சிவசங்கரி / அப்பா

4
ஏற்கனவே, முன் அத்தியாயத்தில் கூறினதுபோலவே ‘ஸர் ராபர்ட் ஸ்டேன்ஸ்’ ஸ்டேன்ஸ்’ என்கிற வெள்ளைக்காரரிடமிருந்து எட்டாயிரம் ரூபாய்க்கு பஸ் ஒன்று வாங்கி அதைப் பழனி-பொள்ளாச்சி சாலையில்
ஓட்டி, பின்னால் பிரம்மாண்டமாய் வளர்ந்த மோட்டார் தொழிலுக்கு அப்பா காலடி எடுத்துவைத்தபோது அவருக்கு வயது 27 தான்.
அப்பா பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்று முறையாகப் பாடம் எதுவும் படிக்காதவர் என்றாலும், தானாகப் படித்து அவர் அறிந்த விவரங்கள் ஏராளம். பஸ்ஸிற்குச் சொந்தக் காரரான கையோடு, அதைத் திறமையாக ஓட்ட மட்டும் அப்பா கற்கவில்லை. மோட்டார், பஸ் சம்பந்தமாய் கிடைத்த அத்தனை புஸ்தகங்களையும் படித்து, ஸ்டேன்ஸ் போன்றவரிடம் தெரியாத விவரங்களைக் கேட்டறிந்து, ஓய்வு நேரங்களில் என்ஜினின் பாகங்களைக் கழட்டி, மீண்டும் பொருத்தி அதன் நுட்பங்களை அறிந்ததன் மூலம், மோட்டார் என்ஜினியரிங் முறையாகப் படித்து ஞானம் பெறும் நபரை விட அவருடைய அறிவு அதிகமாக இருந்தது என்பது அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட கருத்து.
நானே பார்த்திருக்கிறேன்.. ஒரு பஸ் அல்லது கார் ஓடி வந்து நிற்கும் சப்தத்தை வைத்துக்கொண்டே அந்த வண்டியில் எங்கே, என்ன கோளாறு உள்ளது என்பதை அப்பா துல்லியமாகக் கூறுவார்; மெக்கானிக் பிறகு என்ஜினைப் பிரித்துப் பார்த்தால் இம்மி பிசகாமல் அப்பா சொன்னது அப்படியே இருக்கும்!
ஒரு பஸ்ஸில் துவங்கிய தொழில் மறுவருடமே இரண்டாகி, இரண்டு நான்காகி, பத்து வருட காலத்துக்குள் சுமார் இருநூறு பஸ்ஸாக மாறியதற்கு, அப்பாவின் நிர்வாகத் திறமை, தொழிலில் வைத்த சிரத்தை, அயராத உழைப்பு, நேர்மை இவையே அடிப்படைக் காரணங்களாகும்.
அப்போதெல்லாம் அப்பா 20-லிருந்து 22 மணி நேரங்கள் உழைப்பது சர்வசகஜம். தானே ஓட்டுனராக, நடத்துன ராக, முதலாளியாக இருந்த அந்த ஆரம்ப காலத்தில், இந்தத் தொழிலை எப்படித் தனித்தன்மை உள்ளதாக
மாற்றலாம் என்று ஓயாமல் சிந்தித்த அப்பா, வேலையில் சிரத்தை, சுத்தம், நேரம் தவறாமை ஆகியவை அத்தியாவசியமானவை என்பதை உணர்ந்து, அவற்றை முனைந்து செயலிலும் காட்டினார்.
பஸ்களின் எண்ணிக்கை கூடியதும், வேறு டிரைவர்களை அவர் வேலைக்கு எடுத்த விதமும், அவர்களுக்குப் பயிற்சி கொடுத்த விதமும் அலாதியானவை.
