லட்சுமிஹர் /மெழுகு 

இதுவரை ஒருநாள் கூட அவர்களின் புனித நூலை வாசித்தது இல்லை. மண்டியிட்டு யாதுமாகி நிற்கும் ஒருவனிடம் தனது உயிர் பலன்களை வடியும் மெழுகில் பிரகாசிக்க எண்ணியதும் இல்லை. ஏதாகினும் முறையிட ஒருவனை இதுநாள் வரை இழந்துவிட்டோம் என்கிற சிறு வருத்தம் கூட இருந்ததில்லை. இப்படி எத்தனையோ இல்லைகளை எனக்குள் சுமந்து அலைந்து திரிந்து கொண்டிருந்ததை அறியவே  அங்கு வந்தடைந்திருப்பேன் போல. அவ்விடத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் நான்கு மணி நேரத்தைக் கழிக்க வேறு போக்கிடம் இல்லை என்பதே அதன் கூடுதல் சிறப்பு. அங்கே வருவோர் போவோரைப் பற்றிய எந்த கேள்விகளும்  உலாவவில்லை. அதன் உந்துதலில் என்னுடைய கால்கள் எப்போதும் தேவசகாய தேவாலயத்தை நோக்கி ஓடியது. பின் அது ஒரு விளையாட்டைப் போல மாறியது . 

என்னுடைய விளையாட்டை ரசிக்க ஊக்கப்படுத்த நண்பர்களும் கிடைத்தனர்.அதில் முதன்மையான ஒருத்தி பேபி மற்றும் அங்குச் சுற்றியுள்ள மரங்களும். என் வருகைக்காக அவள் எப்போதும் காத்திருப்பதாகச் சொல்கிறாள். அதன் பொருள் விளங்கிட இன்னும் இன்னும் என்று நிறைய விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே சென்றாலும், முடிவில் விளையாட்டைத் தொடங்கலாம் என்று முடிக்கும் அவளிடம் எனக்குப் பரிசளிக்க சில வேடிக்கை நிகழ்வுகளே இருந்தன. அப்படிப்பட்ட நிகழ்வுகளை நான் ஓடி ஓடிச் சேர்த்துவைத்தேன். ஒவ்வொருமுறையும் மறந்திராமல் அதை அவளுக்கு எடுத்து வரக் கடமைப்பட்டிருந்தேன். அதைக் கேட்டுச் சிரிக்கும் போது உதிர்ந்த பற்களை நினைவுப்படுத்துவாள். அப்படி ஒருநாள் என்னிடம் ‘ உனக்குச் சொல்ல இத்தனை கதைகள் இருக்கிறது , எனக்கு தேவசகாயத்தின் கதை தான் தெரியும் ‘ என்றாள் வருத்தத்துடன். அப்போது தொடங்கியது எங்களின் அந்நியமான விளையாட்டு. அவளுக்கு மட்டுமே தெரிந்த பெருங்கதையின் ஒரு ரகசியத்தை அன்று என்னிடம்  கூறினாள் . 

அதன் விவரிப்புகள் இதுநாள் வரை தான் காத்து வந்த ஒன்றிலிருந்த தேவதூதனின் வாய்மொழிகளில் வெடித்துச் சிதறினாள். ‘இதெல்லாம் உண்மை என்று உன்னால் நம்ப முடியாது அல்லவா..’ என்றவளுக்கு . என்னிடம் கூற எவ்வளவோ சொற்கள் இருந்தாலும் அவற்றை பயன்படுத்தக் கூடாது என்கிற முடிவிலிருந்தேன். என் முக பாவனையைப் புரிந்து கொண்டவள் , நேராக அக்கதையின் ஆரம்பத்திற்குக் கொண்டு போய் நிறுத்தினாள். 

