
5
ஆதி நாளையிலிருந்தே புதுசுபுதுசாய் பரிசோதனைகள் செய்துபார்ப்பதில் அப்பாவுக்கு ஏக விருப்பம்; என் தலை தொடங்கி, மின்சார மோட்டார்கள், இயந்திரங்கள், பப்பாளிச் செடி வரை எல்லாம் அவரின் பரிசோதனைக்கு உள்ளாகி, வெற்றியும் பெற்றிருக்கின்றன.
‘உன் தலையா?’ என்று வியக்காதீர்கள்! நானே நடந்ததை விளக்கிவிடுகிறேன்.
அப்பா முதல்முறை அமெரிக்காவுக்குச் சென்றிருந்த போது அங்கு ‘பிலீவ் இட் ஆர் நாட்’ – ‘நம்பினால் நம்புங் கள் இல்லாவிட்டால் விடுங்கள்’ என்கிற கண்காட்சியைப் பார்த்திருக்கிறார். அதில் காட்சியாளர் செய்து காட்டிய பல வித்தைகளில் முக்கியமாய் ஒன்று அப்பாவை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
அது என்னவென்றால், காட்சி நடத்தியவர் நாற்காலியில் நம்மை நோக்கி அமர்ந்திருப்பார். ஒரு நிமிடம் ஆடாமல் அசையாமல் இருப்பவர் ‘டபக்’கென்று தலையை ஒரேயடியாய் 180 டிகிரி திருப்ப, அவருடைய பின்மண்டை, நம்மைப் பார்த்துச் சிரிக்கும். [இந்த வித்தையை நான்கூட பிற்பாடு அங்கு சென்றபோது பார்த்திருக்கிறேன்.
உட்கார்ந்த நிலையில் தலை மட்டும் நேர் பின்புறமாகத் திரும்புவதா? இது எப்படி சாத்தியமாகிறது?
தொடர்ந்து நான்கைந்து முறை சென்று அதில் ஏதேனும் ஏமாற்றல், பித்தலாட்டம் இருக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணைய் விட்டுக்கொண்டு பார்த்தும் எதுவும் புரியாதுபோக, அப்பாவின் பரிசோதனை ஆர்வம் மணி அடிக்கத் துவங்கிவிட்டது. அடுத்து வந்த இரண்டு நாட்களில் அந்த வித்தைக்காரனிடம் தனக்கு அந்த ரகசியத்தைக் கற்றுத்தரும்படி கேட்டிருக்கிறார். கெஞ் சக்கூட செய்திருக்கிறார். ம்ஹும், பலன் இல்லை. அப்பாவா விடுவார்? சரியான பிடிவாதக்காரர் ஆயிற்றே! விடாக்கொண்டராக அங்கேயே தங்கி, வளைய வந்து, வித்தைக்காரருக்குப் பகல், இரவு விருந்தளித்து தாஜா செய்ய… வித்தையைக் கற்றுக்கொள்ள அப்பா காட்டிய ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்துபோன வித்தைக்காரர், நான்காம் நாள் வழிமுறையைக் கூறிவிட்டார்.
அவர்கள் பரம்பரைபரம்பரையாய் வித்தை காட்டுபவர்களாம். குழந்தை பிறந்த கொஞ்ச நாளிலிருந்தே கை, கால்களை மடக்கி மெதுமெதுவாக வித்தைகளைப் பழக்கிவிடுவார்களாம். ரொம்ப இளசாக இருக்கையில் துளித்துளியாகப் பழக்க ஆரம்பித்தால், தானாக நாளடைவில் வித்தை கைகூடிவிடுமாம். ஒவ்வொரு நாளும் வலி இல்லாமல் கொஞ்சம்கொஞ்சமாய் நினைவு தெரியும் முன்னரே தலையைத் திருப்பித்திருப்பிப் பழகியதில், பத்து வயதுக்குள்ளாகவே அவருக்கு தலையைச் சுத்தமாய் பின்பக்கம் திருப்ப வந்துவிட்டதாம்.