“வண்டியை ஓட்டும்போது கவனம் சாலையில் மட்டுமே இருக்க வேண்டும். கவனக்குறைவாக விபத்து நேர்ந்து பின்னர் தலையில் கை வைத்து உட்காருவதில் பயனில்லை. இதில் பயணிக்கும் நபர்கள் உன்னை நம்பி தங்கள் உயிர்களை ஒப்படைக்கிறார்கள்… அதை மறக்கக் கூடாது. எதிரில் ஒரு வண்டி வருவதைப் பார்த்த உடன் இங்கேயே வேகத்தைக் குறைத்துவிடு. அதோ ஒரு வளைவு தெரிகிறது, அங்கு சென்று பிரேக் போட்டுத் திருப்புவதை விட, இங்கிருந்தே வேகத்தை மட்டுப்படுத்தி, பயணிகளுக்கு எந்தக் குலுக்கலும் இல்லாமல் திருப்புவதுதான் நல்லது இப்படி வேகமாய் ஓட்டி, நினைத்தபோது பிரேக்
போடுவது பஸ்களுக்கும் நல்லதல்ல. இங்கிருந்து பல்லடம் வரை ஓட்டும் உனக்கு வழியில் உள்ள அத்தனை குண்டு, குழி, திருப்பங்களும் மனப்பாடம் ஆகியிருக்க வேண்டும். திறமையான ஓட்டுநரின் தகுதிகளில் அதுவும் ஒன்று…”
இப்படி தானே சொல்லிக்கொடுத்து பயிற்சி தந்த பின், அந்த டிரைவர், கண்டக்டர், கொடுத்த வாக்கு தப்பாமல் ஒழுங்காக நடந்துகொள்கிறார்களா என்பதை அறிய, மாறுவேடம் அணிந்து அந்தந்த பஸ்களில் பயணித்து அப்பா கண்காணித்ததுண்டு.
ஒரு சமயம் தன் நண்பர் ஒருவரை மாறுவேடப் பரிசோதனையின்போது உடன்வரச் சொல்லி, வேண்டு மென்றே கண்டக்டரிடம் வம்புக்குச் செல்ல வைத்தார். அந்த
நிலையிலும் நிதானம் தவறாமல் கண்டக்டர் பொறுப்புடன் நடந்துகொள்ள, அன்றைக்கு அந்தக் கண்டக்ட ருக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது.
காலை ஒன்பது மணிக்கு வேலைகளை அப்பா துவக்கினால் இரவு ஒரு மணிக்கும் மேலேயே அலுவலகத்தில் அமர்ந்து வேலைகளைப் பார்த்ததுண்டு.
ஒழுங்கீனம், அசிரத்தை, நேரம் தவறுதல் என்பதெல்லாம் அப்பாவுக்குப் பிடிக்காத குணங்கள்.
அலுவலகத்தில் வேலைபார்த்த கிளார்க்குகள் தங்கள் மேஜைகளை அலங்கோலமாக வைத்திருந்ததை மாற்ற, ஒரு நாள் அப்பா இரவு நேரத்தில் அவர்கள் அறைக்குச் சென்று தானே அத்தனையும் சீர்செய்து வைத்துவிட்டு, “இப்படியே தினமும் என்னை வேலை வாங்கப் போகிறீர்களா? அல்லது நீங்களாகவே ஒழுங்காக வைத்துக் கொள்கிறீர்களா?” என்கிற குறிப்பையும் எழுதி வைத்துவிட, மறுநாளிலிருந்து அங்கு நிலவிய ஒழுங்கைப்பற்றி சந்தேகம் வேண்டுமா என்ன?
வெளிநாடுகளுக்குச் சென்று லண்டன் பஸ்கள் திறமையாக இயங்குவதையும், அமெரிக்காவில் க்ரேஹவுண்ட் (Grey Hound) என்கிற பஸ் நிர்வாகம் மிகச் சிறப்பாகக் காணப்படுவதையும் நன்கு கவனித்துவிட்டு வந்து, அங்கு கற்றதை, இங்கு தன் பஸ் கம்பெனியிலும் புகுத்தியது, தொழிலை இன்னும் சிறப்பாக இயங்க வைத்தது.
