லட்சுமிஹர் /கதவுச் சிறகு 

‘ கூர்தீட்டிக் கொண்ட ஆயுதங்களாகச் செவியின் மடல்கள் மாறினாலொழிய உங்களால் அதன் உயிர் நிலையை அறிய முடியாது, திசையின் வேர்கள் எங்கும் ஊடுருவும் இசையை அனுபவிக்க ஒரே விதி …..’ என்று தனது காந்த குரல் வலையினுள்ளிருந்து வெளிப்படும் இத்தனை வருட நாட்குறிப்பின் சேமிப்பை எங்களின் ஆர்வ மிகுதியை  அதிகரிக்க வேண்டி நிறுத்தினார் லூதர். அது அப்பட்டமாகத் தெரிந்தது. எங்கள் அனைவர்  மீதும் அவரின் கரிய நிற பார்வை ஒரு வித பரிவை அளிப்பது போல இருந்தாலும்  மிகத் துல்லியமான அவதானிப்பை எற்படுத்தகூடியதாகவே இருந்தது.அதற்கு முன் இங்கிருப்பவர்கள் அனைவரும் இணைப்பாக விலங்கைக் கைக்கொண்டு பிணைத்திருப்பதைப் போல அவரே உருவாக்கி இருந்தார்.வட்டத்தின் மையம் அவருடைய ஆளுமைக்குள் அடங்கி இருந்தது. உடல் எங்கும் சுற்றித் திரியும் நரம்புகள் அக்குரலுக்குக் காத்திருந்தது.உச்சரிப்புகள் எவற்றையும் தவறவிடக் கூடாத ஒன்றாய் இருக்க அவர் எங்களிடம் வேண்டிக்கொண்டார். லூதர், ஒரு வார்த்தை கூட பேசவில்லை, நாங்கள் அவரை பின் தொடர்ந்தோம்.  அவர் மீதான நம்பிக்கை எங்களை எதன் பொருட்டின் மீதும் கேள்விகள் அற்றுப் போனது போலத் தோன்றச் செய்தது. 

‘எதற்காக இப்படி ஒரு பயணத்தை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டு இவர்களுடன் இப்படி ஒரு வாரக் காலம் சுற்றி அலைய வேண்டும், மீதி இருக்கும் வாழ்கையை இப்படியாகக் கழிக்க முடியுமா என்ன?, எவ்வளவு பெரிய முட்டாள் தனம் இது. இவர்களில் அந்நியப்பட்டவனாகவே இருந்தேன், ஏனென்றால் இதைப் பற்றியான துளியளவு அறிவு கூட என்னிடத்தில் இருந்ததில்லை, ஒவ்வொருவரின் பேச்சுக்கள்  அவர்களின் நடத்தைகளைக் கண்டு ஒவ்வொரு நொடியும் என்னுள் எழும் ஓயாத சிந்தனைகளை எங்கே போய் கொட்டித் தீர்க்க முடியும், மண்டைக்குள் ஏறித் தானாக மீண்டும் தலை வலியை உருவாக்கி விடக் கூடிய அபாயம் இருப்பதால் முதல் இரண்டு நாட்களிலிருந்தே யாவற்றுக்கும் ஒரு பெரிய முற்றுப் புள்ளியை வைத்து விட்டு, பின் தொடர்வதைக் கையில் எடுத்துக் கொண்டேன், எந்த வித அலைக்கழிப்பும் அற்று ஒவ்வொருவரின் நீட்சியாக அவர்கள் கொண்டு வந்து சேர்க்கும் செய்திகளின் ஆச்சரியத்திற்குள் என்னை நுழைத்துக்கொண்டேன் என்று  சொல்ல வேண்டும், எப்படியாக இது முடியும் என்கிற நிலையையும் முற்றிலும் என்னுள்  இருந்து  பிடுங்கிக் கண்காணாத இடத்தில் வளர நிலத்தைத் தேடி அலையாமல் வீசி எறிந்தேன்,என்னை ஒருநாளும் சந்திக்க நான் விரும்பவில்லை என்பதையும் அதற்குத் தெரியப்படுத்திக்கொண்டு அதை இந்த பேரியற்கைக்குள் ஒளித்துக்கொண்டேன்..’

