இராய செல்லப்பா
பகுதி-2

நேற்றுவரை:
‘இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! வழக்கு விசாரணைக்கு
வரும்போது, நீதிபதி முன்பு நான் என்ன பேசவேண்டுமென்று தெரியவில்லையே! எப்படி
என்னை விடுவித்துக் கொள்வது?’ என்று அரவிந்தர் குழம்பினார். அப்போது தான் அந்த
அதிசயம் நிகழ்ந்தது….
இனி…
பகவத்கீதையில் வில்லாளி அர்ஜுனனுக்குக் கீதையைப் போதித்த ஆயர்பாடி நாயகனாம்
ஸ்ரீகிருஷ்ணனையே முழுமுதற்கடவுளாகக் கருதியவர் விவேகானந்தர். அந்த
விவேகானந்தரே சிறைச்சாலையில் அரவிந்தரின் எதிரே சுவற்றில் தோன்றிக்
காட்சிகொடுத்தார். அரவிந்தருக்குத் தேவையான ஆன்மிகப் பயிற்சியை சுமார்
பதினைந்து நாட்கள் வழங்கிய பிறகே அக்காட்சி நின்றது. அது மட்டுமா?
‘அரவிந்தனே, ஒரு முக்கிய காரியம் நிறைவேற வேண்டியே நீ இங்கு
வரவழைக்கப்பட்டிருக்கிறாய். இந்திய சுதந்திரம் நீ போராடித்தான் வரவேண்டும்
என்பதில்லை. அது உரிய நேரத்தில் நிகழும். நீ செய்ய வேண்டிய காரியம் வேறொன்று
உண்டு. அதற்குப் பயிற்றுவிக்கவே உன்னை இங்கு வரவழைத்தேன்’ என்று
ஸ்ரீகிருஷ்ணன் அவர்முன்பு கூறி மறைந்தானாம். மாயக்கண்ணன் அல்லவா!
ஆனால் மீண்டும் மீண்டும் கண்ணனின் தோற்றம் அரவிந்தருக்குக் கிடைத்துக்கொண்டே
இருந்தது. ஆன்மிகமே அவரது எதிர்காலத் தேடலாக இருக்கப் போவதைத் தினமும்
ஸ்ரீகிருஷ்ணன் அவருக்குப் போதிக்கலானன். ‘நீதிமன்றத்தில் என்ன பேசவேண்டுமென்று
தானே குழம்பினாய்? மயங்காதே. நீ என்ன பேசவேண்டுமோ, அது ஏற்கெனவே
உனக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்தான்.
விசாரணை நாள் வந்தது. அரவிந்தர் சாட்சிக் கூண்டில் நிற்கிறார். ‘என்ன பேசினேன்
என்று எனக்கே தெரியாது. வார்த்தைகள் என் வாயிலிருந்து வந்துகொண்டே இருந்தன’
என்கிறார். அது மட்டுமன்றி இன்னொரு புது அனுபவமும் அவருக்கு ஏற்பட்டது. தன்
முன்னால் அமர்ந்திருக்கும் நீதிபதியாக ஸ்ரீகிருஷ்ணனே இருக்கக் கண்டார்.சுற்றிலும்
இருந்த போலீஸ் அதிகாரிகளும், நீதிமன்ற ஊழியர்களும், தனக்காக வாதாடவந்த
வழக்கறிஞரும், ஏனைய பொதுமக்களும் கூட, ஸ்ரீகிருஷ்ணனாகவே அவருக்குக் காட்சியளித்தனர்.
வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டிலிருந்த சில அடைப்படை
முரண்பாடுகளைக் குறிப்பிட்டு அவற்றைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகக்
கொள்வதாகக் கூறி, அரவிந்தரைக் குற்றமற்றவரென்று விடுவித்தார். அரசியல் போராட்ட
வீரராக நுழைந்த அரவிந்தர், ஆன்மிகவாதியாக மாறுவதற்கான இறைபோதனையோடு
ஓராண்டு சிறைவாசத்திலிருந்து வெளிவந்தார்.
சிறைமீண்ட அரவிந்தருக்குக் கல்கத்தா மக்கள் ‘உத்தர்பாரா’ என்ற இடத்தில் பெரும்
வரவேற்பு கொடுத்தனர். அங்கு தான், சிறையில் தனக்கு என்ன நடந்தது, எப்படி
ஸ்ரீகிருஷ்ணன் தன்னோடு தினமும் ஆன்மிக உரையாடல் நிகழ்த்தினான் என்பதை
அரவிந்தர் வெளி உலகுக்கு எடுத்துரைத்தார். (‘உத்தர்பாரா சொற்பொழிவு’ என்ற
தலைப்பில் சிறு நூலாக அரவிந்த ஆசிரமத்தில் அது கிடைக்கிறது).
