சந்நியாசம் ஏற்றல் எனும் மகா வைபவம்/ரம்யா வாசுதேவன்

இதற்கு முந்தைய பதிவினில் காஞ்சி பீடாதிபதியாக புதியதாக சந்நியாசம் ஏற்றுக் கொள்ளும் வைபவத்தை குறித்து பார்த்தோம்.

சந்நியாசம் ஏற்றுக்கொள்ளும் விதமென்பது மடத்திற்கு மடம் மாறுபடும். காஞ்சி காமகோடி மடமென்பது சங்கர பகவத்பாதரால் உருவாக்கப்பட்ட அத்வைத மடமாகும். இது மிகமிகப் பழமையானதாகும். இந்த மடத்தில் சந்நியாசம் ஏற்கும்போது அவர்கள் கையில் தண்டத்திலிருந்தே அவர்களின் தத்துவத்தை அறிந்து விடலாம். அந்த தண்டத்திற்கு ஏகதண்டம் என்று பெயர். நாங்கள் த்வைதமல்லாத அதாவது இரண்டல்லாத அத்வைத தத்துவத்தை மட்டுமே பின்பற்றுகிறோம் என்பதே ஆகும். அதுவே ஏக தண்டம் உணர்த்தும் தத்துவமாகும்.

வாருங்கள், நாம் இதுபோல ஸ்ரீவைஷ்ணவத்தில் எப்படி சந்நியாசத்தை ஏற்கிறார்கள் என்றும் பார்ப்போம்?

சங்கரமடத்தில் சந்நியாசத்தை தேர்ந்தெடுக்கும்போது பிரம்மச்சாரிகளை மட்டுமே சந்நியாசத்திற்கும் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், பெரும்பாலான ஸ்ரீ வைஷ்ணவ மடங்களில் கிரகஸ்தர்கள் என்கிற இல்லறத்தில் இருப்பவர்களையே தேர்ந்தெடுத்து சந்நியாசம் அளித்து பீடாதிபதிகளாக அமர வைக்கிறார்கள்.

ஏன்? காஞ்சி மடத்தில் பிரம்மச்சாரிகளுக்கே சந்நியாச தீட்சை அளிக்கிறார்கள்?

இதற்கு பிரமாணமாக சங்கரருடைய கீதா பாஷ்யத்தில் பதில் உள்ளது. கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் கடைசி ஸ்லோகத்தில் இதற்கான விடை கிடைக்கிறது. ‘‘ஏஷா பிராம்ஹி ஸ்திதி பார்த்தா…’’ என்று அந்த ஸ்லோகம் வரும்.

அதாவது கடைசி காலத்தில் ஒருவன் இந்த ஞான நிலைக்கு வந்தால் கூட அவன் நற்கதி அடைந்து விடுவான் என்று அர்த்தம் தொணிக்க கீதாச்சார்யன் சொன்னதற்கு சங்கர பகவத்பாதர் விரிவுரை எழுதும்போது, கடைசிக் காலத்தில் வந்தவனுக்கே இப்படியெனில் பிரம்மச்சாரியாக இருக்கும்போதே சந்நியாசம் எடுத்துக் கொண்டால் அது எவ்வளவு உயர்ந்தது பாருங்கள் என்று எழுதினார். இந்த விரிவுரையின் மையமே இன்றும் சங்கர மடத்தில் பிரம்மச்சாரிகளுக்கு மட்டுமே சந்நியாசம் அளிப்பது என்று வந்ததாக அறிஞர்களும், பண்டிதர்களும் சொல்வார்கள்.

பகவான் ரமணர் எடுத்த எடுப்பிலேயே, பிரம்மச்சரியம் என்பது பிரம்மத்தை ஆஸ்ரயிப்பதே ஆகும். பிரம்மம் மட்டுமே இருக்கிறது. அதை ஆஸ்ரயித்து விடு. முதல் படியே இறுதிப்படி. உடனே, அந்த பிரம்மம் என்ன என்று விசாரி. அந்த நிலையில் நின்று விடு என்பார். இங்கு time என்பதையும், ஒரு process இருக்கிறது என்பதையுமே கொண்டு வரமாட்டார். இதுவும் சரி. எப்படி சரி என்பதை பின்னால் பின்னால் விவரிக்கிறேன்.

