
கவிதையும் எழுத வேண்டாம்
ஒரு மண்ணும் எழுத வேண்டாம்
என்றாள் அவள்
அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனமில்லை
என்றாள் அம்மா
உருப்படியக ஏதாவது செய்யலாம்
என்றார் அப்பா
முதலில் இந்தக் கவிதையை
குப்பைத் தொட்டியில்
எறிந்து விட்டு வருகிறேன் என்று
பிடுங்கிப் போனான் பையன்
நாயும் தன் பங்கிற்கு லொள் என்று
குரைத்து வைத்தது
வாசலுக்கு வந்தவன்
செம்பருத்தியை வ ட்டமிட்டு
தயங்கி தயங்கி
அமர
இடம் பார்க்கும் வண்ணத்துப்பூச்சியை
பார்த்துக் கொண்டிருந்தேன்
காற்று சற்று மிகையாக வீச அது
வண்ணச் சருகென மிதந்து போயிற்று
திசையோடு
இனி பார்ப்பதற்கு ஏதுமில்லை
வாசல் கோலத்தை தவிர
என்று திரும்பியவன் பார்வை
ஏதேச்சையாய் மஞ்சள் அரளியின் உச்சிக்கு
தாவியது
கருப்பு கொண்டையும்
இளநீல நிற சிறகுகளும்
கொண்ட
குட்டி
குட்டித் தேன் சிட்டு ஒன்று
இங்கு எதுவுமே நடக்காதது போல்
முழு அலகையும் புதைத்துக் கிடந்தது
புத்தம் புதிய பூ ஒன்றிற்குள்

Pramadham
மிகவும் நன்றாக உள்ளது.
கவிஞரின் அனுபவம் அநேகமாக எல்லா இளங்கவிஞர்களின் வீட்டுக்காட்சி. மலரும் நினைவுகள்.