லூதரே அக்குழுவை வழி நடத்தக்கூடியவர் என்றாலும் அங்கு வந்திருந்தவர்களும் அவருக்கு இணையான அறிவை பறவைகளின் மீது கொண்டிருந்தனர். அவர்களின் உரையாடல்கள் முதலில் ஒன்றும் புரியாமலேயே இருந்தது. அவர்கள் ஒவ்வொரு பறவையின் பெயர்களைச் சொல்லும் போதும் அதைப் பெண் , ஆண் என்கிற அடிப்படையில் ஒவ்வொரு அடையாளங்களுடன் அவதானிப்பது ஆச்சரியமாகவே இருந்தது. இத்தனைப் பறவைகள் நம்மைச் சுற்றிக்கொண்டு இருக்கின்றன என்று ஒரு போதும் கவனித்ததில்லை. 

மனதிற்குள் எழும் கேள்விகளைக் கேட்க ஆரம்பத்தில் சங்கடமாக இருந்தாலும் இந்த பயணத்திற்கு வரும் முன்னரே லூதர்க்கு என்னைப் பற்றித் தெரிவித்திருந்தேன்.

“பறவைகளைக் காணும் முகாமிற்கு நான் புதிது , அதிகமாகப் பார்த்த பறவை இனமே காக்கை தான்“ என்று சொன்னதும் அவர் சிரித்துக்கொண்டே. 

“ எல்லா இடங்களுக்கும் ஒரு பறவை இனம் காக்கைகளே“ என்று சொன்னார். 

அதன் அர்த்தம் சத்தியமாக அப்போது புரியவில்லை. இதுவரை சுற்றித் திரிந்த இடங்களில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பறவை கூட்டம் மொத்தமாக இருக்கிறது.அதையே அவர் காக்கைகள் என்று சொல்லியிருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிந்தது. முதல் இரண்டு நாட்களில் எனக்கு இருந்த தடுமாற்றங்களைப் புரிந்து கொண்டது போல அவர் அடுத்த முறை பேசும் போதும், செவி கொடுத்துக் கேட்ட பறவை ஒலியின் பெயரைப் பொறுமையாகவும், அவற்றின் கூறுகளையும் பண்புகளையும் புரியும் படி சொல்லத் தொடங்கியது பயணத்தை அச்சமின்றி தொடர வழிசெய்தது. 

‘ஏன் இப்படி இவர்கள் பறவைகளின் மீது ஆர்வமாக இருக்கிறார்கள், ஒவ்வொரு முறை ஒரு மரத்தின் கிளை ஆடும் போதும் அதில் இருக்கக் கூடிய பறவையை அறிந்திட அவர்களின் கண்களில் தெரியும் உற்சாகம் எதனில் இருந்து தொடங்கி இருக்க வேண்டும். லூதர் அவரை பற்றி ஒரு போதும் இக்குழு பயணத்தில் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் இந்த நவீன சூழலில் இப்படி ஒரு வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து இப்படிப் பட்ட குழுக்களை அழைத்துக் கொண்டு திரிவது எதனால், அவரிடம் கேட்க இப்படி எத்தனையோ கேள்விகள் இருந்தாலும், மனதில் பறவைகளின் மீதவர் காட்டும் ஆர்வம் அளப்பரியது என்றே தோன்றும் ‘

செல்லும் இடங்களில் இருக்கும் பறவைகளைச் செயலியில் தவறாமல் பதிவேற்றம் செய்துகொண்டே இருந்தார் லூதர். இங்கே காணக் கிடைக்கும் பறவைகளைப் பார்த்து விட வேண்டும், அதை எங்களுக்குக் காட்டி விட வேண்டும் என்கிற பதட்டமும் அவருக்கு  இருந்ததை உணர முடிந்தது.