ஆனால், மதங்கள் கூறும் சம்பிரதாயத்தில் ஒவ்வொன்றாக செய்ய வேண்டும் என்றுதான் சொல்லும். எதைச் செய்யக் கூடாது எதைச் செய்ய வேண்டுமென்று கட்டளையிடும்.

ஏன் தெரியுமா?

‘‘இந்த மனம் என்று ஒன்றை சுமந்து கொண்டு திரிகிறாயே… அதைப் பார்த்து நீ இப்படி சதா சலித்துக் கொண்டே இருக்காதே. அப்பாலே போ என்று பூச்சியை சுண்டி எறிவதுபோல் எறிந்து விட முடியாது. இது மலையை கல் கல்லாக உடைப்பது போன்றது. அதனால், உனது மனதை அடக்கவோ அல்லது ஒடுக்கவோ செய்ய வேண்டுமெனில் இந்தா இதிலிருந்து ஆரம்பி’’ என்று முதலில், அந்த சந்நியாசம் ஏற்றுக் கொண்ட ஆச்சார்யனையே ஆஸ்ரயிக்க வேண்டிய கடைபிடிக்க வேண்டியவராககாட்டிக் கொடுக்கும்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சந்நியாசம் ஏற்று ஜீயராக ஆச்சார்யனாக ஏற்கும் விஷயமும் தொன்று தொட்டு விஷயங்களை மீண்டும் எப்படி என்று பார்ப்போமா!

ஸ்ரீ வைஷ்ணவத்தில் இல்லறத்திற்குப் பிறகுதான் துறவறம் என்று வருகிறது. ஏனெனில், கிரகஸ்தன் என்கிற இல்லறத்தில் இருப்பவனே சந்நியாசிக்கும் உணவளிக்கிறான். பிரம்மச்சாரிக்கும் சாப்பாடு போடுகிறான். இருவருடைய தேவைகளை ஏதோவொரு விதத்தில் அவனே நிறைவேற்றுகிறான். கிரகஸ்தன் இல்லையெனில், சந்நியாசிக்கு பிட்சை அளிக்க முடியாது. அதனால், இந்த கிரகஸ்தாஸ்ரமமான இல்லற தர்மமே உயர்ந்த தர்மம் என்று ஸ்ரீ வைஷ்ணவம் வைத்திருக்கிறது. அதில் இருப்பது என்பது எந்தத் தாழ்வும் இல்லை என்று அறுதியிட்டுக் கூறுகிறது.

இன்றிருக்கும் பெரும்பாலான ஸ்ரீ வைஷ்ணவ மடங்களான, திருப்பதி ஜீயர் மடம், ஸ்ரீமத் அஹோபில மடம், ஆண்டவன் ஆஸ்ரமம், வானமாமலை மடம், பௌண்டரீகபுரம் ஆண்டவன், பரகால மடம் , எம்பார் ஜீயர் மடம், ஸ்ரீபெருபுதூர் மடம் போன்றவை அனைத்துமே கிரகஸ்தர்கள் மட்டுமே ஜீயராக முடியும். சந்நியாச தர்மத்தை ஏற்றுக் கொள்ள முடியும்.

அது சரி? ஆனால், எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?

இப்போது அந்தந்த ஸ்ரீ வைஷ்ணவ திருமாளிகைகளுக்கென்று சிஷ்யர்கள் இருப்பார்கள். உதாரணமாக, இதற்கு முன்பு காஞ்சி சங்கர மடத்தில் அந்த பீடாதிபதிகளின் சிஷ்யராக இருந்த ஒருவரைத்தானே தேர்ந்தெடுத்தார்கள். அதிலும், ரிக் வேத பாரம்பரியத்தில் வந்திருக்க வேண்டுமென்றுதான் வைத்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த வேதமென்றுதான் இருக்க வேண்டுமென்று கூட ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெரும்பாலும் வைத்திருப்பதில்லை. ஆனால், எந்த மடத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மடத்தின் சிஷ்யர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே சந்நியாசம் பெறும் தகுதியைப் பெறுவார்கள்.

