எஸ் வி வேணுகோபாலன்
பள்ளிக்கூட நாட்களில் சிவாஜி ரசிகராக அல்ல, வெறியராக வாழ்ந்த காலம். காஞ்சிபுரத்தில் பாட்டி வீட்டில் படிக்கப் போகையில் உடன் வாழ்ந்த சொந்த அண்ணன் ரங்கராஜன், சித்தப்பா மகன் முரளி அண்ணன், சித்தி மகன் சுரேஷ் உள்பட சிவாஜி கொடி கட்டிப் பறந்த வீடு. சுவரில் பெரிய நிலைக்கடிகாரத்தின் கீழே, வாட்டர் கலர் பாக்சில் கிடைத்த வண்ணங்கள் எல்லாம் குழைத்து நடிகர் திலகம் வாழ்க என்று எழுதி வைத்திருந்தேன்.
“அதுக்குள்ள எங்கே புறப்பாடு?”
“இல்ல பாட்டி, .சினி………..மா …”
“என்னது, இவ்வளவு சீக்கிரம் எவண்டா போடறான் ஆட்டத்தை, சாப்பிடாம வெளியே போகக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன் இல்ல?”
“ஏழு மணிக்கு என்னத்த சாப்பிட….வந்து சாப்பிட்டுக்கலாம்…”
“இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேணாம்…தூக்கக் கண்ணு போகல, அதுக்குள்ளே எழுந்தடிச்சுப் போறானாம் பாரு, சினிமாவுக்கு….சின்னம்மாவாவது, பொன்னம்மாவாவது….வாடா உள்ள” என்று அதட்டல் போட்டாள் பாட்டி.
உள்ளே தண்ணீர் ஊற்றிவைத்த பழைய சோறு எடுத்து மோர் ஊற்றி அவசர அவசரமாகப் பிசைந்து, நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டு அடித்து நொறுக்கி விட்டுக் கையைக் கழுவிக் கொண்டு ஓட்டம். அண்ணன் நம்மைக் கைகழுவி விட்டு வண்டியை எடுத்துவிடக் கூடாது என்ற பதட்டம்.
சைக்கிளில் ஏறி உட்கார்ந்ததும், முரளி அண்ணன் காற்றாய்ப் பறக்கிறார், “டிக்கெட் கிடைக்கல, படத்தப் பார்க்கலன்னா, நீ தான் காரணம், தலைவன் பட ரிலீஸ், புறப்பட்டு வாடான்னா, உக்கார்ந்து தயிர் சோறு கட்டு கட்டிட்டிருக்க” அப்படின்னு அர்ச்சனை வேறு வழி நெடுக.
சின்ன காஞ்சி போலீஸ் ஸ்டேஷன் நெருங்கும்போது, “சட்டுன்னு குதிச்சு, வேகமா பின்னாலயே ஓடி வா… டபுள்ஸ் மாட்டிக்கிட்டா படம் பாக்க முடியாது…குதி…குதி” அப்படின்னு திடீர் உத்தரவு அண்ணனிடம் இருந்து.
ஏதாவது பேச முடியுமா, ஒரே ஜம்ப்…ஒரே ஓட்டம்…’போயிராத…போயிராத.. இதோ ஓடி வந்துட்டே இருக்கேன்…’
“அந்தப் பயம் இருக்கணும்…சின்னம்மாவாவது பொன்னம்மாவாவது…சொன்னாங்க இல்ல பாட்டி” என்று முரளி அண்ணனுக்கு சிரிப்பு.
ஒரு வழியாக, தியேட்டர் போய் நின்றால் உலக சிவாஜி ரசிகர்கள் மொத்தமும் காஞ்சியில் மாநாட்டுக்கு வந்தது மாதிரி கூட்டம்.
“படம் பார்க்க முடியுமா?” இது முரளி
“திரும்பிப் போயிருவோமா?”
“அதெப்படி, பாக்க வந்தா, பாத்துட்டுத் தான் போறோம்….அதுக்கு ஒரு வழி கிடைக்காமலா போயிரும்…” இது அண்ணன்.