ஒவ்வொரு பஸ்ஸுக்கும் நேரத்தைக் குறிப்பிட்டு அதன்படி நிமிடம் தவறாமல் பஸ்கள் ஓட முற்பட, மக்கள் நடுவில் அப்பாவின் கம்பெனி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்தக் காலத்தில் பஸ்ஸுக்கு வெளியில் ஒரு பையன் நின்றுகொண்டு போகவேண்டிய ஊரின் பெயரைக் குறிப்பிட்டு கத்தி பயணிகளை அழைப்பான். ஏறி அமரும் பயணிகளும் எப்போது பஸ் புறப்படும் என்பது புரியாமல்
இருப்பர். இந்த நிலையை மாற்றியவர் அப்பாதான். காலை எட்டு மணிக்குப் பொள்ளாச்சிக்கு பஸ் புறப்படும் என்றால், சரியாக எட்டு மணிக்குப் புறப்பட்டுவிடும். பஸ் நிரம்பாவிட்டாலும் குறித்த நேரத்தில் புறப்பட்டுவிடும் என்பதால், மக்கள் அப்பாவின் கம்பெனி பஸ்களில் பயணிப்பதையே பெரிதும் விரும்பினார்கள்.
டைமிங் மெஷின், டிக்கெட்டிங் மெஷின் என்று ஒவ்வொன்றுக்கும் இயந்திரங்களை முதன்முதலாகப் புகுத்தி, மோட்டார் பஸ் நிர்வாகத்தில் அப்பா ஒரு புரட்சியே செய்தார் என்று தைரியமாகக் கூறலாம்.
நேரப்படி எல்லாம் கறாராய் இயங்கவேண்டும் என்பதற்காக வெள்ளைக்காரர்களைத் தன் பஸ் கம்பெனிக்கு அப்பா மானேஜர், காஷியர்களாக நியமித்தார்.
அப்பா செய்த மற்றுமொரு புதுமை, பஸ் ஓடும் பாதைகளுக்குத் தனித்தனி சார்ட், அட்டவணை தயாரித்து, எந்தப் பாதையில் எந்தக் கோவில், புனித ஸ்தலம் இருக் கிறது, அவற்றில் எந்தெந்த தினங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன போன்றவற்றைக் குறித்தது தான், அதன்படி ஒரு கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா என்றால், முன்னேற்பாடாக முதல் நாளும் அன்றும் குறிப்பிட்ட அந்த ரூட்டில், உபரி பஸ்களை ஓடவிட்டதில், மக்களிடையே செல்வாக்குப் பெருகி, அதே சமயத்தில் கம்பெனியின் வருமானமும் கிடுகிடுவென்று ஏறியது! சாக்கு மூட்டைகளில் வசூலான கண்டக்டர்கள் கொண்டுவந்து பஸ் அலுவலகத்தில் பணத்தை கொட்டுவார்கள் என்றால், அன்றைக்கு யு.எம்.எஸ்.ஸு-க்கு இருந்த பிராபல்யம் புரியும் அல்லவா?
அப்பாவின் உத்திகளை மற்ற பஸ் கம்பெனிகளும் பின்பற்றத் துவங்கினாலும், அவரது நேரடி கவனிப்பு,
உழைப்பு தந்த பலன்களை, அவர்களால் பெற முடியவில்லை என்பது உண்மை.
பஸ் ஓடும் நேரம், அதன் சீரான கண்டிஷன் இவைகளை அடுத்து அப்பா முக்கியமாகக் கருதியது, பஸ்களின் சுத்தத்தைத்தான். அன்றாடம் பஸ்களைத் தண்ணீர் விட்டுக் கழுவ வைப்பார்; தோல் இருக்கைகளை ஈரத் துணி கொண்டு துடைக்கச் செய்வார். பயணத்துக்கு இடையில் ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் நான்கு பையன்கள் தயாராக நின்று பஸ் வந்து நின்றதும் ஓடி வந்து செம்மண் சாலைகளில் வந்ததால் புழுதிப் போர்வை போர்த்தியுள்ள பஸ் உடம்புகளைச் சுத்தம் செய்வது எவரும் கண்ட காட்சி!
