
பயணித்துக் கொண்டே யிருக்கிறது
மனப் பறவை
எண்ணங்களால் ஆன
சிறகுகளை விரித்துக் கொண்டு!
உணர்வுகளாய் விரியும் வெளியில்
விமானம் போல பயணிக்கிறது!
வெளி விரிந்து கொண்டே இருக்கிறது;
பயணம் நீண்டு கொண்டே போகிறது;
மனப் பறவை!
அதன் சிறகுகள்
கழுகின் நேர்த்தியானச்
சிறகுகளைப் போல்
உயரத்திலும் ஏற்றுகின்றன;
விட்டில் பூச்சியின்
வெடவெடக்கும்
செதிலிறகுகள் போல்
கீழேயும் தாழ்த்துகின்றன!
பழைய சிறகுகளை உதிர்த்து,
புதிய சிறகுகளைத் துளிர்ப்பித்து
மீண்டும் பயணிக்கிறது
மனப் பறவை!
சில நேரங்களில்
உதிர்ந்த சிறகுகளே
திரும்பவும் ஒட்டிக் கொள்கின்றன!
திசை தெரிந்தும், தெரியாமலுமாக
பயணம் நீடிக்கிறது…
முகவரி தெரியாத
சரணாலயத்தைத்
தேடி!