வித்தைக்காரரின் கூற்றும், முன்பு அப்பா சந்தித்திருந்த மணலில் தலையை புதைத்துக்கொள்ளும், மார்பு மேல் யானையை ஏறி நிற்கவைத்த யோகியின் வார்த்தைகளும் ஏறத்தாழ ஒன்றாக இருக்க, எல்லாவற்றுக்கும் அடிப்படை யில் இந்தியாவின் ஆதிநாளைய பொக்கிஷமான யோகா பயிற்சிகளே காரணங்கள் என்கிற முடிவுக்கு அப்பா வந்தார். எண்ணியவர், தாய்நாட்டுக்குத் திரும்பியதும், ஒரு அதை எப்படியாவது தானும் பரிட்சித்துப் பார்க்க காலைப் பொழுதில் என்னைத் தனியாக அவர் அறைக்கு அழைத்தார். அப்போது எனக்கு ஆறு வயது இருக்கலாம்.
“கோபால்… இனி தினமும் நீயும் நானும் தனியாக இருக்கும்போது உன் தலையில் குறிப்பிட்ட இடத்தில் நான் குட்டுவேன்… வலிக்கும்படி குட்ட மாட்டேன், மீறி வலித்ததென்றால் சொல். உடனே நிறுத்திவிடுகிறேன். நாளடைவில் உனக்கு வலியே தெரியாது. ஒரு சில வருடங்கள் கழித்து மண்டையால் இடித்து செங்கல், பலகைகளை உடைப்பதுகூட சாத்தியமாகும்!”
அப்பா இப்படிக் கூறினதும் இரண்டு காரணங்களால் எனக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. முதலாவது- அப்பாவுக்கு அவர் செய்துபார்க்கப்போகும் பரிசோதனையில் நான் உதவப்போகிறேன்; இரண்டாவது- பெரிய வனானதும் தலையால் முட்டி சுவர்களை, பலகைகளை உடைக்கலாம் பெரிய பயில்வான் மாதிரி!
சந்தோஷத்தோடு நான் சம்மதிக்க, அன்றே ‘குட்டும் பரிசோதனை ஆரம்பமாயிற்று. அப்பா சொன்னதுபோல மெள்ளத்தான் குட்டினார். ஐந்தாறு முறைகள் ஆனதும் இன்றைக்கு இத்தனை போதும் என்று அனுப்பிவிடுவார். நாட்கள் செல்லச்செல்ல, குறிப்பிட்ட இடத்தில் கொஞ்சம் அழுத்தமாகக் குட்ட முற்பட்டார். என்றாவது அழுத்தம் அதிகமாகி நான் வலிக்கிறது என்றால், உடனே நிறுத்தி விடுவதோடு, அன்று எனக்கு ஏதாவது விசேஷமாய் பரிசும் (தன்னோடு காரில் அழைத்துப் போவது, குளிப்பது போன்று) கொடுப்பார்.
இப்படிப் பல விதங்களிலும் பல பரிசோதனைகள் நடத்தும் சுபாவத்தின் காரணமாய்த்தான் நூற்றுக்கும் மேற்பட்ட புது விஷயங்களைக் கண்டுபிடிப்பது அப்பாவுக்குக் கைவந்திருக்கிறது.
அப்பாவின் கண்டுபிடிப்புகளில் முதன்மையானதாக நான் நினைப்பது ரேஸண்ட் எலக்ட்ரிக் ரேஸரைத்தான். உலகத்தில் முதலாவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மின்சார ஷேவர் இதுதான் என்பது பல நிபுணர்களின் கருத்து.
