பயணம்/ஆர். வத்ஸலா

என்றுமே என்னை
ஜன்னல் ஓரத்தில்
உட்கார விட்டதில்லை
அம்மா
உன் கண்ணில் கரி விழும்
என்பாள்
ரயில் பயணங்களில்
கையை வெளியில் நீட்டி
ஒடித்துக் கொள்வாய்
என்பாள் பேருந்து பயணங்களில்
பாவம் அவள் விமானம் ஏறியதில்லை
இல்லாவிட்டால்
அவள்தான் அமர்ந்திருப்பாள் அதிலும்
ஜன்னல் ஓரத்தில்
ஏதாவது சாக்கு கூறி

அவளுடைய தாய்மை
என்றுமே
அவளுடைய குழந்தைமையைதான்
ஜயிக்க விட்டது