சாதாரணமாக தினசரிகளில் அந்த நாளில் முதல்முறையாய் விளம்பரம் செய்ய முற்பட்டது அப்பாவின் பஸ் கம்பெனி தான்.
பஸ் நிலையங்களில் மொஸைக் தரை, க்ளேஸ்ட் டைல்ஸ்கள் பதிக்கப்பட்ட ஃப்ளஷ் அவுட் என்று அந்தக் காலத்திலேயே மிக தடபுடல்படுத்தியிருக்கிறார்.
1929-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு வந்த குன்ஸ் தம்பதி கோவைக்கு வந்தபோது உடல் நலம் குன்றிப்போக, ஹோட்டல்களில் தங்கப் பிடிக்காமல் அப்பாவின் பஸ் நிலையத்தின் சுத்தத்தைப்பற்றிக் கேள்விப் பட்டு அங்கேயே தங்கினார்கள். அவர்களின் வரவு அறிந்து அப்பா குன்ஸ் தம்பதியைச் சந்தித்தபோது, அத்தனை உயர்வாக ஒரு பஸ் கம்பெனியை நடத்துவதற்காக அப்பா வைப் பாராட்டின குன்ஸ், அவசியம் அவர் ஜெர்மனிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அப்பா வெளி நாடுகளுக்குச் செல்ல ஆசையைத் தூண்டி பிள்ளையார் சுழி போட்ட பெருமை குன்ஸ் அவர்களின் அழைப்புக்குத்தான் உண்டு.
1933-ல் ஆண்டு துவக்கத்தில் பஸ் கம்பெனிகள் நடுவில் தோன்றிய போட்டாபோட்டி காரணமாய் பல சிறு கம்பெனிகள் நசித்துப்போக, இதை விரும்பாத அப்பா அனைத்துக் கம்பெனி நிர்வாகிகளையும் அழைத்து ஒரு மாநாடு நடத்தினார். எல்லா கம்பெனிகளும் இணைந்து விடுவது என்றும், அவரவர் போடும் பங்குக்கு ஏற்ப லாப விகிதாச்சாரம் இருக்கும் என்றும் அப்பா கூறிய கருத்தை அனைவரும் ஏற்க, ‘யுனைடட் மோட்டார் சர்வீஸ்’ யூ.எம்.எஸ். கம்பெனி உருவாயிற்று.
இருநூற்று எண்பது பஸ்களுக்கும் மேலேயே எண்ணிக் கையில் கொண்ட இந்த நிறுவனம், இந்தியாவிலேயே மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக விளங்கியது. யூ.எம்.எஸ். கம்பெனியின் பல்லடம் பஸ் நிலையம், அளவில் இந்தியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையம் என்று போற்றப்பட்டது. வசதிகளிலும் அனைத்து மாதாமாதம் பஸ்களில் எத்தனை பயணிகள் பயணித்தார்கள், நடுவில் எத்தனை பஸ்கள் கோளாறில் நின்றன, எத்தனை விபத்துகள் நடந்தன என்பது போன்ற புள்ளி விவரங்களை அப்பா வெளியிடுவார். விபத்து ஏதும் நடக்காமல், ரிப்பேர் ஆகாமல் பேருந்துகள் ஓடியதால் மிகப் பெருமையுடன் அவரால் தன் கம்பெனியின் சாதனைகளை வெளியிட முடிந்தது.
இது தவிர, ‘நீங்கள் வெள்ளை வேட்டி அணிந்து எங்கள் பஸ்ஸில் பயணித்தால், அதே வெண்மையுடன் நீங்கள் இறங்குவதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்,’ என்றும் பஸ்களின் சுத்தத்தைக் குறிக்க அப்பா விளம்பரப் படுத்தியதுண்டு.
