~~~~
தேடலின்றியே
நாட்கள் ஓடுது
வெறிபிடித்த நாயாய்.
புத்தக அறிவு
மூச்சு முட்டுது
தரையில் விழுந்த மீனாய்.
படித்த படிப்பிற்கு
வேலையென்பது வறண்ட
கொம்பில் வடியும் தேனாய்.
சமூகமின்று
கேள்வியை மட்டுமே
சுமந்து நிற்கும் பேயாய்.
ஒவ்வொரு நாளும்
நம்மை எரிக்கும்
நாளைய பயத்தில் தீயாய்.
கருக்கலையாமல்
தோல்வியை சுமக்கிறோம்
கன்னிகழியாத தாயாய்.
மாற்றமென்பது
மாறவழியின்றி அரசியல்
இருக்குது பெரும் நோயாய்.
ஒவ்வொரு இளஞனும்
இருளில் அலைகிறான்
விடியவில்லை வெகுநாளாய்.
உன்னை உணர்ந்து
சமூகம் அறிந்து
வெடித்தெழு முதல் ஆளாய்.
♦அனங்கன்.
்

அருமையான புடம்போட்ட வரிகள். ஆதங்கத்திற்கு பதிலற்ற வினாக்குறிகள்.