ஜெ.பாஸ்கரன்/புத்தக அறிமுகம் 15

‘ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெற்ற கவிதைகள்’ – தொகுப்பு: அழகிய சிங்கர். (விருட்சம் – பிப் 25.)

2025 ஜனவரி 15 முதல் 31 வரை முகநூல், வாட்ஸ் ஆப் தளங்களில், கவிஞர் ஞானக்கூத்தன் நினைவாக, கவிதைப் போட்டி ஒன்றை நடத்தினார் நவீன விருட்சம், அழகிய சிங்கர்.

கவிதைக்காகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். அம்மாவின் பொய்கள், மேஜை நடராஜர் போன்ற கவிதைகளுக்குச் சொந்தக்காரர். கவிதைகள் என்றால் சிந்தனை, தெளிவு, சிக்கனம், ஆனந்தம் எல்லாம் இருக்க வேண்டும் என்பார்.

போட்டிக்கு வந்த 90 கவிதைகளில், 62 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார் அழகிய சிங்கர். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை எழுதியவர்களுக்கு, அந்தத் தொகுப்பினையே பரிசாக வழங்கினார். சென்னை ஆழ்வார்ப்பேட்டை அம்புஜம்மாள் காந்தி நிலையத்தில், குவிகம் சார்பில் இந்த விழா ஆர்பாட்டமின்றி நடந்தது!

கூட்டத்திற்கு வந்திருந்த, கவிதை எழுதியவர்கள், ஞானக்கூத்தன் கவிதை ஒன்றையும், தேர்ந்தெடுக்கப்பட்ட தன் கவிதையையும் வாசித்தனர். வித்தியாசமான நிகழ்வாக இருந்தது. இனி புத்தகம் பற்றி:

கவிஞர்கள், முதன் முறையாக கவிதை எழுதியவர்கள், கவிதை எழுத முயற்சித்தவர்கள் எனப் பலரது கவிதைகளும் இடம்பெற்றுள்ள இத்தொகுப்பு சுவாரஸ்யமானது.

முதலில் ஞானக்கூத்தனின் மூன்று கவிதைகளைப் போட்டிருக்கிறார். அதில் ‘கணுக்காலில் கொஞ்சம் வீக்கம்’ கவிதையின் கடைசி 5 வரிகள் மட்டும்….

……………..

……………..

டாக்டர் முன்பு உட்கார்ந்திருந்தேன்

வலது கணுக்காலில் வீகம் என்றேன்

என்றிலிருந்து வீகம் என்றார் டாக்டர்

நீங்கள் எடுத்துக் கொடுத்த மாத்திரையைத்

தொடங்கிய பிறகுதான் டாக்டர் என்றேன்.

தொகுப்பில் இயற்கை, சமூகம், நம்பிக்கை பற்றிய பல எளிமையான கவிதைகள். உதாரணத்திற்கு ஒன்றிரண்டு கவிதைகள்…

கி.சரஸ்வதியின் ‘ஜன்னலற்றவள்’ – கூறும் கிராமத்து ஜன்னல் வைத்த அடுப்படி, இயற்கையோடு நெகிழ வைப்பது.

……………….

………………..

புத்தம்புதுக் கண்ணாடி அடுப்பு

பீங்கான் கிண்ணங்கள்

பளபளக்கும் பாத்திரங்கள்

நவீனச் சமையலறை

என்று ஏகபோக வாழ்வு அவளுக்குக்

கிராமத்தின் ஜன்னல் வைத்த

அடுப்படியில்

அவள் பார்க்கக் கொய்யா மரமும்

குருவிகளும் இருந்ததை

மட்டும் அடிக்கடி நினைத்துக்கொள்கிறாள்.

ராஜ. கிருஷ்ணனின் ‘சந்ததி’ கவிதை சொல்லும் செய்தி சிந்திக்க வைப்பது.

குறைகள் நீங்கிச்

சந்ததி வாய்க்கக்

குறி கேட்க,

குலசாமிக்கு

ஆடு வெட்டிப்

பொங்கல் வைக்க

உத்தரவாயிற்று.

வெட்டப்பட்டது ஆடு.

இல்லாமல் போனது,

சந்ததி…..

வெட்டப்பட்ட ஆட்டுக்கு.

புதிய கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தொகுப்பைக் கொண்டுவந்திருக்கும் அழகிய சிங்கர் பாராட்டுக்குரியவர்.

வாசிக்கலாம்!

May be a doodle of ‎one or more people and ‎text that says '‎விஓ-சம் ١ W الر ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெற்ற கவிதைகள்‎'‎‎

All reactions:

11You, Kallidai Naanu, Subashini Tirumalai and 8 others

One Comment on “ஜெ.பாஸ்கரன்/புத்தக அறிமுகம் 15”

Comments are closed.