ஆனால், போலீஸ் தரப்பும், அரசு இயந்திரமும் தமது தோல்வியை ஒப்புக்கொள்ளத்
தயாரில்லை. வேறு ஒரு புது வழக்கில் அரவிந்தரைச் சிக்க வைத்திட முயற்சி நடப்பதாகத்
தெரிந்ததும், சில நாட்கள் கல்கத்தாவிலேயே தலைமறைவாக இருந்தார். அம்மாதிரி
நீண்டகாலம் இருக்கமுடியாது என்பதால், மாற்று வழிகளைச் சிந்திக்கலானார். அப்போது,
அலிப்பூர் சிறையில் அவரை ஆட்கொண்ட அதே குரல், “பாண்டிச்சேரிக்குப் போ” என்றது.
இருள் மூடிய ஓர் இரவில், திசை தெரியாத ஆன்மிகத் தேடலை நோக்கி, வங்கக் கடலில்
துவங்கியது அவரின் படகுப் பயணம்.
அன்னாளில், பாண்டிச்சேரிப் பிரதேசம், ஃபிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ்
இருந்தது. ஆகவே, இந்திய சுதந்திர வீரர்கள், ஆங்கிலேயரின் கைகளில் பிடிபடாமல்
இருக்கத் தஞ்சம் புகும் நகரமாகப் பாண்டிச்சேரி விளங்கியது. “ஆனால் நான்
பாண்டிச்சேரிக்கு வந்தது, அரசியல் கைதிலிருந்து தப்புவதற்கல்ல. இறைவனின்
ஆணைக்குரலை ஏற்றே நான் வந்தேன்” என்று அரவிந்தர் தெளிவுபடுத்தி யிருக்கிறார்.
அரவிந்தரின் படகு பாண்டிச்சேரியை அடைந்தபோது அவரை முதன்முதலில்
வரவேற்றவர் யார் தெரியுமா? மகாகவி பாரதியார் தான்! (ஏப்ரல் 1910).
‘ஒரு மாபெரும் ரிஷி இன்று வரப்போகிறார், வாருங்கள், அவரை வரவேற்போம்’ என்று
தனது நெருங்கிய நண்பர்களோடு சென்று அரவிந்தரை எதிர்கொண்டு அவரை ஒரு தனி
இல்லத்தில் குடிவைத்ததில் பாரதிக்குப் பெரும் பங்கு உண்டு. அதை விடவும்,
அரவிந்தரின் யோகமுயற்சியின் ஆரம்ப நாட்களில், ஸ்ரீகிருஷ்ண வடிவத்திடமிருந்து
அவரைப் பராசக்தி வடிவத்திற்குத் திருப்பியவரும் பாரதியார் தான் என்று
கருதப்படுகிறது. அதன் பிறகே, இந்த உலகைப் படைத்த பேரன்னை, ஆதிபராசக்தியே
என்ற கொள்கையில் அரவிந்தர் முனைப்போடு தவமியற்றத் தொடங்கினார்,பாண்டிச்சேரியில்.
அவரது சகோதரரும் இன்னும் சில நண்பர்களும் அதே வீட்டில்
தங்கியிருந்தனர்.
“பாண்டிச்சேரிக்குப் போ” என்ற குரலால் அழைத்துவரப்பட்ட அரவிந்தருக்கு, தான்
மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று புலப்படவில்லை. பாரதியாரின் தொடர்பு
அவரைப் பராசக்தியிடம் கொண்டுசென்றது. பாரதியார் அவருக்குத் திருக்குறள், நாலாயிர
திவ்யப் பிரபந்தங்கள் போன்ற இலக்கியங்களைக் கற்பித்தும் பகவத்கீதை குறித்து
உரையாடியும் அவரின் ஆன்மதாகம் தணியாதவாறு பார்த்துக்கொண்டார். ஆனாலும்,
அரவிந்தருக்கு ஏதோ ஒரு குறை யிருப்பதாகவே பட்டது. இந்தியாவின் வறுமையும்
பிணியும் அறியாமையும் நீங்கிடுவதற்கான புதியதொரு யோகமுயற்சியைக்
கண்டறியவேண்டும் என்று தனக்குள் பீறிட்டெழும் பேரவா, ஏனோ வல்லமையற்று
இருப்பதாகத் தோன்றியது. வெறுமையாக நாட்கள் கழிந்தன.
அலிப்பூர் சிறைச்சாலையில் தினமும் தனக்குக் காட்சிகொடுத்து ஆட்கொண்ட இறைசக்தி
ஏன் இப்பொழுது தன்னிடம் மீண்டும் வரவில்லை என்பது அவருக்குப் புரியாத புதிராக இருந்தது.
