நாடோடி / மகரிஷி ததீசி

1000 நீதி கதைகள்

தேவர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த விருத்தாசுரனை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பகவான் விஷ்ணு அவர்கள் முன் தோன்றி, “ததீசி முனிவரின் எலும்பைக் கொண்டு விஸ்வகர்மாவை ஒரு வஜ்ராயுதம் செய்யச் சொல்லுங்கள். அதைக் கொண்டு விருத்தாசுரனைக் கொல்லலாம்” என்று சொன்னார்.
ஆனால் மகரிஷி ததீசி முனிவரின் எலும்பைப் பெறுவது எப்படி? அவரைக் கொல்லாமல் அந்த எலும்பைப் பெற முடியுமா?
அத்தனைக்கும் அவர் தவத்தைக் கெடுப்பதற்காக இந்திரன் எத்தனையோ அப்சரஸ்திரீகளை அவரிடம் அனுப்பி ஏமாந்து போயிருக்கிறான். கடைசியில் அவரைக்
கொல்லவும் முயற்சி செய்திருக்கிறான். ஆனால் ஒரு முயற்சியும் பலிக்கவில்லை. ஆகவே அவர் எலும்பைப் பெறுவது என்பது நடக்காத காரியம் என்று இந்திரன்
சொன்னான்.
அதற்கு விஷ்ணு சொன்னார் “அவர் பெரிய தர்மாத்மா. நீங்கள் அவரை யாசித்தால் அவர் மகிழ்ச்சியுடன் தன் உடலையே உங்களுக்குக் கொடுப்பார்.’ சரியென்று தேவர்கள் அவரிடம் சென்றனர்.
“மகரிஷி! தங்களிடம் ஒரு பொருளை யாசிப்பதற்காக நாங்கள் வந்திருக் கிறோம், தங்கள் உடல் எலும்பு எங்களுக்குத் தேவை. அதைக் கொடுத்து உதவ வேண்டும்” என்று கேட்டார்கள்.
அதற்கு ததீசி முனிவர், “இந்த சரீரம் நிலையற்றது. ஒருநாள் இது என்னை விட்டுப் போகத்தான் போகிறது. ஆகவே இதைப் பிடித்து வைத்துக்கொள்ள நான் முயற்சி செய்வானேன்! போவதற்கு முன் இது உங்களுக்கு உபயோகப்படுமானால் அதைவிட வேறு எனக்கு என்ன வேண்டும்?” என்று சொன்னார்.
உடனேயே ததீசி முனிவர் சமாதியில் அமர்ந்து தம் உயிரைத் தாமே விட்டார். அவருடைய எலும்பை எடுத்து இந்திரன் விஸ்வகர்மாவிடம் கொடுக்க, விஸ்வ கர்மாஅதைக்கொண்டு வஜ்ராயுதம் செய்தான். அந்த வஜ்ராயுதத்தைக் கொண்டு இந்திரன் விருத்தாசுரனைக் கொன்று, தேவர்களின் துயரைத் துடைத்தான்.

One Comment on “நாடோடி / மகரிஷி ததீசி”

Comments are closed.