ஸ்ரீ வைஷ்ணவத்தில் சந்நியாசம் ஏற்பதற்கு நான்கு முக்கியமான விஷயங்களை காலட்சேபமாக குரு மூலமாக கேட்டிருக்க வேண்டும். இங்கு கதா காலட்சேபம் என்று சொல்கிறோம் அல்லவா? ஆனால், அது கிடையாது.

காலட்சேபம் என்பது மிகமிக உயர்ந்த விஷயம். நான் ஏதோவொரு புராணத்தை கேட்டேன் என்பதல்ல காலட்சேபம் விஷயங்கள். காலட்சேபம் என்பது விசிஷ்டாத்வைத வேதாந்த பாடங்களையும் கேட்டலாகும். இன்னும் நுட்பமாகச் சொன்னால், ஒரு குருவிடம் தனிப்பட்ட முறையில் சிஷ்யன் அமர்ந்து பாடங்கள் கேட்பது. மனனம் செய்து உள்வாங்குவது. உள்வாங்கியதை நிதித்யாசனம் என்று சொல்லப்படுகின்ற நடைமுறையில் சுய அனுபவத்தில் கொண்டு வந்து நிறுத்துதலாகும். இதுதான் சரியான காலட்சேபமாகும். கீதையில், ஸ்ரவணம், மனனம் என்று சொல்லிவிட்டு ஸ்வாத்யாயம் என்று ஒரு வார்த்தை போடுகிறான், கீதாச்சார்யன். அதற்குப் பிறகுதான் தியானம். இந்த ஸ்வாத்யாய நிலை வரை காலட்சேபம் கொண்டு செல்லும்.

சரி, இப்போது மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

முதல் விஷயம் என்னவெனில், ஸ்ரீ பாஷ்யம் என்கிற பிரம்ம சூத்திரத்திற்கான விஷயங்களை அறிந்திருக்க வேண்டும்.

இரண்டாவது விஷயம் பகவத் கீதைக்கு ஸ்ரீமத் ராமானுஜர் எழுதிய கீதா பாஷ்யத்தை அறிந்திருக்க வேண்டும்.

மூன்றாவது விஷயம், ஆழ்வார் அருளிச் செய்த பாசுரங்கள். மிகவும் குறிப்பாக திருவாய்மொழி மற்றும் அதற்கான வியாக்கியானங்கள். இந்த திருவாய்மொழியை கூட திருவாய்மொழி என்று கூட சொல்ல மாட்டார்கள். பகவத் விஷயம் என்றுதான் சொல்ல வேண்டுமென்பது வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.

நான்காவதான விஷயம், ரகசிய கிரந்தங்கள் என்று அழைக்கப்படும், அஷ்டாக்ஷரம் (எட்டெழுத்து மந்திரம்), த்வயம், சரம ஸ்லோகம் போன்ற இந்த மூன்று மந்திரங்களுக்கான பொருளையும், அதன் மறை பொருளையும் அறிந்திருக்க வேண்டும். இதையே ஆச்சார்யர்கள் ரகசிய கிரந்தங்களாக வைத்துள்ளனர்.

இந்த நான்கையும் சேர்த்து ஸ்ரீவைஷ்ணவம் கிரந்த சதுஷ்டயம் என்கிறது. இந்த நான்கையும் நன்கு காலட்சேபமாக அறிந்து வைத்திருந்தால் மட்டுமே அவர் கிரகஸ்தாஸ்ரமத்திலிருந்து சந்நியாஸ்ரமத்தை ஸ்வீகரிக்க முடியும். அதாவது ஏற்றுக் கொள்ள முடியும்.