அவள் எனக்கு வார்த்தைகளால் சொன்னவற்றை கண்கூடாகப் பார்க்க நேர்ந்தது. இத்தனை நாள் இங்கு எத்தனையோ முறை சுற்றி திரிந்த போதும் கண்ணில் படாமல் இதைக் கடந்து போனது இவளைப் போன்ற ஒருத்தியின் கூற்றுக்கு இணங்க வேண்டும் என்பதற்காகத் தான் அன்றி அதை எப்படிப் புரிந்து கொள்ள. அவளது கண்கள் முழுவதும் என்னை நோக்கியே இருக்க அதனிலிருந்து ஒரு அசைவு கூட என்னை அவளின் பால் மன்றாட வைத்து விடும் என்பதில் தீர்க்கமாக இருந்தேன். அவளும் அதை அறிந்தவள் போன்று என்னை எதன் பொருட்டும்  விலங்கிட விரும்பவில்லை.  ஆரம்பத்தில் சொன்ன வார்த்தைகளே முதலில் என் காதுக்குள் சென்றடைந்தது. அது அவளிடம் ஒரு நாள் என்னுடைய கதையைச் சொல்லி முடிக்கும் போது, அவள் மீண்டும் மீண்டும் என்னிடம் ‘ நீ முழுமையாக இக்கதையை முடிக்கவில்லை , எங்கோ அதில் சிக்குண்டு கிடக்கிறாய் அது எப்போதும் உன் அருமருந்தைச் சுவையுடன் பருக அனுமதிக்காது ..’ . கிழவி கூறியதை போல என் சுவையை இழக்க வைத்துக் கொண்டே இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதை வேறு பக்கம் திசைதிருப்ப அவளின் பெயரைச் சத்தமாகச் சொல்லிச் சிரித்தேன் ..’பேபி ..பேபி …’ .

தேவதூதனின் கடைசி தருணங்களைப் பற்றிப் பொறிக்கப்பட்டிருந்த  புகைப்படத்தின் முடிவில் சதுர வடிவத்தினால் ஆன ஒரு கல்படுகை சில கீறல்களைக் கொண்டு இருந்தது. அதன் இடுக்குகளில் காகிதங்கள் சொருகப்பட்டிருந்தது. இயல்பாய் ஒரு சுற்றுலாப் பயணி அதைக் கடந்து போய் விடக் கூடிய ஒன்றாகவே அது இருந்தது. அப்படியே இது நாள் வரை அதை ஏறிட்டும் பார்க்கவில்லை. எங்களின் விளையாட்டு அக்கதையின் ஆரம்பப் புள்ளியிலிருந்தே தொடங்கியது.‘ இங்கே எழுதப்படும் யாவும் வேண்டுதல்களே.. அதை நீ என்னுடன் சேர்ந்து வாசிக்கப் போகிறாய்..’ என்றவளின் குரல் வயசுக்குத் தகுந்தது போல இல்லை அதில் நடுக்கம் இல்லாத ஒரு நேர்த்தி இருந்தது. என்னுள் மேலெழும்பிய ஆர்வத்தின் வெளிப்பாடாய் என் கைகள் அதன் மேல் நீண்டது அதைத் தடுத்தவள் ‘ அதைக் கைக்கொள்ள நீ முதலில் உன் வேண்டுதலை இங்கு நிறைவேற்று ‘ என்று அவளின் சேலை மடிப்பிலிருந்த காகிதத்தை நீட்டினாள் .நான் பதிலுக்கு நீ ..? என்கிற பார்வையில்.. 

“அது எப்போதோ நிகழ்ந்தேறிவிட்டது.ஆகையால் இது உன் தருணம்.”என்றாள். 

