
சுகம்
எல்லைகளில் கால் கடுக்க நிற்கிறார்கள்.
வீரமும் காதலும் எழுதுகோல களில் ததும்பத்ததும்ப
எழுதிய பெருமிதங்கள்
பொறுக்க மாட்டாமல் பொரூ முகின்றன.
பச்சை பசும் வெளியில் குருதிப் பூக்கள்
மலரும் வாசம் எங்கள் நாசிகளை
எட்டுவதில்லை
அன்றே சொன்னார் முண்டாசுக்கவிஞர்
உரமற்ற நெஞ்சம்
நேர்மை இல்லாத வாழ்வு
வாய்ச்சொல் வீரர்களுக்கு ஒரு விண்ணப்பம்.
உங்கள் கைகள் போரிட வேண்டாம்
சுகமாக இருங்கள்.
சுமைகளை ஏற்றாதீர்கள்.
மலைத்துகள்
வெப்பத்தை உள் வாங்கிக் கொண்ட
மலையிலிருந்து புறப்பட்ட நதி துள்ளிக் குதித்து
பாறைகளைத் தழுவி உருட்டி வந்தது.
ஒவ்வொரு கணமும் புதிதொரு நீர்த்துளி
பாறையில் செதுக்கி செதுக்கி
நெடும் காலத்தில் பிறந்த கூழாங்கற்கள்
கையில் எடுத்து தடவும் போது
கிளுகிளுத்துச் சொன்னது
நானும் மலையே
நான்தான் மலையே!
நடுநிலை
நடுவாக நின்றேன்
நடு இடது என்றார்கள்.
சற்று அனுசரித்து நேராக நடு வில் நின்றேன்
நடுவலது என்றார்கள்.
சற்று மேலே பறந்தேன்
ஓடிவிட்டான் என்றார்கள்
சற்று இறங்கி பூமிக்குள் மறைந்தேன்.
பயந்துவிட்டான் என்றார்கள்.
மேலே முடியையும்
கீழே அடியையும் பார்க்க முயன்ற நீ
எங்கள் இனம் இல்லை என்றார்கள்.
செம்பருத்தி
நுனிக் கிளையில் பூத்திருந்தது.
செவ் விதழ்களால் ஈர்த்துச் சிரித்தது
ஒயிலாய் தலையை வளைத்து
பூமிக்கும் வேருக்கும் நன்றி சொன்னது.
நிமிரும் போது மற்றொரு
மொ ட்டும் மலர்ந்து வந்தது.
உங்களில் யார் திஜாவின் செம்பருத்தி?
அந்த நாயகிகள் நாங்கள் தானே
என்று சிரித்தது சிறிய பூ.
மொழிச் சரடு
காத்திருக்கிறேன்
சொற்களுக்காக.
அவை பொருளாக
வேண்டுமென்ற வேண்டுதலோடு.
கோர் த்திருக்கிறேன்
சரடில் சொற்களை
அவரவர் அதிலிருந்து தம்
சொற்களைப் பெறலாம்.
என் சொற்களை விடலாம்
கீழே விழுந்திருக்கும் சொற்கள் தாமே
மீண்டும் இணையும் சரட்டில்

அத்தனை கவிதைகளும் படிக்க சுவையாக இருந்தது. பொருட்செறிவும் சொல்லாட்சியும் மிக நன்று