இந்த ரேஸண்ட் ரேஸரை அப்பா கண்டுபிடித்த கதை சுவாரஸ்யமானது. முதல்முறை வெளிநாடுகளுக்குச் சென்றபோது, பிரஸில்ஸ் நகரில் பையில் பணம் இல்லாத காரணத்தால், அப்பா ஒரு உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். (அந்தச் சமயத்தில் இங்கு கோவையில் 200க்கும் மேற்பட்ட பஸ்களின் உரிமையாளராக அவர் இருந்தார் என்பதையும், லட்சக்கணக்கில் வருமானம் உள்ளவராக இருந்தார் என்பதையும், ஒருதரம் நினைத்துப்பார்த்தால், அந்தப் பணமோ, செல்வாக்கோ தன் புத்தியில் படரவிடாமல், ஒரு தொழிலாளியாக இருப்பதிலும், எளிமையாக வாழ்வதி லும் அவர் எத்தனை அக்கறை காட்டினார் என்பது புரியும். ஒருநாள் கத்தி கொண்டு ரொட்டி ஒன்றை அறுத்துத் துண்டங்களாக்கின நிமிடத்தில், கத்தியை முன்னும் பின்னுமாக நகர்த்தி துண்டுகளை வெட்டுவது அவர் கவனத்தில் பதிந்து, யோசிக்க வைத்தது. ஏன் நேராக வெட்டாமல் சுழற்றிசுழற்றி நறுக்குகிறோம்! நேராக நறுக்கினால் என்ன ஆகும்? செய்து பார்த்தார். ம்ஹும், துண்டங்கள் சுத்தமாக வரவில்லை. அப்படியென்றால் நேராக வெட்டுவதைவிட முன்பின்னாக சுழற்றி வெட்டினால் விளைவு வழவழப்பாக இருக்குமோ? இதையே ஷேவ் செய்வதிலும் முயன்று பார்த்தால் என்ன?
துருதுருப்பு அதிகமாக, அன்று வேலையிலிருந்து திரும்பி யதும் தன் அறையிலேயே பரிசோதனையில் அப்பா ஈடுபட்டார். விளையாட்டுக் கார் ஒன்றை வாங்கி அதி லிருந்த மோட்டாரை வெளியில் எடுத்தார். பிளாஸ்டிக் தண்டு ஒன்றுடன் பிளேடு, மோட்டார்களை ரப்பர்பாண்டு களின் உதவியுடன் கவனமாய்ப் பொருத்தி, தேவையான எடையைக் கூட்டி, ‘அவுட் ஆஃப் பாலன்ஸை’ உண்டாக்கி, லேசான அதிர்வுகளுடன் மோட்டாரை ஓட்டினபின், அந்த பிளேடால் முகத்தில் சவரம் செய்து பார்த்தார். பலன் திருப்தியாக இருந்தது. எடைகளைக் கூட்டி, குறைப்பதன் மூலம் அதிர்ச்சிகளை அதிகமாக்கினால் ஷேவ் இன்னும் சுத்தமாக இருக்கும் என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிய, தினம் வேலையிலிருந்து திரும்பியதும் பரிசோதனையைத் தொடர்ந்தார். தெரிந்த நண்பரின் தொழிற்சாலைக்குச் சென்று இரவெல்லாம் உழைத்து மேன்மேலும் செம்மையாக்கினார்.
ரேஸருக்குத் தேவையான மின்சார மோட்டாரை ஜெர்மனியிலிருந்தும், கைப்பிடியை ஸ்விட்சர்லாந்தி லிருந்தும், பிளேடுக்குத் தகுந்த உயர்ந்த ரக இரும்பை ஸ்வீடனிலிருந்தும் வரவழைத்து, கடைசியில் தான் விரும்பிய விதத்தில் ரேஸண்ட் எலெக்ட்ரிக் ரேஸரைத் தயாரித்ததும், தனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களிடம் அந்த ரேஸரைக் கொடுத்து உபயோகித்துப் பார்க்கச் சொன்னார்.
உபயோகித்தவர்கள் எல்லோரிடமிருந்தும் ஒருமனதான பாராட்டு! ‘இந்த மாதிரி ‘ஷேவ்’ இதுவரை அனுபவித்ததில்லை, தயவு செய்து இதைப் பெரிய அளவில் உற்பத்தி செய்து
மார்க்கெட்டுக்குக் கொண்டுவாருங்கள். உலக அளவில் விளம்பரம் செய்து பிரபலப்படுத்துங்கள்’ என்று ஒருவர் விடாமல் கூறினார்கள்.
லண்டனில் இதை வெள்ளோட்டமாக அப்பா விற்பனை செய்து பார்த்தார். ஒரே மாதத்தில் 7500க்கும் மேற்பட்ட ரேஸர்கள் விற்பனையாக, தொடர்ந்து அமெரிக்கா சென்றபோதும் இதே வரவேற்பு!
