பகுதி-3
ஸ்ரீஅன்னை என்னும் அவதாரம்

முதல் முறையாக அரவிந்தரைக் கண்டவுடன், மிர்ராவுக்குத் தோன்றியதும் அதே
போன்றதோர் ஆன்ம உணர்வு தான். ‘இவர் தான் இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி நாயகன்’
என்று அரவிந்தரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். ‘தன்னையே முழுமையாகச்
சரணாகதியாக்கிய அத்தகைய நமஸ்காரத்தை நான் வேறெங்கும் கண்டதில்லை’ என்று
அரவிந்தர் எழுதினார்.

ஸ்ரீஅன்னை என்று பக்தியோடு அழைக்கப்படும் மிர்ரா அல்ஃபாஸா அம்மையார்,
ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1878 ஃபிப்ரவரி மாதம் 21ம் நாள் அவதரித்தார்.
தந்தை மாரிஸ் அல்ஃபாஸா, வங்கித் தொழிலில் இருந்த துருக்கி நாட்டு யூதர். தாயார்
மத்தில் இஸ்மலூ, எகிப்து நாட்டு யூதர். மிர்ராவுக்கு ஒரு அண்ணன் இருந்தார். ஃப்ரெஞ்ச்
அரசின் அதிகாரியாக ஆஃப்ரிக்கா (காங்கோ) வில் நீண்ட காலம் பணியாற்றி, கவர்னர்-
ஜெனரலாக ஓய்வுபெற்றார். (அன்னையின் ஆன்மிக வாழ்க்கையில் இவர்களுக்கு எந்த
முக்கியத்துவமும் இல்லை).
சிறு வயது முதலே தான் இந்த உலகத்தைச் சேர்ந்தவள் இல்லை என்ற எண்ணம்
மிர்ராவுக்கு இருந்ததாம். உணவருந்தும் வேளையிலோ அல்லது சாதாரணமாக
நாற்காலியில் அமர்ந்திருக்கும் பொழுதோகூட, மிர்ராவுக்குத் திடீரென்று தியான உணர்வு
வந்துவிடுமாம். தன்னை மறந்து ஆன்மிக இன்பத்தில் திளைத்துவிடுவாராம். (அவரது
அன்னைக்கோ இது எரிச்சல் ஊட்டுவதாகவே இருந்ததாம்). அவருக்கு 11 வயது முதல் 13
வயது வரையிலான பருவத்தில், பல்வேறு ஆன்மிக அனுபவங்கள் ஏற்பட்டு, அதனால்
இறைவன் என்ற ஒருவன் இருப்பதையும், முயன்றால் அவனோடு இணைய முடியும்
என்பதையும் அவர் புரிந்துகொண்டாராம். தன் உடலை விட்டு வெளியேறி மீண்டும்
உட்புகுவதான சித்துவேலையும் அவருக்கு அப்போது கைவந்ததாம்.
ஒவ்வோர் இரவிலும் தன் உடலை விட்டுக் கிளம்பி, தன்னுடைய பொன்னிற ஆடையின்
கீழ் பாரிஸ் நகரம் முழுதுமே அடங்கிவிடும்படி விண்வெளியில் அவர் பறப்பாராம். மேலே
மேலே அவர் பறக்க, துன்பமும் துயரமும் கொண்ட மக்கள், தாங்களும் பறந்து சென்று,
அவருடைய ஆடையைப் பற்றிக்கொண்டு தங்கள் துயர் தீர்க்கக் கோருவார்களாம்.
ஆடையைத் தொட்ட கணமே தத்தம் துயர் நீங்கி, மலர்ந்த முகத்துடன் இறங்குவார்களாம்.
இம்மாதிரி கிட்டத்தட்ட ஓராண்டு வரை தனக்கு நேர்ந்ததாக ஸ்ரீஅன்னை (பின்னால்)
எழுதினார்கள். (அவரது 13வது வயதில்). அப்போதிருந்தே தனக்கு முற்பிறவி ஞாபகங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
பொதுமக்கள் பயிலும் பள்ளிகளில் அவரைப் படிக்கவைக்க அவரது தாயாருக்கு விருப்பம் இல்லை. (அவர், எகிப்திய ‘பாரோ’ மன்னர்களின் வம்சத்தில் வந்தவர் என்றும் ஒரு கருத்து உண்டு. இல்லை யென்றாலும் கூட, மிக வசதியான குடும்பம் என்பதாலும் இருக்கலாம்). ஆகவே பெரும்செல்வந்தர்கள் பயிலும் ஒரு சிறப்பான பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார்.
14 வயது வந்தவுடன், ஓவியம் பயில அனுப்பப்பட்டார். 16வது வயதில் பாரிஸ் நகரின்
உயர்ந்த கலைக்கல்லூரியில் குஸ்டாவ் மோரோ என்ற ஆசிரியரிடம் பயின்றார். தனது
ஓவியங்களை பாரிஸ் கலைக்கூடத்தில் அரங்கேற்றவும் செய்தார். 19வது வயதில்
(1897ல்) ஹென்றி மொரிஸே என்ற ஓவியரைத் திருமணம் செய்துகொண்டார். (அவரும்
குஸ்டாவ் மோரோவின் மாணவர் தான். அவருடைய தகப்பனாரும் மிகப் பிரபலமான
