
(இன்று அழகியசிங்கரின் சொல் புதிது ஜூம் நிகழ்வில் வாசித்த கவிதைகள் பத்து . எனது கவிதைத் தொகுப்பு மின்கவிதைப் புத்தகம் ‘இருட்டின் வெளிச்சம் – நாகேந்திர பாரதியின் கவிதைகள் – தொகுப்பு 85 லிருந்து) கவிதைகள் பத்து
இரக்கம்
ஓரக் குடை வழி
ஒழுகும் மழைநீரில்
பேண்டு நனைந்திட
பிழைத்த சட்டையோடு
காற்றில் பறக்காமல்
குடையை இறுக்கியபடி
ஓரத்தில் நிற்போர்க்கு
இரக்கப் பார்வையோடு
விரைந்து நடக்கையில்
விரல் ஒன்று நீளும்
குடைக்குள் இடம் கேட்கும்
குறியீட்டை ஒதுக்கி விட்டு
விரையும் வேகத்தில்
கரையும் இரக்கம்
ஏனிந்த ஓட்டம்
பள்ளிப்பருவ ஓட்டத்தைப்
பெற்றோர் தடுப்பதில்லை
வேலைப்பருவ ஓட்டத்தை
மற்றோர் தடுப்பதில்லை
குடும்பப்பருவ ஓட்டத்தைச்
சுற்றோர் தடுப்பதில்லை
எண்ணங்களின் ஓட்டத்தை
நாமே தடுப்பதில்லை
எரிகின்ற நேரத்தில்
எழுந்தோட எழும்பும்
உடலின் ஓட்டத்தைத்
தடுத்துப் படுக்க வைப்பான்
கருமமே கண்ணான
சுடுகாட்டுக் காவலாளி
இடை வெளி
———-
அடுத்த ஊரே
அப்போது தூரம்
அங்கிருந்த உறவுகளோ
அப்போது பக்கம்
அடுத்த நாடே
இப்போது பக்கம்
இங்கிருக்கும் உறவுகளோ
இப்போது தூரம்
பக்கமோ தூரமோ
இடை வெளியில் இல்லை
மௌன சப்தம்
இலைகளின் மௌன சப்தம்
வேர்களை நீள வைக்கும்
மலர்களின் மௌன சப்தம்
வண்டினை வரவழைக்கும்
மலைகளின் மௌன சப்தம்
மரங்களைச் செழிக்க வைக்கும்
துளைகளின் மௌன சப்தம்
காற்றுக்குக் காத்திருக்கும்
இயற்கையின் மௌன சப்தம்
இறைவனைத் துணைக்கழைக்கும்
இறைவனின் மௌன சப்தம்
உலகினை இயங்க வைக்கும்
மௌனத்தின் மௌன சப்தம்
மனதினை மலர வைக்கும்
அழுக்கின் அழுக்கு
அழுக்கின் அழுக்கிற்கு
ஆரம்பம் ஆராய்ந்தால்
அறியாமை இருளகற்றும்
தீக்குச்சி கிடைத்து விடும்
வன்முறை அழுக்கெல்லாம்
வேலையில்லாச் சகதியினால்
பெண்ணடிமை அழுக்கிற்குக்
கல்வியின்மை காரணமாம்
தீண்டாமை அழுக்கெல்லாம்
திருந்தாத சில பேரால்
ஜாதி வெறி மத வெறியோ
சாத்திரத்தின் கழிவுகளாம்
ஞானமழை பொழிவதற்கு
நல்லோர்கள் வந்து விட்டால்
தானாக மறைந்து விடும்
தாங்கி வந்த அழுக்கெல்லாம்
ஆனாலும் ஒரு கேள்வி
அடி மனதில் எழுவதுண்டு
அன்றாடம் சோறுக்கே
திண்டாடும் பூமியிலே
அடிப்படை வசதிக்கே
அல்லாடும் நாட்டினிலே
மன அழுக்கை நினைப்பதற்கு
நேரமுண்டா மக்களுக்கு
இருட்டின் வெளிச்சம்
வெளிச்சத்தைத் திருடியவன்
விட்டுச் சென்ற
அடையாளக் குறிகளாய்
ஆகாயத்தில் நட்சத்திரங்கள்
இருட்டு
இறைவன் போர்த்திக்கொண்ட
கனத்த போர்வை
அவனைத் தேடுபவர்கள்
இங்கே திண்டாடுவார்கள்
அவனைத் தெரிந்தவர்கள்
இதைக் கொண்டாடுவார்கள்
இது ஒரு
கருப்பு வெளிச்சம்
இது
அடையாளம் காட்டும்
அகங்கள் ஆயிரம்
இங்கே தொலைந்து போனவர்கள்
தங்களைத்
திரும்பப் பெற்றவர்கள்
நிழலும் நிஜமும்
———
நிழல்கள்
சில சமயம்
முன்னால் போகின்றன
சில சமயம்
பின்னால் வருகின்றன
சில சமயம்
பதுங்கிக் கொள்கின்றன
நிஜங்களும் கூட
அப்படித்தானோ
எல்லாம்
நேரத்தைப் பொறுத்தது
புகைப்படம்
வீட்டுக்கு வெள்ளையடிக்கக்
கழற்றியதும் தெரிந்தது
மாலையோடு மாட்டியிருந்த
புகைப்படத்தில் தூசி
சிந்திய கண்ணீரைச்
சேர்த்துத் துடைக்கையிலே
தண்ணீர் தேவையில்லை
துண்டை ஈரமாக்க
தூசி தொலைந்தது
சிரித்தபடி அப்பா
தலைமுறைகள்
——-
வாழ்க்கையை
அதன் போக்கில் வாழ்ந்து விட்டு
போய்ச் சேர்ந்தது
ஒரு தலைமுறை
தன் போக்கில் வரவழைக்க
முயற்சி செய்தது
ஒரு தலைமுறை
யார் போக்கிலோ விட்டு விட்டு
குழம்பி நிற்கிறது
ஒரு தலைமுறை
ஏதோ
——
ஏதோ ஒரு வித்து
விழுந்தது எழுந்தது
ஏதோ சில பேர்
வளர்த்தது வாழ்ந்தது
ஏதோ ஒரு சம்பவம்
மாற்றியது ஏற்றியது
ஏதோ ஒரு திருப்பம்
சறுக்கியது இறக்கியது
ஏதோ ஒரு வாழ்க்கை
நடந்தது முடிந்தது
ஏதோ ஒரு இடத்தில்
எரித்ததோ புதைத்ததோ
———-

Arumai sir ! 🌺🙇♀️👏
நல்ல கவிதைகள்