நான் என்ன செய்ய என்பது போலப் பார்க்க ‘ உன் வேண்டுதல், மன்னிப்பு எதுவாகினும் இதில் நிரப்பு ..’ என்று என்னிடம் நீட்டினாள். அதை வாங்கிக் கொண்ட பின் அதில் என்ன எழுதுவது என்று தெரியாது அவளின் பெயரான பேபியையும் என்னுடைய பெயரையும் சேர்த்து எழுதி அவளிடம் நீட்டினேன். கிழவி கண்களால் கல்படுகையில் அதைச் சேர்த்து விடு என்பதைத் தெளிவுபடுத்த. பல கீறல்களில் எனக்கான ஒன்றில் சேர்த்தேன் . தொடங்கலாம் என்பது போல என்னிடம் ‘ உனக்குப் பிடித்த ஒன்றை,உனக்குத் தோன்றும் ஒன்றை  நீ இதிலிருந்து எடுத்துக் கொள் ‘ என்று கிழவி சொன்னாள். நாங்கள் இருவரும் அங்கு இருப்பதைச் சிலர் எங்களைக் கடந்து போகும் போது பார்த்தனர், கண்டிப்பாக அவர்கள் இவ்விடத்திற்கு புதிதில்லை அவர்களின் பார்வையில் இருக்கும் தயக்கம் இங்கு நிற்பதை பற்றியதா..? இல்லை இந்த கிழவியுடன் நிற்பதா..? என்பதை யூகிக்க முடியவில்லை. எனக்கு அக்காகிதத்தில் என்ன எழுதியிருக்கப் போகிறது என்கிற ஆர்வமில்லா ஒத்திசைவிலேயே இருந்தேன்.ஏனென்றால் ஒரே மாதிரியான வேண்டுதல்கள் எங்கும் வியாபித்துக் கிடக்கும் போது இந்த கிழவி சொன்ன கதை நான்கு மணிநேரத்திற்கு நல்ல பொழுது போக்கு அவ்வளவவே. 

எதிர் இருந்தவள் நான் அதைத் திறந்ததும் படித்துக் காட்ட வேண்டும் என்று எண்ணியிருப்பாள் போல ,ஆனால் நானோ அதை வாசித்து விட்டு அங்கேயே வைத்து விட்டேன். அவள் அதை எதிர்பார்க்கவில்லை. அது அவளுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.

 அவள் சொன்ன கதையின் மீது நான் நம்பிக்கையற்று அப்படிச் செய்தேன் என்று புரிந்து கொண்டது போன்ற முக பாவனையில் அங்கிருந்து வேகமாக நகர்ந்து போய் அருகில் புதையுண்ட  தேவசகாயத்தின் முன் கண்களை மூடி அமர்ந்து கொண்டாள். கண்டிப்பாகத் தெரியும் நான் அவளைப் பின்தொடரப் போவது இல்லை என்று. அக்கதையின் பொருட்டு எனக்கு இன்னொரு காகிதத்தை எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. நான் எழுதிய காகிதத்தின் கீறல்களையும் மறந்திருந்தேன். அவை அதனோடு கலந்து விட்டிருந்தது . 

அங்கிருந்து நேராக மருத்துவமனைக்குச் சென்றேன் எப்போதும் போல வெகு தொலைவிலிருந்து வருவதால் ஒரு முன்னுரிமை உண்டு. அரை மணி நேரத்திலேயே மருத்துவரைச் சந்தித்து விட்டுக் கிளம்பினேன். மனதிற்குள் வேண்டுதல் நிரம்பிக் கிடந்தது.கிழவி விளையாட்டு தொனியில் தூக்கி எறிந்த ஒன்று நம்மை வதைக்கிறதே என்று தோன்றியது. அப்படியான ஒன்று அதில் எழுதப்பட்டிருக்கும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அதை வாசித்ததும் எனது கைகள் நடுங்கியது, முகமெல்லாம் வேர்க்க அதனோடு பயணிக்கும் சக்தி என்னிடம் இல்லை என்பதை அப்போதே உணர முடிந்தது. வேண்டுதல்களும் எத்தனை ரகசியம் ஆனது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதை என்னிடமிருந்து உதற வேண்டும் இல்லையேல் அதன் உச்சரிப்பு என் சவத்திற்கு முன் இடப்படும் மலர் மாலைகள். அதில் அலங்காரம் என்ற எதுவும் இல்லை. இதையெல்லாம் ஆரம்பித்த  அவளிடமே அதைத் தூக்கி எறிந்து விட்டு வரவேண்டும் என்கிற கோபம் எழுந்தது . 

