
கை நீட்டி கன்னம் வருடி
மெய்தடவி மோவாய் தொட்டு
தலை முன்னுச்சி ஒதுக்கி
தன்மையாய் பேசுவாய் !
விரல்களை மெதுவாய் நீவி
கை கோர்த்து இறுகப் பற்றி
என் உள்ளங்கை எடுத்து
உன் கன்னம் புதைப்பாய் !
அறுபது வயதுப் பெண்ணாய்
அருகில் இருந்தாலும்
பள்ளிக் குழந்தையாய்
என்னைக் கொஞ்சி மகிழ்வாய் !
அம்மா உன் அந்தப் பாசம்
அணைத்து முத்தமிடும்
ஆசை அன்பு வாசம்
அணைந்ததே,அருகியதே !
நோயில்லை தளர்வில்லை
படுக்கவில்லை முனகலில்லை
பாட்டுப் பாடச் சொல்லி
பக்கத்தில் படுத்தவள்,
ஒரு நாள் தூங்கி மீண்டும்
மறு நாள் எழுந்திடாமல்
விழிக்க மறந்து போனாய்!
சொல்லாமல் போய் விட்டாய்!
முதுமைத் தளர்வில் உன்னை
கை பிடித்து அழைத்துச் சென்றேன்.
அங்கிருந்து காத்திரு என்னை
நீ கை பிடித்துக் கூட்டிச் செல்ல !!!!

வணக்கம்
நமக்கு எத்தனை வயதானாலும் நம் அன்னைக்கு நாம் என்றுமே குழந்தை தான். அதை யாரும் மறுக்க முடியாது.
இங்கு அவர்கள் அன்னையின் செயல்கள் அனைத்தையும் நான் என் அன்னையின் மடியில் தலை சாய்க்கும் ஒவ்வொரு முறையும் அனுபவித்துள்ளேன்.
அந்த கடைசி வரிகள்
“அங்கிருந்து காத்திரு என்னை
நீ கை பிடித்துக் கூட்டிச் செல்ல” !!!!
உண்மையில் என் உயிர் தொட்ட வரிகள்.
நன்றி திருமதி கிரிஜா ராகவன் அவர்களே.
வாசகன்
தர்மராஜன் குமார்