ஹரணி/முதலிரவு

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை

விதவையாகத் தொடங்கும்
முதலிரவு இது..
கைப்பிடித்து நடந்த முதலிரவில்
கைவிடமாட்டேன் என்று சொன்னவன்
முப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தான்
மூன்று குழந்தைகள் பிறந்த
முதலிரவுகளிலும் அருகிலேயே
இருந்தான்
தன் அப்பாவையும் அம்மாவையும்
பறிகொடுத்த முதலிரவிலும்
பிள்ளைகளைச் சாப்பிடவைத்து
உறங்கவைத்துச் சென்றான்..
யாரிடமும் பகையில்லை
பேரன்பு ஒன்றே காட்டினான்
பொறாமைப்படவே வாழ்ந்தோம்
பிள்ளைகள் வளர்ந்து நிற்கிறார்கள்
வாழத் துடிக்கிறார்கள்
அவனின் அடையாளத்துடன்
இனி ஒவ்வொரு இரவிலும்
அவர்களுக்காக வாழ்வேன்.