1936-ம் ஆண்டு அமெரிக்கப் பத்திரிகைகளில் ‘ரேஸண்ட் எலக்ட்ரிக் ரேஸர். இதுவரை நீங்கள் காணாத புதுமை! ஒரு ரேஸரின் விலை 25 டாலர்கள். ஆனால் அறிமுக விலையாக 15 டாலர்களுக்குக் கொடுக்கப்படும், முந்துங்கள்’ என்று செய்யப்பட்ட விளம்பரங்கள், அப்பாவால் கொடுக்கப்பட்டனவா அல்லது அங்கு அதை விற்க ஆசைப்பட்ட கம்பெனிகளால் வெளியிடப்பட்டனவா என்று தெரியவில்லை!
ரேஸருக்கு எந்த அளவு அமெரிக்காவில் வரவேற்பு இருந்ததென்றால், 3 லட்சம் டாலர் கொடுத்து ஒரு கம்பெனி அதன் உரிமைகளை அப்பாவிடமிருந்து வாங்க முயற்சிக்கும் அளவுக்கு! அமெரிக்கன் கம்பெனியின் அந்தக் கடிதமும், விளம்பரத்தின் பிரதிகளும், ரேஸர் அமெரிக்காவில் பெற்ற வரவேற்புக்குச் சாட்சியாய் இன்றும் இருக்கின்றன!
ஆனால், அப்பா யாருக்கும் பேடண்ட் உரிமையைத் தர மறுத்துவிட்டதில், அமெரிக்காவிலிருந்த பல நண்பர் களுக்கு வருத்தம்தான்.
“மன்னிக்க வேண்டும். நான் செய்யும் காரியத்தின் எந்த நல்ல விளைவுகளும் இந்தியாவையே சென்றடைய வேண்டும் என்பது என் விருப்பம். அதனால் உரிமையைத் தர இயலாது” என்று தாட்சண்யம் இல்லாமல் அப்பா
மறுத்துவிட்டார்.
சரி, அப்பா இப்படி இந்தியாவுக்குத்தான் நன்மை அத்தனையும் போய்ச்சேர வேண்டும் என்று துடித்துக் கொண்டு வந்ததற்காகவாவது கடைசியில் அர்த்தம் இருந்தது என்று நினைக்கிறீர்களா? இல்லை, இல்லவே இல்லை.
அப்போது ஆட்சியிலிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த நாட்டைச் சார்ந்த ‘செவன் ஓ க்ளாக்’, ‘கில்லட்’, பிளேடுகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்கிற எண்ணத்தில், ரேஸண்ட் மின்சார ரேஸரை இந்தியாவில் உற்பத்தி செய்ய அப்பாவுக்கு லைசன்ஸ் தர மறுத்துவிட்டது!
எத்தனையோ விதங்களில் முயற்சி பண்ணிப் பார்த்து விட்டு அப்பா மனம் நொந்துபோனார். அனுமதி வரும், வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தவர், அந்த வேதனையின் காரணமாய், எந்த அமெரிக்கன் கம்பெனி 3 லட்சம் டாலர் தருவதாகச் சொல்லி இவர் மாட்டேன் என்றாரோ அதே கம்பெனியின் உரிமையாளர் ஜே. எல். மெயில்மேனுக்கு 1947-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி, “முன்பு நீங்கள் ரேஸரின் உரிமை பெற பணம் தருவதாகச் சொன்னீர்கள், நான் மறுத்தேன். நாட்டுப்பற்று காரணமாய் “ஸர்’ பட்டத்தைக்கூட ஏற்க மறுத்த நான் இன்று வலிய உங்களுக்கு ரேஸரின் உரிமையை இலவசமாகத் தர முன்வந்திருக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் தயாரிக்கும் முதல் லட்சம் ரேஸர்களை, தென்னாட்டில் வினியோகிப்பதற்காக இலவசமாகத் தர வேண்டும்” என்று எழுதியதுதானே கடைசியில் நடந்தது!