ஓவியராம். மிர்ராவின் பாட்டியின் ஏற்பாடு தான் இந்தத் திருமணம்). மிர்ரா – மோரிஸே
தம்பதிக்கு ஆண்ட்றீ என்ற ஒரு மகன் பிறந்தார். (இவர் பின்னாளில் பாண்டிச்சேரியில்
வந்து தங்கியிருந்து, ஸ்ரீ அன்னை அவர்கள் மறைந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின் 1982ல்
இயற்கை எய்தினார்.)
ஆன்மிக அனுபவங்கள்
மிர்ராவுக்கு 19-20 வயது இருக்கையில் ஆன்மிகப் புத்தகங்கள் நிறைய படிக்கக்
கிடைத்தன. விவேகானந்தரின் ‘ராஜயோகம்’ என்ற நூலும் அவற்றில் ஒன்று. ஒருமுறை
அவரைச் சந்தித்த இந்திய நண்பரொருவர், ஸ்ரீகிருஷ்ணனை உள்ளுறை தெய்வமாக
ஏற்கும்படியும், பகவத்கீதையைப் படித்துப் பின்பற்றுமாறும் கூறினாராம்.
இவையெல்லாம் ஆன்மிகப் பாதையில் அவரை நாளொருமேனியாக முன்னேற்றிக்
கொண்டுவந்தது. அதற்கு உதவுவது போல், பல ஆன்மிக குருமார்கள் அவ்வப்பொழுது
தியானத்தில் தோன்றி அவரது ஐயங்களைப் போக்கி வந்தார்களாம். அதற்கெல்லாம் சிகரமாக, 1904ம் ஆண்டில் அவரது தியானத்தில் ஒரு மாநிற உருவம்
அடிக்கடி தோன்றி அவருக்கு உற்சாகமளித்து வந்ததாம். அதை அவர் ‘கிருஷ்ணா’ என்று
பெயரிட்டு அழைப்பாராம்.
1905ல் அல்ஜீரிய நாட்டு லெம்ஸன் நகரில் மாக்ஸ் தியோன் என்ற மந்திரவாதியிடம்
அவர் மறைபொருளான மந்திரதந்திரங்களை முறையாகக் கற்றுக்கொண்டார். அவரது
மனைவியான அல்மா தியோனும் ஒரு மந்திரவாதியே. அவரிடமிருந்தும் மிர்ரா பல
விஷயங்களைத் தெரிந்துகொண்டார். அடுத்தடுத்து ஏழுமுறை கூடு-விட்டுக்-கூடு-பாயும் ஸித்தியை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.
1908ம் ஆண்டில் மிர்ராவும் ஹென்றியும் விவாகரத்து பெற்றனர். (மகன் ஆண்ட்றீ,
தகப்பனாரிடமே தங்கிவிட்டார்). மிர்ரா, தனது சகோதரன் மேத்யூவுடன் பாரிஸின் வால்-
டி-கிரேஸ் என்ற தெருவில் 49ம் எண் வீட்டிற்குக் குடிபோனார்.
(2006ம் ஆண்டில் என் மகன் அரவிந்த கார்த்திக், ஒரு இசைப் போட்டிக்காக பாரிஸ்
சென்ற போது, இந்த வீட்டை நேரில் பார்க்கும் பேற்றை அவனும், அவனுடன் சென்ற என்
மனைவியும் மூத்த மகளும் பெற்றனர். அப்போது எடுத்த படம் தான் இது.
செடிகளுக்குப் பின்னால் இருக்கும் வீடு).
1910ல் மிர்ராவுக்கு, தன் ஜீவனின் மையத்திலேயே இறைவன் அமர்ந்திருப்பதாக ஓர்
உணர்வு தெரிந்தது. அது முதற்கொண்டு இறைவனை அடைதலையே வாழ்வின்
இலட்சியமாகக் கொள்ளலானார். ஆன்மிகத்தில் தன்னைப் போலவே நாட்டமும்
அனுபவமும் கொண்டிருந்த பால் ரிச்சர்டு என்பவரை 1911ல் மறுமணம்
செய்துகொண்டார். இருவரும் இணைந்து ஆன்மிகத் தேடலில் ஈடுபடலாயினர்.
ரிச்சர்டு,ஃப்ரெஞ்ச் பாராளுமன்றத்திற்குப் போட்டியிட விரும்பி, ஃப்ரெஞ்ச் வாக்குரிமையுள்ள பாண்டிச்சேரிக்கு, வாக்கு சேகரிக்கும் பொருட்டு, அதற்குச் சில மாதங்கள் முன்புதான் வந்து போனவர். அப்போது அரவிந்தரை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். எனவே, அந்த விவரங்களை மிர்ராவிடம் பகிர்ந்துகொண்டார். கேட்கவேண்டுமா? உடனே அந்த ஆன்மிகஞானியைத் தரிசனம் செய்தாக வேண்டுமென்ற தீராத ஆவல் மிர்ராவுக்கு ஏற்பட்டது. ஆனால் நாடுவிட்டு நாடு பயணம் திடீரென்று கிளம்ப முடியுமா? 1914ல் தான் முடிந்தது. ஆனால் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் கடிதம் மூலம் அரவிந்தரோடு அவர்கள் தொடர்பில் இருந்தனர்.
(தொடரும்)

One Comment on “பாண்டித் தாமரையும் பாரிஸ் மல்லிகையும்/இராய செல்லப்பா”
Comments are closed.