நான் மனதிற்குள் இங்கிருந்து கிளம்பும் போது ஒரு பறவையின் பெயரை அதன் அடையாளங்களோடு தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எழுந்ததை லூதர் மற்றும் குழுவினருடன் அன்றைய இரவு தங்கலின் போது சொன்னதும் அனைவரிடமும் ஒரு வித நற்சிரிப்பு எழுந்து அடங்கியது. ஒவ்வொருவரும் இதுவரை தங்கள் பயணங்களில் நடந்த சில தருணங்களை பகிர்ந்து கொண்டனர். அதில் வித்தியாசமாக ஒரு கதையை லூதர் ஒரு திரைப்படத்தின் இயக்குநர் விவரிப்பது போல அனைவரது கவனத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து வெற்றி கொண்டார். கதையின் முடிவில் ‘ என்ன டைரக்டர் கொஞ்சம் கத தேறுமா ‘ என்று என்னை பார்த்துச் சொன்னதும் அனைவரது பார்வையும் என் மீது திரும்பியது. நான் கைகளை உயர்த்தி நலம் என்பது போன்று செய்கையில் திருப்தி அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன். 

‘  லூதர்  எப்போதும் அழைத்துச் செல்லும் குழுவில், ஒருவர் தவறாமல் பங்கெடுப்பது வழக்கம், எப்போது அவர் வந்தாலும் ஒரு வார்த்தை கூட மற்றவரிடத்தில் பேசியது இல்லை , ஓரிரு பயணங்களில் அவர் அப்படி என்று அறிந்துகொண்ட லூதர் பின் அவர் மீதான கவனத்தைத் திருப்பிக்கொண்டார். ஒவ்வொரு முறையும் தான் வைத்திருக்கும் காமெராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டே இருப்பது.அவர் ஒவ்வொரு முறை பறவை பார்த்து தனது காமெராவில் பதிவு செய்யும் போது எழும் கிளிக் சத்தம் அனைவரது கவனத்தை ஈர்க்கும். எங்களுக்கு ஒர் அந்நியனின் பேச்சு மொழியாகவோ அவரை பற்றிய ஞாபகமாகவோ அந்த கிளிக் சத்தம் மாறிப்போனது. அப்பயணங்கள் முடியும் போது  அக்குழுவின் புகைப்படத்தை எடுக்கக்கூடியவர் அவரே.ஆதலால் அம்மனிதனின் புகைப்படம் எங்களிடம் இல்லை. அப்படித் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர் சில பயணங்களில் கலந்து கொள்ளவில்லை சில பயணங்கள் கழித்து கிளிக் சத்தம் லூதருக்கு அவரின் ஞாபகத்தைக் கொண்டு வந்து கொண்டே இருக்க. அவரை தேட முடிவெடுத்திருக்கிறார், ஆனால் அவரை பற்றிய எந்த தகவல்களும் தெரியாத பட்சத்தில் எங்கே போய் தேடுவது முடிந்தளவு முயற்சியில் எந்த தகவலும் இல்லை. அதற்கு பின்பான பயணங்களுக்கு அவரை எதிர்பார்ப்பதை வழக்கமாகக் கொண்டு விட்டதாக சொன்னார். குழுவிலிருந்த நபர் “ அவர் மீதான அக்கறை எங்கிருந்து தொடங்கியது ‘ என்று கேட்க அனைவரும் லூதர் பதிலுக்காக காத்திருந்தோம்..

“தூரத்தில் கேட்ட அழுகுரல் என் கவனத்தை ஈர்த்தது, இதே போன்ற பயணத்தின் போது தங்கும் இடத்தில் ஒரு மரத்தின் கீழ் அவரை காணும் வாய்ப்பு கிடைத்தது. தூரத்திலிருந்து பார்த்தேன். அவர் அழுதுக் கொண்டு இருந்தார். அவரிடம் நெருங்க அந்த அழுகை அனுமதிக்கவில்லை. அந்நியமான ஒரு மனிதன் நிலைத்திருக்க வேண்டிய இடம் என்று மனதிற்குள் தோன்றியது. அந்த பயணத்திற்கு பிறகே அவரை நான் பார்க்கவில்லை..அந்த அழுகை எதை ஒட்டியானது என்கிற கேள்வி பல நாள் என்னிடம் இருந்தது …” என்று முடித்தார். அனைவரும் அவரை பார்த்துக் கொண்டிருந்த போதே என்னிடம் கதை குறித்துக் கேட்டு வெகுமதியை வாங்கிக்கொண்டார். 

