அதிரன்/இருக்கை

ஞாயிறு அன்று
சிறப்பு பயிற்சிக்கு வந்திருந்த
பத்தாம் வகுப்பு ஜெயந்தியை
தலைம ஆசிரியை
அறைக்கு சென்று வருகை பதிவேட்டை வைத்து வர பணிக்கிறார் வகுப்பு ஆசிரியை

இன்று பள்ளி விடுமுறை என்பதால்
தலைமை ஆசிரியை அறை ஆள் அரவமின்றி ஒய்வாகவே இருந்தது

பதிவேட்டை வைத்து விட்டு திரும்புகையில்
அவள் கண்ணில் பட்டது வெள்ளைத்துண்டு ஒன்றை போர்த்தி அமைதியாய் நின்ற தலைமை ஆசிரியையின் இருக்கை

சற்றே யோசித்தவள் சட்டென்று அதில் அமர்த்துவிட்டாள்

சற்றைக்கெல்லாம் ஒரு கர்வமும் அதிகாரமும் அவள் மேல் குடிகொண்டது

மனம் ஏதோ சொல்ல நினைத்தது வார்த்தை வரமறுத்தது

கடைசியில்
“இனிமேல் பத்தாம் வகுப்பிற்கு சிறப்பு வகுப்பு இல்லை “
என்று சத்தமாக சொல்லிவிட்டாள்

கல கல கலவென எங்கோ சிரிப்போலி கேட்க
பயத்தில் எழுந்தவள்
வேக வேகமாய் தன் வகுப்பை நோக்கி
நடக்கத் தொடங்கினாள்.

அத்தனையும் தூரத்திலிருந்து
இரண்டு கண்கள் மட்டும்
ரசித்துக் ‍ கொண்டிருந்தன.