இருநூற்று சொச்சம் டிக்கெட் கொடுக்க இருந்த டிக்கெட் கவுண்டர் முன்பான மலைப்பாம்பு கியூவில் நாங்கள் ஐநூறுக்கு அப்பால் எங்கோ இருந்திருப்போம் என்று நினைவு.
“ச்சே..எல்லாம் இந்தப் பழஞ்சோறால வந்த வினை…போச்சு…தலைவன் படம் முதல் நாள் முதல் ஷோன்னு நாளைக்கு ஸ்கூல்ல போய்ச் சொல்ல முடியாது..போச்சு..எல்லாம் போச்சு…’ என்று மனதிற்குள் போர் மூண்டுவிட்டிருந்தது.
‘கொஞ்சம் இங்கேயே இரு, பார்த்துட்டு வரேன்’ என்று முரளி அண்ணன் எங்கோ ஒரு நோட்டம் விட்டுவிட்டுத் திரும்ப வந்து நின்ற இடத்திலேயே நின்று கொண்டான். அப்போதுதான் அது நடந்தது… திடீர் என்று கூட்டம் வேகமாகக் கலைந்தது. சிதறியது. இங்கும் அங்கும் ஓடியது.
அடிதடி இல்லை. ரகளை இல்லை. வேறு ஏதோ ஒன்று நடந்து விட்டிருந்தது.
என்னை விடாமல் இறுக்கமாகக் கைப்பற்றி நிறுத்தி இருந்தான் அண்ணன்.
“பேசாம இரு…டிக்கெட் வாங்கறோம், படம் பாக்கறோம்…”
இப்போது, கியூவில் கவுண்டருக்கு மிக அருகில் நெருங்கி விட்டிருந்தோம் நாங்கள். டிக்கெட் வாங்கியாயிற்று…நான் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன், “என்னை ஏன்டா கிள்ளற ..”
“இல்ல முரளி, டிக்கெட் நிஜமா வாங்கிட்டமா”
“பேசாம உள்ள வந்து படத்தைப் பார்க்கற வழியைப் பாரு…கப் சிப்”
வெளியே அலைபாய்ந்தது ஒரு கூட்டம், பின்னால் டிக்கெட் போராடி வாங்கிக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்தது.
படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. சோடாலரே….என்று பையன்கள் சோடா, கலர் எடுத்துக் கொண்டு வேகமாக ஒரு நடை எட்டிப்பார்த்துப் போய்விட்டனர்.
“அயோக்கிய பசங்க…நாசமாத் தான் போவானுங்க” என்று பெரியவர் ஒருவர் பக்கத்தில் குரல் கொடுத்தார்.
அருகில் இருந்தவர், “என்னவாம்…வந்தாரா….”
“சும்மா வதந்திப்பா….அவரு ஏப்பா இந்த ஊருக்கு வரப்போறாரு….அதுக்குள்ளே சிவாஜி கணேசன் வந்துட்டாரு, முதல் ஷோ அவரே இங்கே தொடங்கி வைப்பாருன்னு கிளப்பி இருக்கான்யா….. புருடா உட்டுக் கூட்டத்தக் கலைய வச்சு முன்னாடி பூந்து டிக்கெட் வாங்கிட்டு வந்துருக்கானுங்க…மவனே சிக்கட்டும் கையில…” என்று இரைந்து கொண்டிருந்தார்.சுத்தமான கெட்டவார்த்தைகள் திருத்தமாகக் காதில் விழுந்தன…அவருக்கு வலப்புறத்தில் தான் முரளி அண்ணன் உட்கார்ந்திருந்தார். அந்தப் பெரியவர் திரும்பி முறைக்கும்போது, தியேட்டரில் இரண்டாம் மணி அடிக்கத் தொடங்கியது.
உள்ளே இருள் பரவியது. திரை விலகியது. ப்ரொஜெக்டர் வெளிச்சம் வேகமாய்ப் பாய்ந்து வெண்திரையை நிரப்பியது.
மெல்லிசை மன்னரின் பின்னணி இசையில்..ஓ….ராஜா…ராஜா…ராஜ…ராஜா… என்று எதிரொலிக்க டைட்டில்கள் ஓட ஆரம்பித்து விட்டிருந்தன.