லூதர் சொன்ன கதையில் வரக் கூடிய மனிதனின் முக சித்தரிப்பை ஓரளவு என்னால் வரித்துக்கொள்ள முடிந்தது. முடிந்தளவு அந்த மரம் அவனுக்கான ஆறுதலாக இருந்திருக்கலாம்.எதற்காக இந்த மௌனம், இந்த அழுகை. அப்படி எதைத் துரத்திக்கொண்டு ஓடிய பறவை அது என்று கேள்வி கேட்க. ஒரு மரம் தனக்கும் கிடைக்கும் பட்சத்தில் மனம் விட்டு அழுக,சிரிக்க முடியும். ஒருவேளை அக்கதாபாத்திரம் அம்மரத்தின் பறவையாகக் கூட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். இப்படியாக எதை எதையோ நினைத்துக்கொண்டு புரண்டு கொண்டிருந்த எனக்கு அப்பயணியின் அழுகை என் செவிக்குள் கேட்கத் தொடங்கியது. கிளிக் சத்தம், அவர் புகைப்படங்களில் உறைப்பட்ட பறவைகளின் சிறகுகள் அவரை தங்களின் உலகிற்கான பாதையைக் காட்டி இருக்கலாம்.      

அன்றிரவு, அன்றைய நாளில் எடுக்கப்பட்ட பறவைகளின் புகைப்படத்தைத் திரையிட்டு லூதர் காட்டிக்கொண்டிருந்தார். யாரும் யாரிடமும் பேசக் கூடாது எதைப் பற்றியான விளக்கங்களும் கிடையாது. எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருக்கக் கூடிய பறவைகளைக் காணுதல். ஒவ்வொரு பறவையின் புகைப்படங்களைக் கடக்கும் போதும் அதை நேரில் பார்த்த போது தோன்றிய எண்ணங்களில் இருந்து இது முற்றிலும் புது அனுபவமாக இருந்தது. வெவ்வேறு கோணங்களின் பார்வைகளிலிருந்து தொடங்கி அதன் விசை அறியும் நேர்த்தி முதல் கொண்டு உணர முடிந்தது. ஓடிக்கொண்டிருந்த புகைப்படங்களில்  பஞ்சுருட்டான் பறவையை  என்னால் ஞாபகப்படுத்த முடிந்தது. பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருக்கும் இவைகள் தலையில் செம்பழுப்பும், கழுத்தில் கறுப்புக் கோடும் காணப்படும். எனக்குப் பெரிதும் இதை ஞாபகப்படுத்த இரண்டு காரணங்கள் வாளின் நடுவே இறகு ஊசியைப் போல இருக்கும், மற்றுமொரு காரணம் இது இரையாக எதைத் தேடிச் சென்றாலும் எங்கிருந்து தொடங்கியதோ அங்கே வந்தே அதைச் சாப்பிடும். நான் நினைத்தது போல ஏதோ ஒரு பறவையையாவது இனம் கண்டு கொள்ள முடிந்ததே என்கிற நிம்மதி இருந்தது. நிம்மதி என்பதை விட ஒன்றை கற்றுக் கொண்ட சந்தோஷம். 