முடிந்தவரை அங்கு எவ்வளவு வேகமாகச் செல்லமுடியுமோ சென்றேன். எப்போதும் தேவாலயத்தின் வெளியே அவள் இருக்கும்  இடம் காலியாக இருந்தது. சுமார் ஆறு மாத காலங்களில் அவளை காண நேர்ந்த இடத்தில் வெறும் ஒரு மூட்டை மட்டுமே இருக்கிறது. அதன் வடிவம் அவளை ஒத்து இருந்தது. அதை நெருங்க நெருங்க மனம் பதட்டம் அடையத் தொடங்கியது. அதைத் திறந்து பார்க்கத் தைரியம் இல்லாமல் அங்கே தயங்கி நின்று கொண்டிருந்த எனக்கு ‘ எங்கோ சிக்குண்டு கிடக்கிறாய் ..’ என்று கிழவி சொன்னது நினைவுக்கு வரக் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது, காணும் யாவும் எத்தனை பிரதிகளாக ஒப்பற்று பிரிகின்றன என்பதை அறியாது அம்மூட்டையைச் சுமக்க தொடங்கி விட்டேன். நேராக அதை கீறல்கள் கொண்ட கல் படுகைக்குக் கொண்டு போய் அதன் அருகில் வைத்து விட்டு அமைதியாக நின்றிருந்தேன்.அக்கிழவியின் குரலைத் தேடி தேவாலயம் முழுவதும் சுற்றி வந்தேன். எத்தனை முறை சுற்ற,கிழவி தவழ்ந்து போய்க் கொண்டு தான் இருப்பாள் அவளை எப்படியோ பிடித்து விடலாம் என்று மூளை கால்களை விடாமல் செயலூக்கத்திலேயே வைத்திருக்க எனது தேடுதல் இன்னும் நின்றபாடில்லை . 

‘உனக்காக எத்தனையோ கதைகளைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறேன், ஆனால் எனக்கு நீ கொடுத்திருக்கும் அன்பைப் பார்த்தாயா ..உனக்கு என்ன கோபம் ..? நான் அதை உனக்கு வாசித்துக் காட்டியிருக்க வேண்டும் அவ்வளவு தானே ..வா நான் உனக்கு அதை வாசித்துக் காட்டுகிறேன் ..இல்லை .. எனக்கு அது மனப்பாடமாக இருக்கிறது. அதன் ஒவ்வொரு வார்த்தையையும் என்னால் சொல்ல முடியும் …நீ எத்தனை முறை கேட்டாலும் அதை உனக்கு நான் சொல்கிறேன் ..பேபி ..பேபி .. அடியே கிழவி ..உன்னை தான் .. நீ சொல்வது போல நான் சுவைக்கும் அருமருந்து கூட செரிக்கவில்லை ..அன்றே உன்னிடம் நான் கவனமாக இருந்திருக்க வேண்டும் ..என்னுடைய பிணியை இது இன்னும் கூட்டுகிறது ..ஏற்கனவே இந்த சிறு வயதில் என்னைத் தொற்றிக்கொண்ட நோய் என்னை போட்டு உலுக்க இந்த வேண்டுதலில் என்னைத் தள்ளிவிட்டு.. வேடிக்கையும் பார்த்து.. எங்கோ ஓடிப் போய் ஒளிந்தும் கொண்டாய்.. எதற்காக இந்த மூட்டையை மட்டும் இப்போது இங்கு வைத்திருக்கிறாய்.. உனக்குத் தெரியும் நான் வருவேன் என்று ..அதற்கான எற்பாடுதானே இது. அதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அப்பாவி என்று என்னை நினைத்துச் சிரிக்கிறாய் ..உனக்கு வயது முதிர்வால் உதிர்ந்த பற்களாக அது இருக்க வாய்ப்பில்லை… இதைப் போன்ற விளையாட்டில் ஒரு மாவீரன் உன்னை  வெற்றி கொண்ட தடயம் அது. ஒரு நாள் உன்னுடைய அழுக்கு மூட்டையைப் பிரிக்கும் தைரியம் எனக்கு வரும் போது நான் வேர்விட்டு அண்ணாந்து பார்க்கும் மரமாய் இருப்பேன் ….அடியே கிழவி .. உன் தேவதூதனிடம் போய் சொல் நான் இங்கு தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.. உள்ளே அவரை பத்திரமாக இருக்கச் சொல் ..’

