
மகனும் மருமகளும்
வீட்டு வேலை முடித்து
வீட்டிலிருந்து வேலை செய்ய
அவரவர் மடிக்கணினியோடு
அவரவர் அறைக்குச் சென்றுவிட
மதிய உணவுக்குப் பின்
கண்கள் கொண்டு செருக,
எனது அறையில் சென்று
படுத்தேன்.
விழிப்புக் கொடுத்தபோது
ஹாலில் குழந்தைகளின்
பேச்சுச் சப்தம்.
மெதுவாக எட்டிப் பார்த்தால்
ஊஞ்சலில் பேத்தி அமர்ந்திருக்க
கீழே பேரன் அமர்ந்திருந்தான்.
”நான்தான் பாட்டி
இப்போ கதை சொல்வேன் “
பேத்தி சொல்லியபடி
ஊஞ்சலில் ஆட
“சொல்லு பாட்டி கதை சொல்லு “
பேரன் உற்சாகமானான்.
“இரு இரு காது மெஷின்
வச்சுக்கிறேன்”
நான் சொல்வது போலவே
சொல்லியபடி அம்மாவின்
ப்ளூடூத் கருவியைக்
காதில் வைத்துக் கொண்டாள்.
“ஒரு மரத்தில ஒரு குருவி
இருந்ததுதாம்”
பேத்தி ஆரம்பித்தாள்.
“பாட்டி ஒரே ஒரு ஊர்ல
ஒரு ராஜா இருந்தானாம்,
அப்படித்தான ஆரம்பிக்கணும்”
பேரன் இடைமறித்தான்.
“எப்பப் பாத்தாலும் ஊர்க்கதை
ராஜாக்கதை சொன்னா,
காக்கா குருவி கதை
நாய் பூனை கதையெல்லாம்
எப்பதான் சொல்றது?
கையை ஆட்டிக் கேட்டாள் பேத்தி.
ஆச்சரியத்தில் மூழ்கியபடி
நானும் கதை கேட்கத்
தயாரானேன்.
( 21.02.25 விருட்சம் கவிதை நிகழ்வில் வாசித்த கவிதை.)

Arumai