ஏன் அந்த பஞ்சுருட்டான் போல லூதர் சொன்ன மனிதர் தனக்கான இரையைத் தேடிக்கொண்டு தான் வசிக்கும் இடத்தில் அதை அசைபோடக் கூடாது என்று தோன்றியது. இது ஆர்வக்கோளாரான விஷயங்கள், எதையும் ஆரம்பத்தில் கற்றுக்கொள்ளும் போது தோன்றுவது இயல்பே. அதை எப்படி நிறுத்துவது என்று மட்டும் நினைத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க தொடங்கினேன்.ஆனால் நாங்கள் அமைத்திருந்த டென்டின் கூரைகளில் அடர்த்தியாக விழும் மழையைத் தாண்டி அங்கிருக்கும் பறவைகளின் சத்தம் இரவாக இரவாகக் கூடிக்கொண்டே சென்றது.அதை ஒரு இசைக் கோர்வையின் நயத்தில் அடுக்கி வைக்க முடியும் என்று தோன்றியது. மொபைலை எடுத்து சவுண்ட் ரெக்கார்டரில் அதைப் பதிவு செய்து கொண்டேன். இரவு தூங்கும் எண்ணம் போய் அவைகளின் ஓசையைக் கேட்க வேண்டும் என்கிற முனைப்பே இருந்தது. ஏனென்றால் அப்பறவைகளின் ஒலியைக் கொண்டு இவர்கள் அப்பறவையினை கண்டுபிடிக்கும் போது எனக்குள் எழுந்த சுவாரஸ்யம் ஏராளம். எதை நோக்கியான இந்த பயணம் என்பதை மறந்து இதை அனுபவிக்கத் தொடங்கிய மனது மீண்டும் மீண்டும் இது தொடங்கிய இடத்திற்கு வந்தது. ஏதோ தகவலின் பேரில் இக்குழுவில் இணைந்து கொண்டது மகிழ்வையே அளித்திருக்கிறது. நாளையோடு முடியும் இப்பயணத்தை அடுத்தும் தொடர வேண்டும் என்கிற எண்ணமே இருந்தது . 

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி நடந்தேறி முடிவில் அனைவரும் மீண்டும் சந்திப்போம் என்ற புன்னகையுடன் அங்கிருந்து விடை பெற்றுக்கொண்டோம். முடிவில் லூதர் ‘உங்களுக்குப் பரிசாகக் கொடுக்க விரும்புவது ,உங்களுடனிருக்கும் பறவையை ஒருநாளும் மறக்க வேண்டாம்…’ என்று சொன்னது மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்க. வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். இந்த ஒரு வாரக் காலம் என்னைப் பற்றி விசாரிக்க, வேண்டி வரவேற்க இவ்வுலகில் எனக்காக எவரும் இல்லை என்கிற வருத்தம் முதன் முதலில் தோன்றியது. இதுவரை நான் எழுதி வைத்திருந்த கதைகளின் காகிதங்கள் அழுக்கேறிப் போய் இருந்தது.தொலைப்பேசியில் லூதற்கு தொடர்பு கொண்டு உங்களை மீண்டும் சந்திக்க முடியுமா என்று கேட்டேன்..அவர் அடுத்த நாள் அலுவலகம் வருமாறு சொன்னார் .

எதற்காக அவரை சந்திக்கப் போகிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை மனதிற்குள் தெளிவுப்படுத்திக்கொண்டு அலுவலகம் விரைந்தேன். அலுவலகம் அவருடைய எண்ணங்களுக்கு ஏற்றப்படி அமைக்கப்பட்டிருந்தது. எடுத்தவுடன் அவர் சொன்ன கதாபாத்திரத்திற்கு நேரம் கடத்தாமல் வந்துவிட்டேன். ‘நான் முன்பு சொன்னது போல அன்றைய நாளுக்குப் பின் அவரை பார்க்கவில்லை அதற்கு பிறகான எந்த தகவலும் இல்லை’ என்றார்.. 

நான் கதைக்காக வந்திருப்பதாக நினைத்துக்கொண்டு ‘இதையும் படம் பண்ணலாம்னு இருக்கீங்களா, அப்படினா கத என்னோடதுன்னு போடணும் இல்லேன கேஸ் கொடுப்பேன்‘ என்று சிரித்துக்கொண்டே சொல்ல,’தெருஞ்சுக்க சார்’ என்று அங்கிருந்து நகர்ந்தேன்.

