை
கொடுப்பாங்க? ஏதோ கொஞ்சம் சேமிச்சு அதுல இருந்து வட்டி வருது,
அங்க இங்க இருந்த கடனை இந்த காசை வைச்சு அடச்சுட்டேன்,
இப்போ தினமும் ரெண்டு பேரு சாப்பிடணுமே? இங்க ஒரு கடையில்
வேலை தரேன்னு ஒரு தம்பி சொல்லுச்சு, நானும் சந்தோஷமா
வந்தேன், இப்போ வேற ஒருத்தரை, சின்ன வயதுக்காரரா வேலைக்கு
சேர்த்துட்டேன், தப்பா எடுத்துக்கிடாதீங்க அப்படின்னு சொல்றாரு …
நல்லா சம்பாதிக்கும் போது காசு சேர்த்து வச்சுக்கணும் தம்பி,
இல்லாட்டி என் நிலைமையை பார்த்தியா?” என்று அழ ஆரம்பித்தார்.
லோகுவிற்கு மனசு கேட்கவில்லை … “ஐயா, என் கடையில
வேணும்னா வேலை தரேன், ஒரு நாளைக்கு 300 ரூவா தரேன், ரெண்டு
டீ வாங்கித் தரேன், எங்கனாச்சும் டெலிவரி போகணும்னா, ஏதாச்சும்
பொருள் வாங்கி வரணும்னா செலவுக்குக் காசு தரேன், வேலைக்கு வர
அன்னிக்கு காசு, தினக்கூலிதான் பரவாயில்லயா?” என்று கூறினான்.
பெரியவர் மகிழ்ந்து போனார்.
தினமும் ஆசையாய் கடைக்கு வரத்துவங்கினார். கடையைச் சுத்தம்
செய்தார். வாடிக்கையாளர்களை நன்கு கவனித்தார். நகல் எடுப்பது,
பைண்டிங் செய்வது போன்ற வேலைகளைச் சுறுசுறுப்பாகக்
கற்றுக்கொண்டார். மிகவும் நேர்மையான மனிதராகவும் இருந்தார்.
அவரை வேலைக்கு வைத்ததிலிருந்து பேச்சுத் துணைக்கு வேறு ஒரு
ஆள் இருந்ததால் லோகுவின் நாட்கள் அதிகம் உற்சாகமாக இருந்தன.
“என்ன லோகு இப்பெல்லாம் ரொம்ப குஷியா இருக்கிற போல? டூயூ
எல்லாம் கூட நேரத்துக்கு கொடுத்துடற, என்ன விஷயம்?” என்று
கேட்டுக் கொண்டே கடைக்குள் நுழைந்தான் கந்துவட்டி கொடுக்கும்
கோவிந்தன்.
“அதெல்லாம் இல்லப்பா, புதுசா ஒருத்தர் வேலைக்கு எடுத்து
இருக்கேன், அதான் கொஞ்சம் மத்த வேலைக்கு நேரம் கிடைக்குது…”
“பார்த்து லோகு நீயே கடன் வாங்குற, இதுல ஒரு ஆள் வேறயா ?
கோவுட் சமயம் ஞாபகம் இருகுல்ல? பக்கத்துக் கடை கணேசன் நம்பி
ஸ்யூரிட்டி கையெழுத்து போட்டியே, என்ன ஆச்சு ? போனவன்
போனவன் தான், திரும்ப வரவே இல்ல. இப்பதான் நீ அவன்
வாங்கின காசும் சேர்த்து கடன் எல்லாம் ஓரளவுக்கு அடச்சிருக்க…
பார்த்து சூதானமா இருந்துக்க, வரட்டா,” என்று தன் பங்குக்கு அறிவுரை
கொடுத்து விட்டுச் சென்றான் கோவிந்தன்.
பெரியவர் இதனைக் கேட்டும் கேளாதது போல் பைண்டிங் வேலைகள்
செய்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் லேசான ஒரு கிளர்ச்சி
தெரிந்தது. “ஐயா நாளை முதல் நீங்க ஒன்பது மணிக்கு வந்து
கடையை திறந்துடுங்க, நான் ராத்திரி கடையை பூட்டிட்டு
டீக்கடைக்காரர் கிட்டச் சாவி கொடுத்துட்டு போறேன்,” என்று
பெரியவரிடம் லோகு கூறினான்.
மறுநாள் காலை , “இன்னைக்கு நான் பையன் ஸ்கூல்ல விடறேன்,
நீயும் ரெடியாகு, உன்னையும் ஆபீஸ்ல விட்டுடறேன்,” என்றான்
மனைவியிடம் லோகு.
“என்னங்க கடை திறக்க வேணாமா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்
அவன் மனைவி.
“பெரியவர் திறக்கச் சொல்லி இருக்கேன், அவர் வீடு கடைப் பக்கம்தான்
இருக்கு, அதான் காலைல சீக்கிரம் வரச் சொன்னேன்.”
“அவரை நம்பலாமுங்களா? நீங்க இப்பதான் ஓரளவு கடன் எல்லாம்
அடச்சுட்டு இருக்கீங்க,” என்று இழுத்தாள் லோகுவின் மனைவி.
“நம்பிக்கைதான் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். அவர் நம்பினா அவர்
இன்னும் பொறுப்பா நடந்துப்பாரு, அவர் வயசுக்கு வேற எங்க வேலை
கிடைக்கும் சொல்லு? நான் ஒன்னும் அள்ளிக் கொடுத்துடல, அது
தெரிஞ்சு தான் அவர் வேலை பார்க்கிறார். அவர் நல்லவர், அவரை
நம்புறதுனால எனக்கு என் குழந்தை கூடவும், பொண்டாட்டி கூடவும்
கொஞ்ச நேரம் அதிகம் செலவு செய்ய முடியும்னா எனக்கு அது
போதும்,” என்ற லோகு, தனது மனைவியின் தோளைப் பிடித்து
அணைத்தான்.
அவன் குழந்தையையும் மனைவியையும் இறக்கிவிட்டுக் கடை நோக்கிச்
சென்ற போது அவன் மனம் நிறைவாக இருந்தது. இன்னைக்கு
ஏதாவது நாய் நடுவுல மாட்டுச்சுன்ன நம்மளால அத ஆஸ்பத்திரி
கூட்டிட்டு போக முடியும் என்று நினைத்துக் கொண்டான்.அவன்
கடைக்குப் பக்கத்துக் கடையில் உள்ள ஃப்ரேம் கடையில் சாமான்
போட்டு வைத்த கிடங்கில் ஒரு பூனைக் குட்டிகள் போட்டிருந்தது.
அதனை எடுத்து விளையாடினான் லோகு.
வெளிர் ஆரஞ்சு நிறத்தில் நீல கண்களுடன் பார்க்க அழகாக இருந்த
அந்த பூனைக்குட்டியின் வெல்வட் தலையைத் தடவிய போது சொல்ல
முடியாத ஆனந்தத்தை அடைந்தான். அவன் தடவி முடித்த போது
அந்த குட்டி கண்ணைச் சொருகிக் கொண்டு தூங்க ஆரம்பித்தது.
அதனைப் பொறுமையாகக் கீழே கடத்திவிட்டு ஒரு துள்ளல் நடையுடன்
தன் கடையை நோக்கி நடந்தான். காலை நேரத்தில் வந்து
கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்குச் சுறுசுறுப்பாக நகல் எடுத்துக்
கொண்டிருந்தார் பெரியவர்.