
கவனமின்மையின்
கண்கள்
எப்போதும்
முதுகுப்புறத்தில்தான்
இருக்கின்றன.
எதிலும்
நிதானம் கொள்ளாத
அவசரக்காரனின்
பதற்றத்தோடு
சிந்திக்கத் தவறும்
மூளையும்
அதனுடன் சேர்ந்திருக்கிறது.
‘பொறுப்பு உணர்ச்சி’ என்ற
உணர்ச்சியற்ற
ஜடமொன்றும்
அதற்குள் உறைந்திருக்கிறது.
அதன்
அக்கறையின்மையால்
பள்ளி வாகனத்தில்
அழைத்துச் சென்ற
நாளைய கனவுகளை
கை, கால், முகமென
உருக்குலைத்து
சிதைத்து
இடறியுள்ளது
ரயில்வே கிராசிங்கில்.
நடந்த துயரத்திற்கு
ஏதோவொரு காரணத்தை
இப்போதும் தேடி
தன் கவனமின்மையை
காப்பாற்ற
பயணித்துக் கொண்டிருக்கிறது
கவனமின்மை.
இதை கவனித்த
ஒவ்வொரு மனமும்
சிறு கனவுப்பிஞ்சுகளுக்காக
இரங்கற்பா எழுத முடியாமல்
வாய் பொத்தி
அழுகிறது.
—

One Comment on “செ.புனிதஜோதி/பொறுப்பின் பஞ்சம்”
Comments are closed.