பஸ்கள் மட்டுமல்லாமல் பஸ் நிலையங்களுக்கும் இதே கவனத்தை அப்பா தந்தது குறிப்பிடப்பட வேண்டிய சமாச்சாரம்.
யூ.எம்.எஸ். நிலையங்களும் பேருந்துகளும் எப்போதும் முதன்மையிலேயே இருந்தன.
அப்பாவின் நேரடி நிர்வாகத்தில் இருந்த யூ.எம்.எஸ். கம்பெனி பஸ்கள், அப்போது ஒரு நாளைக்கு சுமார் 15000 மைல்கள் ஓடின. அவற்றில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் பயணித்தார்கள். அந்தக் கம்பெனியில் பணியாற்றிய தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரத் துக்கும் மேலேயே.
தொழிலாளர்களை அப்பா மிகுந்த கண்டிப்போடு தான் நடத்தினார். வேலையில் துளி கவனக்குறைவாக ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், உடனடியாய் அவருக்கு அபராதம் போட்டு தண்டனை அளிக்கப்பட்டது. தொழிலாளிக்கு நேரம், உழைப்பின் அருமை புரிய தினமும் யார் தாமதமாக வருகிறார்கள் என்கிற அட்டவணை தயாரிக்கப்பட்டது. ரிஜிஸ்தர் வைத்துக் கையெழுத்து போடவைத்ததில், நாளடைவில் தொழிலாளிகளுக்கும் நேரம் தவறாமல் தாங்கள் வரவேண்டிய அவசியமும் அவசியமின்றி விடுப்பு எடுக்கக் கூடாது என்பதும் புரிந்துபோயிற்று. பின்னர் உடம்புக்கு முடியாவிட்டாலும் வேலைக்குத் தொழிலாளிகள் வருகிறார்கள் என்பதை அறிந்த அப்பா, ‘யாராவது உடல்நலம் குறைவாக இருக்கும்போது விடுப்பு எடுக்காமல் வேலைக்கு வந்தால் பத்து ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்’ என்கிற விதியைக் கொண்டுவந்தார் என்றால், தொழிலாளர்களிடையே காணப்பட்ட வேலை ஆர்வம் நமக்குப் புரியும்.
ஒரு சமயம் உதவி மானேஜர் ஒருவர் தன் அறையில் உள்ள விளக்கு, மின்விசிறிகளை அணைக்காமல் சென்று விட, இதை அப்பா கவனித்துவிட்டார். வண்டியை அனுப்பி இரவு அந்த உதவி மானேஜரை அழைத்துவரச் சொன்னவர், அவரை விட்டே ஸ்விட்சுகளை அணைக்க வைத்தார். பின், அவரை நடந்து வீட்டுக்குப் போகச் சொன்னார்.
“இந்த ஸ்விட்சுகளை நானே அணைத்திருக்கலாம். வண்டி அனுப்பி சொன்னால்தான் இப்படி ஆனாலும் வரவழைத்து அணைக்கச் செய்த தவறு உங்கள் மனசில் பதிந்து உங்களை நீங்கள்
, இனியொருதரம் கவனக்குறைவாக நடக்காமல் இருப்பீர்கள். யார் செய்யும் தவறுக்கும் தண்டனை அனுபவிப்பதே நியாயம்… அதுதான் நடந்து போகச் சொல்கிறேன். ‘தொழிலாளர்கள் தவறு செய்தால்தான் தண்டனை, உயர் அதிகாரிகளுக்கு இல்லை’ என்று யாரும் நினைத்துவிடக் கூடாது அல்லவா?”
அப்பாவின் கண்டிப்பான நிர்வாகத்துக்கு இதைவிட சாட்சி வேறு ஏதேனும் தேவையா என்ன?
அப்பாவின் கண்டிப்பைப்பற்றி எழுதும்போது அது குறித்து எழுந்துள்ள கண்டனங்களைப்பற்றிப் பேசாமல் இருப்பது முறையாகாது.
