
20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள்
பச்சை நிறைந்ததென் வீடு
பாகை, புடலை, அவரை, முலாமென
அடுக்கிச் சொல்லலாம்
முயல், புறா, முட்டைக் கோழியும்
அன்பால் வளர்க்கப் பட்டது
வேலி வளர்த்து பாதுகாப்போடு
விடுமுறை மகிழ்ச்சி குப்பையில் தெரிய
ஞாயிறு தோறும் வளர்ந்ததை வெட்டுவார் அப்பா.
பாகை வேரில் பெருங்காயம் வைத்தோம்
தம்பி மரித்த முன்நாள்
பாலுக்கு வந்த சுற்றம் கூடி
மரண விளைச்சலென மயங்கினர்
முற்றத்து மரம், ஒற்றைக்கால் புறா
உதவாது என்று
ஏழாம் நாள்வரை இருந்தே ஒழித்தனர்.
இன்று
அப்பாவைப் பார்ப்பதாக அவரும்
என்னைப் பார்ப்பதாக நானும்
தம்பி படத்தின் முன்நின்று
அவர் அழ நான் பார்த்தேன்
எனக்கும் நினைவிருக்கிறது
மீதம்வைத்த பால் டின்னை சுரண்டித் தின்றது
அவன் அழுகையில் நான் பயன்பெற்றது.
காய்க்காச் செடியை எருவாக்கி
மற்றுமோர் செடிவளர்க்கும் தந்தைக்கு
மனதில் நிற்குமா செடிகொடியை?
எங்கள் கேமராவும் ஏனோ மறந்து போனது
பச்சைச் செடிகளை படமெடுக்க.
அப்படி படமே உண்டென் றாலும்
இழப்பை அறியா திங்கே
படத்தைக் கண்டு மகிழ்ந்திருப்போம்.
