
ஒரு ஓட்டுநரைத்தான்
நான் மணந்துள்ளேன்;
என்பது எனக்கு
மூன்றாம் மாதமே தெரிந்துவிட்டது.
தேர்ந்த இயக்குநர் அவர்!
இப்படி உடுத்து!
அப்படி பேசு!
இதை இவ்வாறு செய்!
அவரிடம் அவ்வாறு பேசு!
ஒரு வார்த்தை கூட
எதிர்மறை பதமாய்
இருக்காது;
எனக்கு
எதிர் சொல் எடுக்கவோ;
எதிர்வினை ஆற்றவோ;
இயலாது!
என்னால் இயலும்;
எதிர்வினை ஆற்றவும்
எதிர்சொல் பேசவும்.
அதற்கான வாய்ப்பை
அவர் அளித்ததே இல்லை.
என்பதில் எனக்கு குறைதான்!
வலுவுக்கு எப்படி
வம்புக்கு இழுப்பது?
அவர் இயக்கத்தில்
எல்லாம் சரியாகத்தான் போனது; எளிதான வாழ்வு.
எதிர்காலத்தில்
‘எள் என்பதற்குள்
எண்ணைக் குடம்’
கொண்டு வரும் மனைவி என்று பெயர் பெற்றேன்.
மனதில் மட்டும்
மட்டற்ற ஏக்கம்;
என் இஷ்டப்படி
நான் வாழ்ந்ததே இல்லை!
இன்று நான் அவரின் ஓட்டுநர் ஆகவும்.
நடத்துனர் ஆகவும்,
உருமாறியது;
அவரே அறியார்
வயோதிகம் காட்டும் வேடிக்கை

Miga nandru