அவரைக் கொடுமைக்காரர், தொழிலாளர்களுக்கு நிறைய சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியவர், அதீத தண்டனை கொடுப்பவர் என்றெல்லாம் சிலர் புகார் பேசியதுண்டுதான்.
அப்பாவின் அலுவலகத்திலும் தொழிற்சாலைகளின் பல இடங்களிலும் செருப்பு ஒன்றைத் தொங்க விட்டது குறித்து மனம் நொந்து என்னிடமே பேசியவர்களும் இருக்கிறார்கள்.
செருப்பை அப்பா ஆங்காங்கு தொங்கவிட்டாரே தவிரவும், எனக்குத் தெரிந்து யாரையும் அதனால் அடித்தது கிடையாது. செருப்படி வாங்குவது மிகக் கேவலம் என்று கருதப்பட்டதால், படிக்காத தொழிலாளிகளிடையே ஒரு பயத்தை, கண்டிப்பைக் கொண்டுவர அப்பா அப்படி மாட்டி வைத்திருந்தாரோ? என்றாலும், இந்த மாதிரி தண்டனை மிரட்டல்கள் தற்காலத்தில் ஏற்கக்கூடியவை அல்ல என்பதை யாரும் மறுக்க முடியாது.
தொழிலாளிகளுக்குச் சம்பளமாக அப்பா அள்ளித் தராவிட்டாலும், முக்கால்வாசி பேர்களுக்கு அவர் வீடு கட்டித் தந்திருக்கிறார். தொழிலாளியின் இல்லத்து நல்லது, கெட்டது அத்தனையும் அப்பாதான் முன் நின்று செலவழிப்பார். படிப்பும் பொறுப்பும் இல்லாத ஜனங்களிடம், பணத்தைத் தருவது அபாயம். அது அவர்களைத் தீய வழிக்குச் செல்லத் தூண்டி, குடும்பங்களை நிர்க்கதியாக்கிவிடும் என்பது அப்பாவின் நம்பிக்கை. அதனால் பணமாகத் தராமல் பொருட்களாக, அவர்களுக்கு நியாயமாகச் சேரவேண்டிய சம்பாத்தியத்துக்கும் மேலேயே அப்பா தந்திருக்கிறார்.
பஸ் கம்பெனியில் லாபம் வந்த பல சமயங்களில் தொழிலாளிகள் கேட்காமலேயே அத்தனையும் அப்பா அவர்களுக்கே போனஸாகப் பிரித்துத் தந்திருக்கிறார்.
நடுவில் ஒருதரம் பஸ் டிரைவர்கள் சிலரை அழைத்து சில பஸ்களை அவர்களுக்கு இலவசமாகத் தந்து, அவர் களைச் சொந்தக்காரர்களாக்கியிருக்கிறார்.
கடைசியில் யூ.எம்.எஸ். பஸ்களில் பெரும்பகுதியை விற்ற சமயத்திலும், நான்கு உதவியாளர்களைத் தமிழ்நாடு கேரளா என்று அனுப்பி தன்னிடம் முன்பு வேலை பார்த்த தொழிலாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களின் தொகைகளை அப்பா பைசல் பண்ணிய விவரம் பலர் அறிந்த உண்மை.
ஆனால், அவர் கண்டிப்புபற்றி முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆயிரம் சொன்னாலும் அப்பா அந்த நாளைய மனிதர். அப்போது காணப்பட்ட சமூகச் சூழ்நிலை, முதலாளி தொழிலாளி பிணைப்பு, மரியாதை, கண்டிப்பு எல்லாமே, இப்போது இருப்பதிலிருந்து மிகவும் மாறுபட்டே இருந்தது. இந்த மாறுபாடு சிலருக்கு முரண்பாடாகவும் தோன்றலாம் என்பதால், இந்த விஷயத்தைச் சர்ச்சை ஆக்க விரும்பாமல் இதோடு விடலாம்.

சிவசங்கரி /அப்பா – விருட்சம் நாளிதழ்

One Comment on “சிவசங்கரி / அப்பா”

Comments are closed.