இலத்தூர் கி.சங்கரநாராயணன்/பெண்ணுரிமை

நாங்க என்ன ஒங்க வீட்டுக்
கிள்ளுக் கீரையா?
சட்டெனவே
சுட்டுவிட
வெள்ளை நாரையா?
மாங்கு மாங்கு
என்றுழைத்த
காலமெல்லாம் போச்சு!
தாங்கு தாங்கு என்று எம்மைக்
கொஞ்ச நாளும் ஆச்சு!

பட்டிமன்றப் பொருளல்ல
பாரதிப் பெண்கள்
தட்டிவிட உருண்டோடும்
பந்தல்ல நாங்கள்
தட்டிக்கேட்டு நியாயம்
கேட்கும் உரிமை யாவும்
மெட்டி தாலி கட்டிவிட்டால்
அடங்கியா போகும்?

சட்டம் தரும் உரிமை தனை
எட்டிடுவோமே
மட்டம் உயர்வு என்பதனை
வெட்டிடுவோமே
பட்டம் பதவி பெருமைதனைப்
பெற்றிடிவோமே
திட்டம் போட்டு நாட்டுநலம்
உயர்த்திடுவோமே!

எருக்காலே கலைத்தாலும்
தேய்வதில்லை நாங்கள்-
ஆண்மைச்
செருக்காலே குலைத்தாலும்
ஓய்வதில்லை நாங்கள்
தாய்மைப் பொறுப்பாலே
மீண்டும் மீண்டும் உய்வோம் நாங்கள்-
நேர்மைத்
துடிப்பாலே எதிர்கொள்வோம்
எத்தடையும் தாங்கி!