இதையும் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயத்தை அழுத்திச் சொல்கிறது. அதுதான் அனுஷ்டானம்.

வாழ்க்கையில் இவர் எவ்வளவு தூரம் இந்த கேட்டதையெல்லாம் அனுஷ்டானத்தில் வைத்திருக்கிறார். அல்லது கடை பிடிக்கிறார் என்று பார்க்கிறது. ஏனெனில், கிரகஸ்த தர்மத்தில் அனுஷ்டானத்தை கடைபிடிக்க முடியவில்லையெனில் சந்நியாச ஆஸ்ரமத்தில் இன்னும் கூடுதலாக சொல்லப்பட்டிருக்கும் அனுஷ்டானத்தை எப்படி கடைபிடிப்பது என்று முக்கியமாக அனுஷ்டானத்தை வைத்திருக்கிறார்கள்.

இப்போது பாருங்கள். வைஷ்ணவம் ஞானம் -– அனுஷ்டானம் என்கிற இரண்டு தளத்தையே சந்நியாசத்தின் மையத் தகுதியாக வைத்திருக்கிறது. இப்போது இந்த சிஷ்ய கோஷ்டிகளில் யார் ஞானம், அனுஷ்டானம் இந்த இரண்டோடு இருந்திருக்கிறார்கள் என்று பார்ப்பார்கள். இன்னொன்று இதற்கு முன்பு நடந்த வித்வத் சபை, சதஸ் இதிலெல்லாம் கலந்து கொண்டு வாக்கியார்த்தங்களை சொல்லும்போது இவர் நன்றாகச் சொல்கிறாரே, பெரிய வித்வானல்லவா என்று குறித்துக் கொள்வார்கள். இதுவே முக்கிய தகுதிகளாகும்.

அத்வைத மடங்களில் சங்கர சம்பிரதாயத்தில் எப்படி அதற்குரிய மந்திரங்களை சொல்லி தீட்சை கொடுக்கிறோமோ அதுபோலவே இங்கு மந்திரங்களை சொல்லி தீட்சை கொடுப்பார்கள். அத்வைத சந்நியாசிகளுக்கு மகா வாக்கியம் இருக்கும். (இதற்கு முந்தையை கட்டுரைகளை பார்க்க) ஏனெனில், அங்கு சந்நியாசம் ஏற்றால் மட்டுமே மோட்சம் என்று வைத்திருக்கிறது. அதாவது சந்நியாசியின் நிலையை உள் அனுபவமாக ஒருவன் அடைய வேண்டுமென்று உதாரண சந்நியாசத்தை காட்டுகிறது. அதற்குரிய ஒரு சட்டம் என்று கொள்ளலாம். ஆனால், ஸ்ரீ வைஷ்ணவத்தில் கிரகஸ்தனாக இருந்தாலும் மோட்சம் உண்டு. சந்நியாசி ஆனாலும் மோட்சம் உண்டு.

இங்கு இரண்டு சம்பிரதாயங்களும் நமக்கொரு சூட்சுமமான விஷயத்தை காட்டுகிறது. அத்வைத மடங்கள் எப்படி விட வேண்டுமென்று என்று காட்டுகிறது. அதற்காக ஒருவரை உதாரணமாக்குகிறது. அதேசமயம் நீங்கள் விடவேண்டுமானாலும் அதற்கு ஸ்ரீ வைஷ்ணவமானது எப்படி எதையெல்லாம் கற்றுத் தேர்வது என்பதை உணர்த்துகிறது.சரணாகதியின் முக்கியத்துவத்தை காட்டுகிறது . நீங்கள் கிரகஸ்தராக இருந்தாலும் எல்லாவித பற்றுகளை (attachments) இல்லாமல் இருக்கலாம் என்கிறது. குரு பரம்பரை ,ஆச்சர்ய சம்பந்தம் மூலமாக பகவானை அடைவதை நமக்கு இந்த மடங்களும் ஆச்சர்ய புருஷர்களும் காண்பித்து குடுப்பார்கள்.