அவரின் அலுவலகத்திலிருந்து வீடு வரை நடந்தே வந்தேன். இந்த ஒரு வாரம் சுற்றித் திரிந்த பறவைகளுக்கு அவனைப் பற்றி என்ன தெரியும் அவனின் அழுகையைப் புரிந்து கொள்ள முடியுமா?.. அப்படிப்பட்டவனை இந்த பறவைகள் கைவிட்டு விட்டனவா?.. எதற்கு எனக்கு இப்படி தோன்றுகிறது என்று நினைக்கும் போது இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கக் கூடாதோ என்று தோன்றுகிறது. சில விஷயங்கள் நம்மைச் சீண்டிப் பார்க்கத் தொடங்கிவிடுகின்றன. 

அந்த கிளிக் சத்தம் வீட்டின் அறை முழுவதும் ஒலித்துக்கொண்டே இருப்பதாகத் தோன்ற அங்கிருந்து வெளியேற நினைக்கும் போது நின்று விடுகிறது. என் எண்ணத்தை அதிலிருந்து விலக்க எவ்வளவோ முயன்றும் அதை நிறுத்த முடியவில்லை. எதன்பொருட்டு அந்த மனிதன் என்னை இப்படித் தொற்றிக்கொண்டான் என்று தெரியவில்லை. எங்கோ கிடைத்த ஒன்றை இங்கு வரை தூக்கிக் கொண்டு அலைவது எதனால்.. அதை மென்று விழுங்க முடியாமல் தவிக்கிறேன். என் உணவு மண்டலத்தில் செமிக்காமல் அழுகக் காத்திருக்கிறது. கூடிய விரைவில் அழுகிய நாற்றம் என்னை எங்குக் கொண்டு போய் நிறுத்தப்போகிறதோ…?

லூதரே இதற்குக் காரணம் என்று தோன்றியது. அப்படிப்பட்ட ஒருவன் இருந்திருக்க வாய்ப்பில்லை. அக்குழுவின் எதிர்பார்ப்பை அதிகரிக்க அவரே ஏற்படுத்திய கதையாக இருந்தால்.. இப்படி அங்கு வந்தவர்களும் என்னைப் போல இதை யோசித்துக்கொண்டிருப்பார்களா? ஏன் கதை முடிந்ததும் என்னை லூதர் கேட்க வேண்டும். ஏதோ ஒன்று இருக்கிறது. ஏனென்றால் இதைக் கதை என்று கண்டுபிடிக்கக் கூடியவன் நானாக மட்டுமே இருக்க முடியும் என்று அறிந்ததாளேயே அந்த கேள்வி என் மீது ஏவப்பட்டதா ? அதில் இரையாகி விட்ட உணர்வு மேலெழும்புகிறது.   

மீண்டும் அதே வழியில் மேற்கொள்ளக் கூடிய பயணத்தை நானே தேர்ந்தெடுத்துச் செல்ல கால்கள் அதன் வழித்தடத்தை ஆமோதித்தன, அவன் அமர்ந்திருந்த மரத்தைத் தேடி அவ்வழியினுள் அலைந்து திரியத் தொடங்கி இருந்தேன். கண்டிப்பாக அங்கு இருக்க வேண்டும் அங்கிருந்து நகர்வதற்கான எந்த சாத்திய கூறுகளும் கிடையாது. ஆனால் அந்த மரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது, என்னை அழைத்துச் செல்வது யார் ..?  ஏன் இந்த பதட்டம் ? 

அலுவலகம் விட்டு வெளியே வரும் போது லூதர் என்னிடம் ‘  ஒரே விதி அவனுக்கான பறவையை கண்டுக்கொண்டுவிட்டிருப்பான் ..’ என்றார். மீண்டும் அதை நினைவு படுத்துகிறேன். என் செரிமான மண்டலத்திலிருந்து அழுகிய வாடை வாயின் வழியே வெளியேறத் தொடங்கியிருந்தது. இத்தனையும் ஓடிக்கொண்டிருந்த மண்டைக்குள் செவியின் கூர்மை பஞ்சுருட்டான் இறையை  தூக்கிக் கொண்டு செல்வதைக் கவனிக்கச் சொல்கிறது.  

*

வாழை சூழலியல் –ஜனவரி 2024

One Comment on “லட்சுமிஹர் /கதவுச் சிறகு ”

  1. வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. வாசகனுக்கான இடத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. மன மகிழ்ச்சி.

Comments are closed.