பயணம்…/கு. மா. பா. திருநாவுக்கரசு

எந்த வழி வருவோம்?
எந்த வழி செல்வோம்?
வந்து போகின்ற
வாழ்க்கை ஒரு பயணம் தான்!
பணம் இருந்தால் தான்
பயணம் தொடருமென்றும்,
பயம் இருந்தாலோ
மரணமே முடிவென்றும்
மனம் ஒரு விதி எழுதும்!
ரயில் பயணிப் பார்வை தான்
எதிர்த்திசையில் பயணிக்கும்!
வெள்ளப் பெருக்கினிலோ
விரட்டும் வழி பயணிக்கும்!
நன்னீரை நோக்கி
நீர்த் திசைக்கு எதிர் நீந்தும்
சாலமன் மீனினம் போல் – சிலர்
உள்ளம் எதிர்த்திசையில்
ஊடுருவி எதிர் நீந்தும்!
இடையில் வரும் பந்தங்கள்
இடையிடையே தடம் மாறும்!
இறுதி வரை உறவுகள் சில
விடை கொடுக்கப் பயணிக்கும்!
பந்தமுள்ள உறவுகளும்
பந்தாடும் மனதை விட்டு
வந்த வழி விலகிவிடும்!
சொந்தம் என்று சொல்ல சில
இறுதிவரைக் கூட வரும்!
பயணிகள் வந்து போக
பயணம் மட்டும் சுழன்றிருக்கும்!
பயணத்தின் முடிவில்…
எந்த வழி சென்றோம்?
என்றறியாப் பயணம் இது!

One Comment on “பயணம்…/கு. மா. பா. திருநாவுக்கரசு”

  1. ‘சொந்தம் என்று சொல்ல சில
    இறுதிவரைக் கூட வரும்!
    பயணிகள் வந்து போக
    பயணம் மட்டும் சுழன்றிருக்கும்!”… அருமை..

Comments are closed.