தங்கேஸ்/சவாரி

பாசம் என்பது மரியாதையாகவும்
அன்பு என்பது கண்டிப்பாகவும்
மாறிய நாட்களில்
அப்பா எங்களை விட்டு அந்நியமாகிப்போனார்

அதே சிரிப்பு அதே பேச்சு
அதே நடை உடை பாவனை
அதே கசங்கிய சட்டை
நாள் முழுவதும் மாறாத உழைப்பு
அப்படியே தான் இருக்கிறார்
அவர் மாறவில்லை
நாங்கள் தான் மாறி விட்டோம்

காலம் ஒரு பனிக் கண்ணாடியாகி
அவரை அந்தப்புரம் நிறுத்தி வைத்து வேடிக்கை காட்டுகிறது

கழுத்தை கட்டிக்கொண்டு
ஊஞ்சல் ஆடுவதற்கு
பிள்ளைகளுக்குள் கடும்போட்டி
இருந்த நாட்களில்
அப்பா ஆல மரம் போல் இருந்தார்
அவர் கைகள் நெடிய விழுதுகளாகி தாங்கின

தொலைந்த அந்த பால்யத்தை
எங்கே போய் தேடுவதென்று தெரியவில்லை

இப்பொழுதும் போய் கழுத்தைக்
கட்டிக் கொண்டால் அவர்
ஒன்றும் சொல்லப்போவதில்லை
ஒரு பொக்கை வாய் சிரிப்பு சிரிப்பார்
அவ்வளவு தான்
ஆனால் அவரை தொட்டுப் பேசவாவது அனுமதிக்கிறதா
பருவங்களை இடம் மாற்றி வைத்த பூதம்

உண்மையில்காலம் என்பது என்ன ?
மனிதர்கள் பிரிந்து கொண்டே செல்லும்
தொலைவின் நீளமோ ?

சீட்டு கட்டுகளைப் போல மனிதர்களை
கலைத்துப் போடும் வாழ்க்கை
அப்பாவையும் குழந்தைகளையும்
எதிர் எதிர் துருவத்தில் வைத்து விட்டு
வேடிக்கை பார்கிறது

வேலை முடிந்து
வீட்டுக்கு வரும் நேரங்களில்
முதுகில் என்னை
ஏற்றிக் கொண்டு
யானை சாவாரி செய்த அப்பாவை
ஒரு நாளும் நான்
முதுகில் சுமந்த தில்லை நான்
இனி மனதிலாவது சுமக்க வேண்டும்.

பி. ஆர்.கிரிஜா/கொசு ! – விருட்சம் நாளிதழ்

செ.புனிதஜோதி/பொறுப்பின் பஞ்சம் – விருட்சம் நாளிதழ்