அந்தப் புதிருக்கு விடையாக வந்தார், ஃபிரான்சிலிருந்து ‘மிர்ரா அல்ஃபாஸா’ என்ற
பெண்மணி. கண்ட உடனேயே இவர் தான் பராசக்தியின் வடிவம் என்று
புரிந்துகொண்டார், அரவிந்தர். (மார்ச் 29, 1914).
முதல் முறையாக அரவிந்தரைக் கண்டவுடன், மிர்ராவுக்குத் தோன்றியதும் அதே
போன்றதோர் ஆன்ம உணர்வு தான். ‘இவர் தான் இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி நாயகன்’
என்று அரவிந்தரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். ‘தன்னையே முழுமையாகச்
சரணாகதியாக்கிய அத்தகைய நமஸ்காரத்தை நான் வேறெங்கும் கண்டதில்லை’ என்று
அரவிந்தர் எழுதினார்.
அந்த மிர்ரா அல்ஃபாசா அம்மையார், அரவிந்தரின் யோக முயற்சிக்கான ஆத்ம
சக்தியாய்ப் பரிணமித்திடவும், “ஸ்ரீஅன்னை” என்னும் புனிதப்பெயர் தாங்கியவராய்ப்
பின்னாளில், அரவிந்தருக்குப் பிறகு அவருடைய பூரண யோகத்தைப் பூமியில்
நிறைவேற்றிடவும் உறுதி பூண்டவராய், பாண்டிச்சேரிக்கு நிரந்தரமாகத் தங்கிட வந்த
நாள் தான், ஏப்ரல் 24ம் தேதி. (1920). அரவிந்த ஆசிரமத்தில் அது ஒரு புனித நாளாகக் கருதப்படுகிறது.
(தொடரும்)

அது ஒரு நிலாக்காலம், பொற்காலம் என்று எதையாவது யாராவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனாலும், ஒரு வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை, ஒரு நூற்றாண்டு காலம் நம் பாரத பூமியில் நிறைய ஜீவன்முக்தர்கள் ஸ்துல சரீரத்தில் நடமாடியிருக்கிறார்கள் என்பது நிகழ்காலத்தில் அவ்வகையில் ஒருவரையாவது தேடிக் கண்டுபிடிக்க முடியாத இயலாமையில் நினைத்துப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.
இவர்களில் சிலர் அற்புதங்கள் (சித்து விளையாட்டு அல்ல) நிகழ்த்தியவர்கள். சிலர் முக்தியடையும் நிலையில் அற்புதங்களை உணரச் செய்தவர்கள், சிலர் தத்துவார்த்தமான விளக்கங்களில் லட்சக்கணக்கான மக்களை ஆழ்த்தியவர்கள், யோகிகள்.
என் சிற்றறிவுக்கு எட்டியவரை ஒரு சிறு வரிசையைத் தயார் செய்து பார்த்தேன். அதில் மகான் ஸ்ரீ அரவிந்தருக்கும் மதர் எனப்படும் அன்னைக்கும் நிச்சயமாக இடம் உண்டு.
ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், அன்னை, சாய்பாபா, மெஹர் பாபா, கஜானன் மஹராஜ், சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மகரிஷி, சர்க்கரை அம்மாள், பாம்பன் சுவாமிகள், பாடகச்சேரி ஸ்வாமிகள், வள்ளலார், பரமாச்சாரியார், நரசிம்ம பாரதி ஸ்வாமிகள், அபிநவ வித்யாதீர்த்தர், ஞானானந்தகிரி ஸ்வாமிகள், விசிறி ஸ்வாமிகள், பூண்டி மகான், ஜே. கிருஷ்ணமூர்த்தி இவர்களுடன் மகாத்மா காந்தியையும் மகாகவி பாரதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒவ்வொருவர் சரித்திரமும் தனித்தன்மை வாய்ந்தது. நிறையப் பேர் நிறையப் பேரை பற்றி நிறையத் தடவை எழுதியிருக்கிறார்கள்.
ஆனாலும் ஒவ்வொரு முறையும் ஒரே சரித்திரத்தை வெவ்வேறு வடிவங்களில் படிப்பது ஸ்வாரஸ்யமாகவேதான் இருக்கிறது.
அந்த வகையில் மகான் அரவிந்தர் பற்றி தேர்ந்த எழுத்தாளர் ஒருவர் அனுபவித்து எழுத ஆரம்பிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அதிலும் நமக்கு உகந்த ஒரு மகானைப் பற்றிய எழுத்தைப் படிப்பது உண்மையில் குதூகலமான விஷயம்.
நல்ல ஆரம்பம். நிறைய வரும் என்று எதிர்பார்க்கலாம்.