கல்படுகையின் மேல் எனது முழு கவனமும் இருந்து வந்தது, அங்கு ஒவ்வொருவரும் தங்களின் வேண்டுதல்களை எழுதிக்கொண்டு தானே  இருந்தனர், அவ்விரவு அம்மூட்டையைத் தீயிட்டுக் கொழுத்திட விரும்பினேன். அதற்கு முன் நான் படித்த வேண்டுதலை அக்கிழவியின் காதுகள் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த தேவாலயத்தின் காற்றில் கலந்திட விரும்பினேன். அதைச் செய்வதால் என்ன ஆகப் போகிறது எதையும்  நம்மால் தடுத்திட முடியுமா, இல்லை.அப்படிச் செய்தால் அவளின் கூற்றை நியாயப்படுத்துவது போல ஆகிவிடும் என்று தோன்றியது. ஏனென்றால் அவ்விளையாட்டில் நாமும் தானே முழு மனதோடு பங்கெடுத்தோம், ஆனால் அவள் மீது மட்டும் முழு பலியைத் தூக்கிப் போடுவது என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். நான் சொன்ன கதைகளைக் கொண்டு என்னை ஓரளவு கிழவி நன்றாகவே மதிப்பிட்டிருக்கிறாள்.அவளின் பொழுது போக்கிற்கு என்னையும் விளையாட்டு சாமானாக மாற்றி விட்டாள். அதில் கலை நேர்த்தியுடன் உரு கொண்டு என் பங்கை நான் சிறப்புறச் செய்து முடித்திருக்கிறேன் என்று நினைக்கும் போது தன்னை மீறிய சிரிப்பில் உடல் நடுங்கியது . 

எத்தனை முறை இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கும். ஒருவரின் வேண்டுதலில் தலையிடுதல் எவ்வளவு பெரிய குற்றம் என்பதை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அக்காகிதத்தைப் பிரிக்கும் போது  நமக்கான வரைமுறை எதன் அடிப்படையில் என்பதிலிருந்தே பல கேள்விகள் தனக்கான கருவை உருவாக்கி மீள்கின்றன, அதில் ‘ முடிந்தவரை எனக்கான மரணத்தை விரைவில் அளிப்பாயாக.’ என்று இருந்தது. ஒவ்வொரு முறை வருவதற்குக் காரணமே மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு. இன்னும் கொஞ்சக் காலம் உயிரோடு இருப்பதற்கான சுயநலம்.அதைத் தாண்டிய ஒன்றை ஒருவன் வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை எப்படி எடுத்துக் கொள்ள.. கிழவி என்னிடம் சொன்ன கதையின் கடைசி பகுதி..’ இந்த தூதனிடம் எத்தனையோ வேண்டுதல்கள் வந்துகொண்டு தானே இருக்கிறது..அவைகள் நிறைவேற்றப்பட்ட உடன் இங்கிருந்து அக்காகிதங்கள் தானாக மறையும் ..’ என்று. ஆனால் முதல் ஒன்றே இப்படியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.இந்த இரண்டு வருட காலங்களில் உடல் ரீதியில் ஆரம்பித்த பிரச்சனை மனதளவில் பாதிக்கப்பட்டு இறப்பை நோக்கித் தள்ளிய யாவிலும் இருந்து எது என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பதே  இன்னும் என்னுடைய கேள்வியாக இருக்கும் பட்சத்தில். இப்படியான ஒரு விளையாட்டு என்னைச் சிதறடித்தது . 

ஒருவேளை இதை அக்கிழவிக்குப் படித்துக் காட்டும் பட்சத்தில் அதை ரசித்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. அவளின் ரசனைக்கு என்னால் இன்று தீனி கொடுக்க முடியவில்லை .