“முறுக்கு சாப்பிடறியா ..பழஞ்சோறு போக இடம் இருக்கா பாரு வயத்துல” என்று முரளி இருட்டில் முறுக்கை நீட்டினார்.
“யாரு சொல்லியிருப்பானுங்க, நடிகர் திலகம் கார்ல வந்து இறங்கிட்டாருன்னு” என்று கேட்டேன், அண்ணனிடம்.
“நீ தான்னு சொல்லிடட்டுமா, பேசாமப் படத்தப் பாக்கறியா?” என்று பதில் வந்தது முரளி அண்ணனிடமிருந்து.
அருமையாக ரசித்துப் பார்த்தாயிற்று படத்தை.
திரும்ப சைக்கிள் எடுக்கும்போது கேட்டேன், ‘உன் வேலை தானே?” என்று.
“எப்படி வசதி, நடந்தே வீட்டுக்கு வந்துடறியா …நான் முன்னாடி போய்கிட்டே இருக்கேன்” என்றார் பதிலுக்கு.
“புரிஞ்சுக்கிட்டேன். கேக்க மாட்டேன்” என்று சிரித்தபடி ஏறி அமர்ந்து கொண்டே காரியரில்.
ஓ….ராஜா…ராஜா…ராஜா…ராஜா.
***************


Enjoyed reading the article. Very interesting.
பழைய நினைவுகளை கிளறியது. அந்த காலக்கட்டத்தில் காஞ்சியில் இருந்தது ஐந்து திரையரங்கங்கள். லட்சுமி, ராஜா, கிருஷ்ணா, கண்ணன், முருகன் தியேட்டர் மட்டுமே.
ஒவ்வொரு ஆண்டு விடுமுறை காலத்திலும் என் பாட்டி வீடு அவளூர் கிராமத்துக்கு (வாலாஜாபாத் அருகில்) செல்வது உண்டு. அப்போது சினிமா பார்க்க காஞ்சி செல்வேன். முருகன் தியேட்டர் தவிர பிற தியேட்டர்களில் நிறைய படம் பார்த்திருக்கிறேன்.
அற்புத பதிவு. 💐
இதை படித்த பிறகு என்ன சொல்வது.நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு சாந்தி திரை அரங்ககிர்க்கு 3 முறை சென்று 4வ்து முறை டிக்கெட் கிடைத்து படம் பார்த்தோம். அந்த தெய் வத்திர்கு இனை யாரும் இல்லை. இனி வரப்போவதும் இல்லை. அவருக்கு வாழ்த்து சொல்ல வையது இல்லை வணங்குகிறேன்.
சிறப்பான நினைவலைகள்.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அநேகம்.அதிலும் களை உணர்ச்சி உள்ளவர்கள் அவரை மிகவும் ரசிப்பார்கள்.மிகை நடிப்பு என்று குறை கூறுபவர்கள் கூட அவரை வெறுப்பது கடினம்.அன்றைய நாட்களில் அவர் நடிப்புக்காகவெகுடும்பம் kudumbamagapadam பார்க்க செல்வர்.உங்கள் பதிவில் என் ரசிப்புதன்மையை மீண்டும் நினைவில் ஆடவைத்தமைக்கு என் நன்றிகள்.
மிகவும் சிறப்பாக இயல்பாக நினைவுகளை மலரவைத்து மகிழவைத்துவிட்டீர்கள்
அனைவரையும்,சிவாஜி என்ற மாபெரும் நடிகரை அவரது பிறந்தநாளில் கெளரவித்து பெருமை சேர்த்து விட்டீர்கள்.மிக்க மகிழ்ச்சி நன்றி
என்னை விட்டு படம் பார்த்து விட்டு அதை கதையாக எழுதுவதே உன் வேலை
மிகச் சிறப்பு வேணுகோபால் சார். பாராட்டுக்கள் & வாழ்த்துகள்!
