
- காலக்கணக்கு
காஷ்மீருக்கு உலா சென்ற
அப்பாவிப்பயணிகளைச்
சுட்டுப் பொசுக்கிய
தீவிர வாதிகள்
பாகிஸ்தான் மண்ணில்
தயார் ஆனவர்கள்
தீவிர வாதிகளை வளர்த்து
உலகெங்கும் உலவ விட்டு
ஈனத் தொழில் நடத்தி வரும் பாகிஸ்தானை
யார்தான் கேட்க முடியும்
அரசாங்கம் தீவிரவாதிகட்கு
கோட்டை போல் தங்குமிடம் அளிக்கும்
தாராளம் பாகிஸ்தானிலுண்டு
நோக்கம் சரியில்லாதவர்கள்
நொந்து போவார்கள்
ஒருநாள்
சரித்திரம் எப்போதும்
சரியாகவே தீர்க்கும்
காலக்கணக்கு.
2 பொள்ளாச்சி
பொள்ளாச்சி என்றாலே
பெரிய சந்தைதான்
நினைவுக்கு வரும் யாருக்கும்.
சமீபமாய்ப் பொள்ளாச்சி
பொல்லாத ஊர் ஆயிற்று
தீர்ப்பு வந்திருக்கிறது
சாகும்வரை சிறை
ஆறு பேருக்கும்.
செய்த கொடுமைக்கு
இப்பூவுலகம் எப்படித்தான்
இவர்களைத் தாங்கிச் சுழல்கிறதோ.
மகளிரின் வாழ்வோடு
விளையாடிய ஈன
ஜன்மங்களை
எப்படி அழைப்பது
கழிசடைகள்
காறித்துப்புங்கள்
காத தூரம் தள்ளியே
நில்லுங்கள்.
- சிந்தூர்
தீவிரவாதிகளை எதிர்த்து
நடந்த சிந்தூர் யுத்தத்தில்
பங்கேற்றக் கர்னல் குரேஷியை
மத்யப்பிரதேச மந்திரி ஒருவர் எப்படி அழைத்திருக்கிறார் பாருங்கள்
தீவிரவாதிகளின் சகோதரி கர்னல் குரேஷியாம்
அவரையே அனுப்பி
கொன்று முடித்ததாம்
அதிதீவிர வாதிகளை
இந்திய ராணுவம்.
எப்படி உருப்படும்
எம் சமூகம்?
நாக்கில் நரம்பில்லாமல்
ஆட்சி பீடத்தில் அமர்ந்து
பேசுகிறார்கள்.
செங்கோல் நட்டு வைத்து
நாடாளுமன்றத்தில்
தரை வீழ்ந்து வணங்கிய தலைவர்கள்
பதில் சொல்லட்டும்.
- அமெரிக்கா
பாகிஸ்தானுக்குக்
கொம்பு சீவி விட்டு
இந்தியாவுக்கு எதிராய்
அதனை எப்போதும் நிறுத்தியவர்கள்
அமெரிக்கர்கள்
பன்னாட்டு நிதி நிறுவனம்
காசுக்கடன் கொடுக்க
பாகிஸ்தான் ஆயுதமாய்
வாங்கிச் சேர்க்கும்
இந்தியாவுக்கு எதிராய்
அவை எப்போதும் வெடிக்கும்
மத்யஸ்தம் செய்யவே
வருகிறாராம் அமெரிக்கத் தலைவர்
அய்யமே இல்லை
உலக மக்களுய்ய
ஓயாமல் சிந்திப்பார்
எப்போதும் அந்த தரும வான்.
5.பொம்மைகள்
கோடை வெயில்
மண்டையைப்பிளக்கிறது
ஆண்டுக்கு ஆண்டு
புவியெங்கும் இதே அவஸ்தை
வாழ் புவி வெப்பமயமாவதைத்
தடுக்க வேண்டும்
விஞ்ஞானிகள் பேசுகிறார்கள்
பிழையே இல்லாத ஆங்கிலத்தில்
போர் எங்கே ஓய்கிறது?
ஆண்டுக்கணக்காய்
துப்பாக்கி க்குண்டு
பீரங்கி வெடி முழக்கம்
கரும்புகையோ வானம்
நிறைத்துக் கொண்டு
மனித உயிர்கள் மடிந்து போவதை
வெற்று எண்ணிக்கையாய் மட்டுமே பார்க்கிறார்கள்
கழுத்தில் டை கட்டியவர்கள்
அவரவர்களுக்கான ஈகோ
வானைத்தொட்டுக்கொண்டு
புத்தரும் ஏசுவும் காந்தியும்
கொலு வரிசையில்
பொம்மைகளாகிக் கச்சிதமாய்ச் சிரிக்கிறார்கள்
.