“ எதிலும் நான் சிக்குண்டு இல்லை ..”

“ உன்னைக் காணும் போதெல்லாம் ..அந்த இறைவனிடம் நான் வேண்டிக் கொள்கிறேன்..” என்று அவள் சொல்லும் வார்த்தைகளை நினைவு கூறுகிறேன். அக்கிழவியின் வேண்டுதல்கள் என்னவாக இருக்கும் என்று தோன்றுகிறது.

என்னை வரவழைத்தது அவள்தானா..? என்கிற கேள்வி எழும்புகிறது. ஒவ்வொரு முறையும் அக்கிழவியின் சிரிப்பிற்கு ஒரு அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியாதவனாகவே இருந்திருக்கிறேன். ஒரு விதத்தில் அது கூட நல்லதே.ஒர் நிகழ்வு நடந்தேற வேண்டும் என்று வாய்த்திருக்கிறது.

எத்தனையோ இல்லைகளில் வந்த எனக்கு இப்போது ஒரு வேண்டுதல் வர, கைநிறைய மெழுகுவர்த்தியை வாங்கிக்கொண்டு கண்களைத் தேவதூதனின்பால் செலுத்தி நடந்த நிகழ்வுகளை ஒருங்கிணைக்க முயன்றேன். எனக்கு அதை எழுதிய முகத்தைப் பார்க்க வேண்டும் என்பது போல இருந்தது. முடிந்தளவு அதை எழுதிய முகத்தினை வரையறுத்துக் கொள்ள முயன்ற போதே ஒரு வித நடுக்கம் என்னைத் தொற்றிக் கொண்டு மேலும் உலுக்கியது. ஒவ்வொரு முறை கண்களை மூடும் போதும் அதன் உச்சரிப்பின் ஒலியில் அக்கிழவியின் முகமே தோன்றுகிறது. அதன் தொடர்ச்சியே ஆரம்பமாக என்னை அங்கு நிலைநிறுத்திக்கொள்ள முயன்றேன் . 

எதனால் இப்படிக் கிடக்கிறாள் என்கிற எந்த வித கேள்விக்கும் பதில் சொன்னதில்லை. என்னுடைய கதைகளே அவளை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்று கூட நான் யோசித்திருக்கிறேன்.அதனை  எப்படி எடுத்துக் கொள்ள என்று தெரியவில்லை.

அக்கல்படுகைக்கு அருகில் சென்றேன் எத்தனை எத்தனை வேண்டுதல்களின் உச்சரிப்புகள் அவ்விடத்தை நிரப்பிக்கொண்டு இருந்தது. கையில் வைத்திருக்கும் அவளின் மூட்டையைத் திறந்து பார்த்தேன். அதில் இதுவரை இங்கு வந்து சேர்த்தவர்கள் அனைவரது வேண்டுதல்களும் நிரம்பி இருந்தது. இதுநாள் வரை தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிடாத கோபத்தின் வெளிப்பாடாகக்  கூட அது இருக்கலாம் என்று தோன்றியது.எத்தனை எத்தனை வேண்டுதல்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருக்கிறாள் பத்திரமாக, அக்கிழவிக்கு இது பெரும் மகிழ்வைக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை ஆனாலும் சுமந்தலைந்திருக்கிறாள். இந்த தேவாலயத்தில் அதனைத் தலைக்கு வைத்து இதுநாள் வரை அவள் நிம்மதியற்று உறங்கிய அலறல்களை  என்னால் உணர முடிந்தது. ஏனோ மனதிற்குள் ஒன்று மட்டும் தோன்றிக் கொண்டே இருந்தது ‘ எத்தனை பெரிய சாத்தானின் தேவதையை இதுநாள் வரை வெளியே காவலுக்கு வைத்திருக்கிறாய்..’  .

காலச்சுவடு ஏப்ரல் 2024

One Comment on “லட்சுமிஹர் /மெழுகு ”

Comments are closed.