வேணுகோபாலன் தன் அனுபவத்தை உணர்வுபூர்வமாக அழகாக விளக்கியுள்ளார். எல்லோருக்கும் அத்தகைய அனுபவங்கள் வைத்து தான் இருக்கும்.பத்து வயதில் தெய்வ மகன், 12 வயதில் சவாலே சமாளி என்று சிவாஜி படத்திற்கு சென்ற அனுபவங்கள் தனிதான். ஒரு மாதம் அதைப்பற்றியே பேசுவோம்.
ஆமாங்க. ஆமாம்….அது ஒரு காலம்…மலரும் நினைவுகளாக….
ஆகா
இப்படியும் படம் பார்த்த அனுபவம் இருக்கிறதா?
நீங்கா நினைவுகளாய் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கும்
அந்த பொன்னான காலத்தை நினைந்து உருக வைத்து விட்டார்.
எனக்கும் இப்படி சில அனுபவங்கள் உண்டு என்ன.. ரசிகர் மன்ற தாஸ் தயவில் பல படம் நான் சிவாஜி ரசிகனா? ரெண்டு வயசுல பராசக்தி பாத்தவன் இல்லாம இருக்க முடியுமா 😂
வேணு தம்பிக்கு மட்டுமா..அக்காவுக்கும் இப்படியோர் அனுபவம் உண்டாக்கும்.
எட்டாங்கிளாஸ் படிக்கும் போது, ராஜபாளையம் தனலட்சுமி தியேட்டர்ல *எங்க ஊர் ராஜா* தீபாவளி ரிலீஸ். அப்போ, 5காட்சிகள்.இரவு7 மணி காட்சிக்குப் போனால், இங்கேயும் அனகொண்டா போல் மூர்க்கமான வரிசை. நாங்க ஸ்கூல் பிள்ளைங்க நால்வரும் தேமேன்னு நின்னோம் .டிக்கெட் கொடுக்க மணி அடித்த அடுத்த நொடி, தள்ளு முள்ளு தான். நாங்களும், இடித்து, அடி வாங்கி முன்னேறினோம்.டிக்கெட் கவுண்டர் அருகில் போய்ஒரு ரூபாய் தாளை நீட்டி, அண்ணாச்சி நாலு கொடுங்க (அப்போ டிக்கெட் 25பைசாதான்) கேட்டேன். பாப்பா *2* தான் இருக்கு பதில் வர, அதற்குள் பின்னாலிருந்து ஒரு கை எட்டணா நாணயத்தை நீட்டி, பிடுங்கி விட்டு, உள்ளே ஓட, எங்களுடன் வந்த ரேணுகா பாரு..பாரு..இன்னிக்கு உன் வீட்டுக்கு பாம்பு வந்துரும்ன்னு சாபமிட, சோகமாய் திரும்பினோம். அத்தனையும் கவனித்த *எங்க தெரு கறுப்பு ஆடு* மறுநாள் நாலுபேர் வீட்டுலயும் போட்டுக் கொடுக்க, செம அடி வாங்கினோம்.ஹைலைட் என்னன்னா,அடிக்கும் போது, *யாரை நம்பி நான் பொறந்தேன்* ன்னு ரேணுகா பாடியது தான். ரெண்டு வாரம் கழித்து, அம்மா அழைத்துப் போனாள் எங்க ஊர் ராஜாவைப் பார்க்க..
வேணுகோபால் ஐயா கதை ஒரு சுவாரசியம் என்றால் கோமதி அக்காவின் கதை (என் வயது 56) வின் கதையில் அடி வாங்கும் போது பாட்டுப் பாடியது, அதன் மூலம் அவர்கள் சாதித்தது (?) மிக அருமை.
வேணுகோபால் ஐயா கதை ஒரு சுவாரசியம் என்றால் கோமதி அக்காவின் கதை (என் வயது 56) வின் கதையில் அடி வாங்கும் போது பாட்டுப் பாடியது, அதன் மூலம் அவர்கள் சாதித்தது (?) மிக அருமை.
Good posting
இனிமையான அனுபவங்கள்… என்ன …உங்களது வர்ணனை நீங்கள் அருமையான கதை சொல்லி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது… தொடருங்கள்…