ப.மதியழகன்/பெரிதினும் பெரிது

என்னைச் சுற்றி
பார்க்கிறேன்
அம்மாவாக
அக்காவாக
மனைவியாக
மகளாக
என் வாழ்க்கையின்
பாதியை
பங்கு போட்டுக்
கொண்டவர்கள் இவர்கள்
அம்மாவுக்கு வீடே உலகம்
அக்காவுக்கு புகுந்த வீடு
மனைவிக்கு அடுக்களையும் பாப்புவும்
மகளுக்கு செல்லும் டிவியும்
கனவுகளுடன் வளரும்
பெண் குழந்தைகளுக்கு
என்னால் சிறகுகள் தர
முடியாமல் போகலாம்
கொஞ்சம் அண்ணாந்து
பார்த்தால் தெரியும்
நான் விட்டுச் சென்றிருக்கும்
விசாலமான வானத்தை
பாத்திரம் தேய்த்து தேய்த்து
ரேகை தேய்ந்தவள் தான்
என் தலையெழுத்தையே
மாற்றிக் காட்டினாள்
உயிர்கள் அனைத்தும்
ஏங்குவது தாயின்
தாலாட்டுக்குத்தானே
இப்போது பாப்புவின்
சின்னஞ்சிறு உலத்தில்
அவள் பாட்டியாக
வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
இப்போது தான் புரிகிறது
அம்மா என்பது
வெறும் வார்த்தையல்ல
வாழ்க்கை என்று…