
தமிழ் ஆய்வுலகின் பொக்கிசம்: ஐயா பெ.சு.மணி நான்காம் ஆண்டு நினைவு தினம்
பல்கலைக்கழகம் தாண்டாத எளிய அறிஞர்.ஆனால் பல்கலை கழக மாணவர்களுக்கு இவரது புத்தகங்களே வளர்வதற்கான படிக்கட்டுகள்.
தேசியம் என்பது நமக்கு தெரியும். ஆனால் இவரது கன்னிப் படைப்பான “இந்திய தேசியமும் தோற்றமும் வளர்ச்சியும் ” புத்தகம் வந்த பிறகுதான் இவரது பரந்த அறிவு தமிழ் ஆய்வுலகில் அழுத்தமாக தடம் பதித்தது.
கார்ல் மார்க்ஸ் இலக்கிய இதயம் என்ற நூலின் மூலமாக தமிழ் ஆய்வுலகப் பரப்பில் பண்டிதர் அயோத்திதாசர் குறித்து ஆரம்பகால அறிமுகத்தை தமிழ் ஆய்வுகளுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி இவர்.
கலாச்சார தேசியம் என்ற கோட்பாட்டில் தமிழகத்தில் பிரம்ம சமாஜம் என்ற இவரது அடுத்த படைப்பும் தமிழ் ஆய்வுலகில் அரிய பொக்கிசமாக இன்று வரை பேசப்படுகிறது.
தூசு படிந்து கிடந்த பல அரிய இதழ்களைத் தேடி தேடி கண்டடைந்து இதழியல் ஆய்வுகளுக்கு முத்தாய்ப்பாக பல அரிய கட்டுரைகள் வெளியிட்டவர்.
ஜி.ஏ.நடேசன், சுப்பிரமணிய சிவா, பெரியவர் வ.உ.சி, பாரதியார், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஜி.சுப்ரமண்ய அய்யர், என ஏராளமான தேசியவாதிகளை தனித்தனி புத்தகங்கள் கொண்டு வந்து தமிழ் ஆய்வுகளுக்கு வளம் சேர்த்தவர்.
அறியப்படாத பல முக்கிய தமிழ் ஆளுமைகளை என் போன்றோரும் எளிதாக அறிந்து ஆய்வாளராக பரிமளிக்க காரணம் இவரது அறிவு சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் படித்ததே. அந்த வகையில் கோ.வடிவேல் செட்டியார், ரிப்பன் பிரஸ் இரத்தின செட்டியார், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா, அசலாம்பிகை அம்மையார், சிங்காரவேலர், கா.சி. வேங்கடரமணி, குத்தி கேசவபிள்ளை, வரதராஜூலு நாயுடு, எம்.ஆர்.ஜம்புநாத அய்யர், சிவசங்கர பாண்டையாஜி போன்ற ஏராளமான ஆளுமைகளை வெளியில் கொண்டு வந்தவர்.
வெ.சாமிநாத சர்மா மற்றும் ம.பொ.சி. பட்டறையில் தன்னை செதுக்கி கொண்டவர்.
பெரியவர் வ.உ.சி. மற்றும் வெ.சாமிநாத சர்மா வழியில் தனது மனைவிக்காக நான் மறவேனே என்ற படைப்பை தந்தவர்.
அவரது மறைந்த மனைவிக்காக “நான் மறவேன்” நூல் வெளியீட்டு விழாவில் பெரிய ஆளுமைகளோடு பேரா.இ.சுந்தரமூர்த்தி (மேனாள் துணைவேந்தர்) ம.ரா.அரசு (பேராசிரியர்) பழ.நெடுமாறன், மூத்த அரசியல்வாதி திரு.நல்லகண்ணு , குமரி ஆனந்தன், ஸ்டாலின் குணசேகரன் மற்றும் இலங்கை திருமதி. பப்பி ரவீந்திரன் ஆகியவர்களோடு) அவர்களுக்கு சமமாக நான் மறுத்த போதும் எளியோனாகிய எனக்கும் அவர்களுடன் சமமான அரியாசனம் அளித்து என்னை திக்குமுக்காட வைத்தவர்.
அன்றைக்கு அவர் எனக்கு அளித்த அந்த அரியாசனம் பலருக்கு பொறாமையும் எரிச்சலையும் உண்டாக்கியது என்பது என் கண்கூடாக அறிந்தேன். ஏனெனில் யாரும் செய்ய கூடாததை துணிந்து அவர் செய்பவர்.
இன்று நான் பெரியவர் பித்தனாக இருப்பதற்கு காரணம் ஒரு வகையில் அறிஞர் பெ.சு.மணி அவர்களே. என்னுள் இரத்தமும் சதையுமாக பெரியவர் வ.உ.சி.யின் மெச்சத்தகுந்த தியாக வாழ்வினை மணிக்கணக்காக தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தவர். பெரியவர் வ.உ.சி.யை முதண்மையாக இந்த தமிழகம் கொண்டாடியிருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தவர்.
முத்தாய்ப்பாக கிராமத்தில் இருந்து வந்து களிமண்ணாக இருந்த என்னை தமிழ் ஆய்வுகளில் நெறிப்படுத்த என்னை கைபிடித்துக் கொண்டு கூட்டிச் சென்ற பெரும்பாக்கியத்தை அளித்தவர் ஐயா பெ.சு.மணி அவர்கள்.
இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த தருணத்தில் உண்மையிலேயே தன் தூக்கத்தை தொலைத்து மனம் வெகுண்டு அவதிப்பட்டதை நேரில் அறிந்தவன்.
ஐயா என் வாழ்வில் உங்களைப் போன்ற மிகப் பெரிய சான்றோரோடு கூடிக் கழிக்கக் கூடிய பெரும் பாக்கியத்தை இறைவன் எனக்கு அளித்தான். உங்களோடு பழகி கழிந்த நாட்களை என்றும் நினைவில் கொள்வேன்.
என்றும் உங்கள் நீங்கா நினைவுகளுடன் ….