அந்த அத்வைத பிரம்மச்சாரியாக இருப்பவர் எதை பிடிக்கிறாரோ … அதையே இங்கு கிரகஸ்தராக இருப்பவரும் பிடிக்க முடியும் என்கிறது ஸ்ரீ வைஷ்ணவம். அதை பீடாதிபதிகளாக, ஜீயர்களாக உதாரண புருஷர்களாக காட்டி இந்த இரண்டு சம்பிரதாயங்களும் உபதேசிக்கின்றன.

ஒன்றை மறக்கக் கூடாது. இரண்டு சம்பிரதாயங்களுமே, ஒரு கட்டத்தில் போதும் உங்கள் இந்த பூலோகத்திலுள்ள விளையாட்டுக்களை முடித்துக் கொள்ளுங்கள் என்கிறது.

இப்போது ஸ்ரீ வைஷ்ணவத்தில் கிரகஸ்தனாக இருந்தாலும் ,சித் ,அசித் அனைத்துக்கும் மோட்சம் உண்டு. சந்நியாசியாக ஆனாலும் மோட்சம் உண்டு. இப்போது கிரகஸ்தாஸ்ரமத்திலிருந்து அடுத்த ஆஸ்ரமத்திற்குள் நுழைகிறார். ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போவதுபோல் போகிறார்.

இங்கு ஸ்ரீ வைஷ்ணவமாக இருக்கட்டும், அத்வைத மடங்களாக இருக்கட்டும். சைவ சித்தாந்த மடங்களாக இருக்கட்டும் சந்நியாசத்தை ஏற்றுக் கொள்ளுதல் என்பது மோட்சத்திற்காக மட்டுமல்ல. அந்த சந்நியாசம் ஏற்போருக்கு இங்கிருந்தபடியே மக்களுக்கும், இறைவனை அடையவிக்கும் கைங்கரியத்திற்கும் சேர்த்தே முக்கியம் அளிப்பார்கள்.

இப்போது ஸ்ரீமத் ராமானுஜர் மடங்கள் ஏற்படுத்தியது கூட, கோயில் கைங்கரியத்திற்காகவே ஏற்படுத்தினார். இன்னும் கேட்டால், சரணாகதி செய்துவிட்டு இல்லறத்தில் இருந்தால் கூட அவரையும் ஸ்ரீ ராமானுஜர் சந்நியாசி என்கிற பட்டியலில் கொண்டு வந்து விடுவார். ஸ்ரீ ராமானுஜர் சந்நியசாசம் வாங்கிக் கொண்டதே அவருடைய பத்தினி அவரின் சேவைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்கிற காரணத்திற்காகத்தானே.

இப்படி ஸ்ரீவைஷ்ணவத்தில் சந்நியாசம் ஏற்றுக்கொள்வொர் செய்ய வேண்டிய அனுஷ்டானங்கள் என்ன? எப்படி அவர்கள் சந்நியாசத்தை ஏற்கிறார்கள். என்னென்ன மந்திரங்களைச் சொல்லி ஏற்றுக் கொள்கின்றனர் என்பதை இன்னும் அடுத்தடுத்த விரிவான பகுதிகளில் பார்ப்போம்.

//இந்தக் கட்டுரையை எழுதும்போது தகவல்களை அளித்து உதவிய எங்களின் நண்பர் டாக்டர் உ.வே. வெங்கடேஷ் அவர்களுக்கும், புவனகிரி ஸ்ரீமான் கோகுலாச்சாரி அவர்கட்கும் எங்களின் நமஸ்காரங்கள்.//

“என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கு

யான் அடைவே அவர்குருக்கள் நிரை வணங்கிப்

பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்

பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் ந்ம்பி

நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்

நாதமுனி சடகோபன் சேனை நாதன்

இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு

எம்பெருமாள் திருவடிகள் அடைகின்றேனே”