மின்சார ஒட்டுப்பதிவு இயந்திரத்தை அப்பா கண்டு பிடித்தபோதும் கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு ஏமாற்றம்தான்.
1930-இல் அப்பாவால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இயந்திரத்தை அமெரிக்காவில் பரிட்சை பண்ணிப் பார்த்த தும், உடனடியாய் அந்த அரசாங்கத்திடமிருந்து 30000 இயந்திரங்களுக்கு ஆர்டரும் வந்தது; சரியாய் ஆறு மாசங் களுக்குள் அதை சப்ளை செய்ய வேண்டும் என்கிற நிபந்தனை யுடன்…
அப்பா அமெரிக்காவிலும், இதர நாடுகளிலும் தொழிற்பயிற்சி பெற கிட்டத்தட்ட ஒரு வருடம் போலத் தங்க வேண்டிவந்ததால் அந்த ஆர்டரை அவரால் நிறைவேற்ற இயலவில்லை. ஆனாலும் அந்த இயந்திரத் துக்கான வரைபடத்தை விடாமல் தொந்தரவு பண்ணி அமெரிக்க அரசாங்கம் அப்பாவிடமிருந்து வாங்கிக் கொள்ளவே செய்தது!
ஆரஞ்சுத் தோலில் உள்ள வைட்டமின்களைச் சரிவர யாரும் பயன்படுத்துவதில்லை என்பதை ஓர் ஆராய்ச்சி மூலம் உணர்ந்த அப்பா, ஆரஞ்சுத் தோலில் உள்ள வைட்டமின், உப்புச்சத்தைப் பூரணமாக எடுக்கும் ஜூஸ் பிழியும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்!
ஆரஞ்சுத் தோலை அதிகம் பிழிந்துவிட்டால் அதன் கசப்பும் சாறில் இறங்கிவிடும். அதனால், மிகக் கவனமாகப் பிழிந்து, சத்தையும் வைட்டமின்களையும் மட்டும் பக்குவமாகப் பிரித்தெடுக்கும் அந்த இயந்திரம் இப்போதும் கோபால்பாகில் உள்ளது.
விலை மலிவான ரேடியோ, பாட சம்பந்தமான படங் களைக் காட்டும் புரொஜக்டர், படச்சுருள்கள், டயர், ரேடியேட்டர், ரேடியோ கடிகாரங்கள் என்று ஒவ்வொரு துறையிலும் புதுசுபுதுசாய் பலவற்றைக் கண்டுபிடித்துவிட்டு, அவற்றைத் தயாரிக்க லைசன்ஸ் வேண்டி அரசாங்கத்துக்குக் கடிதம் மேல் கடிதம் அப்பா எழுதிய மனுக்களின்
நகல்கள் இன்னமும் பத்திரமாக அவர் சம்பந்தப்பட்ட கோப்புக்களில் உள்ளன!
மலிவு விலையில் வீடுகளைக் கட்டி. இந்தியாவிலுள்ள ஏழைகளில் சிலரையாவது அவரவர் வீட்டுக்குச் சொந்தக் காரர் ஆக்கிவிடவேண்டும் என்பது அப்பாவின் நீண்ட நாளைய கனவுகளில் ஒன்று.
அதற்காக அவர் செலவழித்த நேரமும் உழைப்பும் எக்கச்சக்கம்.
அன்றைய விலையில் ஒரு படுக்கையறை கொண்ட சிறிய வீட்டை ரூ. 750-இல் கோவையிலும், ரூ. 1000-இல் டெல்லியிலும், இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை ரூ. 1100-இல் கோவையிலும் ரூ. 1400-இல் டெல்லியிலும் ஒரே நாளில் கட்டித்தருவதாதச் சொல்லி, அவற்றைக் குறிப்பிட்ட இடங்களுக்கு மந்திரிப் பிரதானிகளை வரவழைத்துக் கட்டிக் காண்பித்தும் நிரூபித்தார்.
