கானகம் நடுவேயான
ஒரு சாகசப்பயணம் நிகழ்ந்தது
முன்பொருமுறை.
இருப்பதை விடுத்து
பறப்பதை தேடிய
பாதை விலகிய பயண முனைப்பு.

அடர்ந்த மர நிழல்
சூரிய உண்மையை
ஒளித்துக்காட்ட-
புலியின் உறுமல்
தொலைவிலிருந்து
அபாயம் சொல்ல-
நெளியக்கிடக்கும்
விஷம்நிறை அரவங்கள்
பாதையினூடே-
கூட்டம் தொலைத்த
ஒற்றை யானையின்
வெருண்ட கால்கள்
மிதித்திடும் முனைப்பில்-
முரட்டு வாதம்
முன்வைத்து ஜெயிக்க
காட்டெருதுகள் முட்டிமோத-
தாவித்திரியும்
கொள்கைக் குரங்குகள்
ஜாலக் காட்டலாய்
கிளைத்தாவல்கள் புரிய-
இலையிடை பதுங்கும்
வண்ணக்கிளிகள்
நிறங்களாய் மயக்க-
துள்ளித்திரியும்
மான்கள் கூட்டமும்
குதித்துக் கடக்கும்
முயல்களின் துள்ளலும்
கீதமிசைக்கும்
பறவைகள் ஒலியும்
மகிழ்வினைத் தர-
சுமைகளைத் தாங்கவும்
தோளில்லை
துணையென வரவும்
ஆளில்லை.
நீண்டு விரியும்
கானக வழியில்
அதனதன் நிறத்தில்
வன ஜீவராசிகள்.
நகர நாளில்
நிஜ முகம் மறைத்த
மானுட வனத்துள்
வெவ்வேறு குணத்தில்
மானுட விலங்குகள்.
தினசரி
மனிதக் காட்டினுள்
புழங்கிய நாட்கள்
தைரியம் தர–
கானகப்பயணம்
சாகசப் பயணம் தாண்டி
விருப்ப உலாவென
ஆக்கியது–
அடுத்தடுத்த வனவேட்கை
வேட்டைகளில்…!