“எனக்கு அனுமதியும் நாலு வருஷ அவகாசமும் தாருங்கள்; இந்தியாவில் உள்ள வீட்டுப் பஞ்சத்தை நான் ஒழித்துக்கட்டுகிறேன்” என்று அரசாங்கத்துக்குச் சவால் விடுத்துப் பார்த்தார்; பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டார் ம்ஹும், எதற்கும் எந்த பதிலும் இல்லை. அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்காக, கிணற்றில் போட்ட கல்லாக இருந்ததே ஒழிய, பலன் கடுகத்தனை விலை கூட இல்லை.
இப்படி அப்பா கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளுக்கு வெளிநாட்டில் ஏக கிராக்கி, மதிப்பு இருந்தபோதிலும், உள்நாட்டில் மட்டும் ஏனோ அவற்றில் பல போகவே இல்லை. லைசன்ஸ் கிடைக்காமல், இந்தியாவில் தயாரிக்க முடியாமல், கருவிலேயே பல திட்டங்கள் குறைப்பிரசவமாகிப்போனதுதான் மிச்சம். எதனால் இந்தத் தடங்கல், முடக்கல் என்கிற கேள்வி அப்பாவை அறிந்த, அறியாத பலரையும் குடைந்திருக்கிறது என்பதை நான் அறிவேன்.
அப்பா பெரிய தொழிலதிபர்தான்; பல தொழில்களில் நாட்டுக்கு முன்னோடியாய் இருந்திருக்கிறார்தான்.
ஆனாலும்? அவர் கண்டுபிடிப்புகள் அத்தனையும் அவர் ஆசைப்பட்ட ரீதியிலேயே இந்தியாவில் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்குமாயின், தொழில் வளர்ச்சியில் இந்தியா எங்கோ உயரத்தில் இருந்திருக்கும் என்பதோடு, உலகத்திலேயே பலவற்றை முதன்முதலாகக் கண்டுபிடித்தவர் என்கிற பட்டம் அவருக்கு நிச்சயம் நோபல் பரிசைக்கூட வாங்கித் தந்திருக்கக்கூடும். இது அப்பாவின் திறமைகளை அறிந்த பலருடைய கருத்து.
சரி, அப்பாவின் திட்டங்களுக்கு ஏன் ஊக்கம் தரப்படவில்லை? முக்கால்வாசி கண்டுபிடிப்புகள் ஏன் கருவிலேயே சிதைந்தன? 1968 இந்தக் கேள்விக்கு யாராலும் திட்டவட்டமாய் பதில் கூற இயலாதுதான்.–
என்றாலும், காரணங்களை ஊகிக்க முயலுவதில் தவறில்லை அல்லவா?
ஆரம்ப காலத்தில் அப்பாவின் வளர்ச்சியை, இந்தியா வின் வளர்ச்சியை, விரும்பாத பிரிட்டிஷ் அரசாங்கம் லைசன்ஸ் வழங்குவதற்கு முட்டுக்கட்டை போட்டது. பிறகு, 1945-க்குப் பிறகு, வருமானவரிப் பிரிவினருடன் அப்பா முரண்படத் துவங்கியதும், இந்திய அரசாங்கத்திடமிருந்தும் அவருக்கு உரிய ஊக்கம் கிடைக்காமல்போயிற்று. இவை தவிர, வலியப்போய் எந்த உதவியும் யாரிடமும் கேட்க மாட்டேன் என்கிற அப்பாவின் பிடிவாத குணமும், கண்டுபிடிப்புகளில் காட்டிய தீவிரத்தை அதைப்
பெருமளவில் உற்பத்தி பண்ணுவதில் அப்பா செலுத்தாததும் மற்ற முக்கியக் காரணங்களாக இருந்திருக்கலாம்.
அப்பா அடிப்படையில் ஒரு இன்வென்டர், ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர். இதை நினைவில் நிறுத்திக்கொண்டால், வியாபார ரீதியில் வெற்றி பெறா விட்டாலும், ஏன் அவர் ஒரு கண்டுபிடிப்பிலிருந்து மற்றொன்று என்று மனம் தளராமல் கவனத்தைச் செலுத்தி அதில் வெற்றியும் கண்டார் என்பதை நம்மால் ஓரளவுக்காவது புரிந்துகொள்ள முடியும் அல்லவா?
